Published:Updated:

டிக் டாக் செயலியில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு -தேனி இளைஞர் கைது!

டிக் டாக் செயலியில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு -தேனி இளைஞர் கைது!
டிக் டாக் செயலியில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு -தேனி இளைஞர் கைது!

பேஸ்புக், வாட்ஸப் வரிசையில் அதிகமானோர் தங்கள் மொபைல் போன்களில் பயன்படுத்தும் செயலிகளின் வரிசையில் டிக்டாக் (Tik Tok) செயலியும் முன்னிலையில் உள்ளது என்றே சொல்லலாம். சினிமா பட வசனங்கள், பாடல்கள், நகைச்சுவைகள் என இளையேர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் தங்கள் நடிப்புத்திறைமையை டிக்டாக் செயலியில் வெளிப்படுத்திவருகிறார்கள். இந்நிலையில், டிக்டாக் செயலியில் சாதி வன்முறையை தூண்டும் விதமாக பேசிய தேனி இளைஞர் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளது காவல்துறை. மற்றொரு இளைஞரை தேடிவருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, ராஜதானி அருகே உள்ள புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் அஜீத் குமார் (21). இவரும் பாலக்கோம்பையைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் வீரக்குமாரும் (29) நண்பர்கள் ஆவர். இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் இணைந்து டிக்டாக் செயலி மூலம் பல்வேறு சாதிகளைப் பற்றி அவதூறு பேசி வீடியோக்களை பரப்பி வருவதாகவும், இதன் மூலம் சாதிய வன்முறை தூண்டப்படுவதாகவும்,  ராஜதானி காவல்நிலையத்திற்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அஜீத்குமாரின் டிக்டாக் பக்கத்தினை ஆய்வு செய்தனர்.

அதில், சாதி பெயர்களை கூறி தகாத வார்த்தைகளால் பேசி, வன்முறையைத் தூண்டும் விதமாக அவர் வீடியோக்களை வெளியிட்டது தெரியவந்தது. அதனை அடுத்து அஜீத்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வீடியோக்களில் தோன்றும் மற்றொரு வாலிபரான வீரகுமார் கேரளாவில் இருப்பதால், தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.