Published:Updated:

தேனியில் 4 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் பறந்த கார் -துரத்திச் சென்று பிடித்த போலீஸ்

தேனியில் 4 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் பறந்த கார் -துரத்திச் சென்று பிடித்த போலீஸ்
தேனியில் 4 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் பறந்த கார் -துரத்திச் சென்று பிடித்த போலீஸ்

துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் கேரள வாலிபர்கள் மூன்று பேர் அதிவேகமாகக் காரை இயக்கித் தப்ப முயன்ற போது போலீஸாரிடம் வசமாகச் சிக்கிக்கொண்டனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு ஒரு கும்பல் தேனி நோக்கி காரில் வருவதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கம்பத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்றை உத்தமபாளையம் சோதனைச் சாவடியில் மடக்கிப் பிடிக்க போலீஸார் முயன்றனர். ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. உடனே மாவட்ட காவல்துறை அலர்ட் செய்யப்பட்டது. தொடர்ந்து பழனி செட்டிபட்டியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் நின்றிருந்த போலீஸார், அந்தக் காரை நிறுத்த முயன்றனர். ஆனால், அங்கும் நிற்காமல் அதிவேகமாகச் சென்றதை அடுத்து, அந்த காரின் பின்னால் விரைந்த போலீஸார், தேனி புறவழிச்சாலையில் மடக்கிப் பிடித்தனர்.

காரின் உள்ளே மூன்று இளைஞர்கள் இருந்தனர். அவர்கள், கேரள மாநிலம் கொள்ளத்தைச் சேர்ந்த விஷ்ணு (வயது 24), எர்ணாகுளத்தைச் சேர்ந்த அணிஸ் (வயது 25)  மற்றும் கொச்சியை சேர்ந்த சுமேஷ் (வயது 24). அவர்கள் வந்த  காரை சோதனை செய்த போது, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் நான்கு கிலோ கஞ்சா இருந்துள்ளது.

மூவரையும் கைது செய்த காவல்துறை பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டதில், கம்பத்தில், கஞ்சா வாங்கிவிட்டு பணம் தராமல் துப்பாக்கியை காட்டி மிரட்டியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் மூவரையும் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.