Published:Updated:

பெண் கொலையில் 3 அப்பாவி இளைஞர்கள் கைது! - இன்ஸ்பெக்டருக்கு எதிராக சாட்டை எடுத்த நீதிபதி

பெண் கொலையில் 3 அப்பாவி இளைஞர்கள் கைது! - இன்ஸ்பெக்டருக்கு எதிராக சாட்டை எடுத்த நீதிபதி
பெண் கொலையில் 3 அப்பாவி இளைஞர்கள் கைது! - இன்ஸ்பெக்டருக்கு எதிராக சாட்டை எடுத்த நீதிபதி

பெண் கொலையில் ஆதாரமின்றி கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலும், வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடரவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வேலூரை அடுத்த பள்ளிகொண்டா கீழாச்சூரில் கடந்த 25-12-2012 அன்றிரவு பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, அப்போதைய பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் கொலை வழக்குப் பதிவு செய்தார். பெண் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி 2014-ம் ஆண்டு கீழாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (28), மதிவாணன் (24), பிரசாந்த் (22) ஆகிய மூவரை இன்ஸ்பெக்டர் கைது செய்தார். ‘பெண்ணைக் கடத்தி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், உடன்படாததால் மூன்று பேரும் சேர்ந்து அப்பெண்ணை கொன்றதாகவும்’ வாக்குமூலம் பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை, வேலூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்ட மூவர் தரப்பில், `தங்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பில்லை. பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளது’ என வாதாடினர்.

இவ்வழக்கில் நீதிபதி குணசேகரன் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். ``கொல்லப்பட்ட பெண் யார். எங்கிருந்து கடத்தி வரப்பட்டார் என்பதற்கான எந்தவித ஆவணங்களையும் பள்ளிகொண்டா போலீஸார் சமர்ப்பிக்கவில்லை. சம்பவம் நடைபெற்று ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு ஆதாரமில்லாமல் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிவித்த நீதிபதி, 3 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், ``இவ்வழக்கினால் பாதிக்கப்பட்ட மூவரும், இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மீது உரிய நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம்’’ என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். சர்ச்சையில் சிக்கியுள்ள இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தற்போது வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.