Published:Updated:

வடுகப்பட்டி கிராமத்தையே அலறவிட்ட கருப்பு - ஓட்டம் பிடிக்கும் பொதுமக்கள்

வடுகப்பட்டி கிராமத்தையே அலறவிட்ட கருப்பு - ஓட்டம் பிடிக்கும் பொதுமக்கள்
வடுகப்பட்டி கிராமத்தையே அலறவிட்ட கருப்பு - ஓட்டம் பிடிக்கும் பொதுமக்கள்

பெரியகுளம் அருகே தெருவில் நடந்து செல்லும் ஊர் பொதுமக்களை விரட்டிச் சென்று கடித்துக் காயப்படுத்தும் நபரைக் கைது செய்துள்ளனர் தென்கரை காவல்துறையினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ள வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு. இவரைக் கண்டால் வடுகபட்டி கிராமமே அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறது. அப்படி என்ன செய்வார் என்று கேட்டால் அனைவருமே அதிர்ச்சியடைவார்கள். ரோட்டில் நடந்துசெல்லும் பொதுமக்கள் மீது பாய்ந்து கடித்துக் காயப்படுத்திவிட்டு தப்பிவிடுவார். காலையில் அமைதியாக இருக்கும் இவர், மதியம் 12 மணி ஆனதும், முதல் ஆளாக டாஸ்மாக் சென்று மது குடித்துவிட்டு ரோட்டில் செல்லும் மக்கள் மீது பாய்ந்து கடிக்க ஆரம்பித்துவிடுவார். இவரைக் கண்டு ஓடினாலும் தப்ப முடியாது. விரட்டி வந்து கடிப்பதே இவரின் வாடிக்கை. இவரால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 பேர் காயமடைந்து சிகிச்சை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் வடுகபட்டி கிராம மக்கள்.

இந்நிலையில், கருப்புவின் கடியால் பொறுமை இழந்த வடுகபட்டி கிராம மக்கள், இது தொடர்பாக தென்கரை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில், தென்கரை காவல்துறை ஆய்வாளர் மதனகலா  வடுகபட்டி கிராமத்திற்குச் சென்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கருப்புவை தேடும் பணியில் ஈடுபட்டார். போலீசாரைக் கண்டவுடன் தப்ப முயன்ற கருப்புவை விரட்டிப் பிடித்தனர். கருப்புவை கைது செய்து விசாரணை செய்த போது, “தான் எந்தவித குடிப்பழக்கமும் இல்லாமல் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனித்துவந்தேன். சந்தோசமாகச் சென்ற என் வாழ்கையில், நண்பர்களால் மதுப்பழக்கம் ஏற்பட்டு தற்போது இந்த நிலையில் இருக்கிறேன். மதுகுடித்துவிட்டால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது.” என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட கருப்பு பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது தான் வடுகபட்டி மக்களை நிம்மதியடைந்துள்ளனர்.