Published:Updated:

ஃபேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு; நண்பர்களுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த மகள் - திருவள்ளூரில் அதிர்ச்சி

ஃபேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு; நண்பர்களுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த மகள் - திருவள்ளூரில் அதிர்ச்சி
ஃபேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு; நண்பர்களுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த மகள் - திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் அருகே, ஃபேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை  காதலனின் நண்பர்களுடன் கத்தியால் குத்தி கொலைசெய்த மகளை போலீஸார் கைதுசெய்தனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் எட்டாவது தெருவைச் சேர்ந்தவர்  திருமுருகநாதன், தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி மற்றும் தேவி பிரியா என்ற 2 மகள்கள் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று பிற்பகல் இவரது வீட்டுக்குள் புகுந்த 2 இளைஞர்கள், கையில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பானுமதியை சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பானுமதியை மீட்டு, திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.  

அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்ததால், சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். ஆனால், பானுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீஸார், தேவிபிரியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதால், அவரிடம் தொடர் விசாரணையை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பானுமதியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியபோது அங்கே விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், ஓடிவந்து இரண்டு இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

விசாரணையில், தேவிபிரியாவும் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் ஃபேஸ்புக்கில் கடந்த இரண்டு வருடமாகக் காதலித்து வந்ததும்,  அவர் மைசூரில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. தேவிபிரியா வீட்டை விட்டு வெளியேறி காதலன் சுரேஷுடன் செல்ல முடிவுசெய்து, சுரேஷின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

நேற்று மாலை வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் அனைத்தையும்  எடுத்துக்கொண்டு தேவி பிரியா கிளம்புவதை அறிந்த அம்மா  பானுமதி, அவரை தடுத்து நிறுத்தவே, அங்கு வந்த இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்து பானுமதியை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடியது தெரியவந்தது.  இதையடுத்து, தேவி பிரியாவை கைதுசெய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதேபோல, கத்தியுடன் தப்பி ஓடிய இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தன் தாயை கொலை செய்ததைத் தவறு என்று உணராத மகள் தேவிபிரியா, போலீஸாரை தொடர்ந்து கடுமையான வார்த்தைகளால் பேசினார். ஃபேஸ்புக் காதலுக்காக பெற்றெடுத்த தாயையே கத்தியால் குத்திய  சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.