Published:Updated:

``நான் வாழ விரும்பவில்லை’’ - மகனைக் கொன்ற தாய் கண்ணீர்மல்க வாக்குமூலம் 

``நான் வாழ விரும்பவில்லை’’ - மகனைக் கொன்ற தாய் கண்ணீர்மல்க வாக்குமூலம் 
``நான் வாழ விரும்பவில்லை’’ - மகனைக் கொன்ற தாய் கண்ணீர்மல்க வாக்குமூலம் 


`என்னை எல்லோரும் கைவிட்டுவிட்டதால்தான் என்னுடைய மகனை எரித்துக் கொலை செய்தேன். இனி நான் வாழ விரும்பவில்லை' என கைதான தாய் போலீஸாரிடம் கண்ணீர்மல்க வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  

 கிருஷ்ணகிரியைச் சேரந்தவர் சரவணன். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அதே தொழிற்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் பூந்தமல்லி, கரையான்சாவடி, ஆவடி சாலையில் குடியிருக்கும் மீனாட்சியும் வேலைபார்த்தார். சரவணனும் மீனாட்சியும் பழகினர். பிறகு, காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்தை இருவீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காதல் தம்பதி, கிருஷ்ணகிரியில் தனிக்குடித்தனம் நடத்தினர். 

 இவர்களின் மகன் ஜெயகாந்த். 6 வயதாகும் இவர், 1-ம் வகுப்பு படித்தார். இந்தச் சூழ்நிலையில் கணவன் வீட்டிலிருந்து வந்த நெருக்கடியால் மீனாட்சி கடும் மனவேதனையடைந்தார். அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணகிரியிலிருந்து தாய் வீட்டுக்கு வந்த மீனாட்சியை அங்கு யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆதரவற்ற நிலையில் மகனுடன் தவித்தார் மீனாட்சி. 

கடந்த 27-ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தாய் வீட்டுக்கு மகனுடன் மீனாட்சி வந்தார். வழக்கம்போல தாய் வீட்டில் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. வீட்டில்கூட தங்க இடம் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், வீட்டின் பின்புறத்தில் உள்ள மோட்டார் அறையில் மகனுடன் மீனாட்சி தங்கினார். 28-ம் தேதி காலை மாங்காடு கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அப்போது ஜெயகாந்த்துக்கு அவர் மொட்டை போட்டுள்ளார். அதன் பிறகு இருவரும் மோட்டார் அறைக்கு வந்துள்ளனர்.

 கையில் பணமில்லாததால் இருவரும் சாப்பிடவில்லை. பசியால் துடித்த ஜெயகாந்த் மயக்கமடைந்தார். இதனால் என்ன செய்வது என்று திகைத்த மீனாட்சி, மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளார். இதனால், தூங்கிக் கொண்டிருந்த ஜெயகாந்த் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் அலறி துடித்த அவர், உடல் கருகிப் பலியானார். அதன் பிறகு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், பயத்தின் காரணமாக அவர் மயங்கிவிட்டதால் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை.  

 இந்தச் சம்பவத்தைக் கேள்விபட்ட மீனாட்சியின் பெற்றோர் பூந்தமல்லி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது செப்டிக் டேங்க் குழியில் எரிந்த நிலையில் ஜெயகாந்த்தின் சடலம் கிடந்தது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனை எரித்துக் கொலை செய்த குற்றத்துக்காக மீனாட்சியைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 மீனாட்சியிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` காதல் திருமணம் செய்த என்னை என் வீட்டிலும் கணவர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரம்பத்தில் சந்தோஷமாகச் சென்ற என்னுடைய வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. கணவர் சரவணனுக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனக்கென்று ஆதரவாக யாருமில்லை. இதனால் சம்பவத்தன்று அம்மா வீட்டுக்கு வந்தேன். அங்கும் என்னை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால்தான் மகனைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். ஆனால், என் கண் முன்னால் மகன் தீயில் எரிந்து கருகுவதைப் பார்த்த நான் பயத்தில் மயக்கமடைந்துவிட்டேன். நான் வாழ விரும்பவில்லை. என்னை விட்டுவிடுங்கள் என்று மீனாட்சி எங்களிடம் கண்ணீர்மல்கத் தெரிவித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.