Published:Updated:

அரிவாளுடன் விரட்டிய கோவைப் பெண்; பைக்கை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிய திருடர்கள்...!

குருபிரசாத்
அரிவாளுடன் விரட்டிய கோவைப் பெண்; பைக்கை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிய திருடர்கள்...!
அரிவாளுடன் விரட்டிய கோவைப் பெண்; பைக்கை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிய திருடர்கள்...!

கோவையில் திருடர்களை அரிவாளுடன் விரட்டிய பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீனிவாச பிரபு. இவரும் இவரது மனைவி கவிதாவும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் சொந்த ஊரான தாராபுரம் தளவாய்பட்டினம் சென்றுள்ளனர். இதனிடையே, வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட திருடர்கள் இருவர் இன்று அதிகாலை 1 மணியளவில் டூவிலரில் வந்துள்ளனர். தொடர்ந்து வீட்டின் முன்பக்கக் கதவின் தாழ்பாளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். இதையடுத்து, ஸ்ரீனிவாச பிரபு வீட்டின் அருகில் வசிக்கும் மலர்விழி என்பவர், இரவில் நாய் சத்தம் போடுவதால் யானைகள் வந்திருக்குமோ என்ற பயத்தில் தனது வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவைப் பார்த்துள்ளார்.

அதில் ஸ்ரீனிவாச பிரபு வீட்டின் ஜன்னலைத் தட்டிவிட்டு ஒருவர் செல்வதைப் பார்த்த அவருக்குச் சந்தேகம் வரவே, உடனடியாக கவிதாவுக்கு செல்போனில் அழைத்துக் கேட்டுள்ளார். அவர்கள் வீட்டில் இல்லை என்றும், என்னவென்று பார்க்க சொன்னதைத் தொடர்ந்து மலர்விழி, அவரது கணவர் மற்றும் அருகிலுள்ள ஹரிஸ் என்பவரையும் அழைத்துக்கொண்டு அரிவாள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு ஸ்ரீனிவாச பிரபு வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு உள்ளே சத்தம் கேட்கவே, இவர்கள் திருடன் திருடன் என்று சத்தம்போட்டுள்ளனர். அப்போது வீட்டினுள் இருந்து 2 பேர் திபு திபு என வெளியே ஓடிவந்து, கம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஓடியுள்ளனர். உடனே இவர்களும் அவர்களைத் துரத்த, அதற்குள் திருடர்கள் அங்கிருந்து சோளக்காடு வழியாகத் தப்பிவிட்டனர். இதைத்தொடர்ந்து, தடாகம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகளை அவர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. அவை சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் ஆகும்.

மேலும் திருடர்கள் நிறுத்தி வைத்திருந்த டூவிலரை சோதனை செய்தபோது டூவிலரில் ஒரு பையில் நகைகள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதை போலீஸார் எடுத்துக்கொண்டு ஸ்ரீனிவாச பிரபு கொடுத்த புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களைத் தைரியமாக விரட்டிய மலர்விழிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.