Published:Updated:

ஏ.டி.எம்மில் நிரப்பச் சென்ற 1.60 கோடி ரூபாய் திருட்டு -விபத்தில் மாயமானதாக நாடகமாடிய ஊழியர்கள் கைது

ஏ.டி.எம்மில் நிரப்பச் சென்ற 1.60 கோடி ரூபாய் திருட்டு -விபத்தில் மாயமானதாக நாடகமாடிய ஊழியர்கள் கைது
ஏ.டி.எம்மில் நிரப்பச் சென்ற 1.60 கோடி ரூபாய் திருட்டு -விபத்தில் மாயமானதாக நாடகமாடிய ஊழியர்கள் கைது

சாயல்குடி அருகே வங்கி ஏ.டி.எம்-களில் நிரப்ப எடுத்துச் சென்ற பணம் திருட்டுபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வாகனம் விபத்துக்குள்ளாகியபோது பணம் காணாமல் போனதாக நாடகம் ஆடிய ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியிலிருந்து கடலாடி பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி  ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக வேனில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது. மதுரை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்களால் பாதுகாப்பு பெட்டகத்தில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது. சாயல்குடியில் இருந்து மலட்டாறு முக்கு ரோடு அருகே நேற்று இரவு சென்று கொண்டிருந்த வேன் சாலையில் திடீர் விபத்து ஏற்பட்டு சாலை ஓரத்தில் கவிழ்ந்துள்ளது. இதையடுத்து வேனில் இருந்த பணம் நிரப்பும் ஊழியர்கள் வேனில் வைக்கப்பட்டிருந்த பணத்தை சரி பார்த்துள்ளனர். அப்போது வேனில் இருந்த பணத்தில் ரூ.ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 
இது குறித்து வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். வங்கி அதிகாரிகள் போலீஸாரிடம் புகார் செய்தனர். இதையடுத்து சாயல்குடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தகவலறிந்த ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, வாகனத்தில் வந்த பாதுகாவலர்கள், வேன் ஓட்டுநர் மற்றும் பொறுப்பாளர்களான அன்பு, கபிலன், குருபாண்டி, வீரபாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும், போலீஸார் விபத்து நடந்த பகுதி முழுவதும் பணத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனாலும் பணம் காணாமல் போனதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
 
மேலும், பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் பூட்டு திறக்கப்படாத நிலையில் சம்பவம் நடந்த நேரம் மற்றும் இடம் ஆகியன சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பணம் மாயமானது குறித்து ஊழியர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர். இதில் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் அன்பு முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பணத்தை ஊழியர்களே திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து, ஓட்டுநர் அன்பு கொடுத்த தகவலின் பேரில் ரூ.34 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. பணத்தைக் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.  ஊழியர்கள் 4 பேரையும் கைது செய்துள்ள போலீஸார் திருடப்பட்ட மற்ற பணத்தையும் மீட்க தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.