Published:Updated:

 மகனைக் கொலை செய்தவனை கொன்ற தாய் - 5 மாத சபதத்தை ஜாமீனில் வந்து நிறைவேற்றம் 

எஸ்.மகேஷ்
 மகனைக் கொலை செய்தவனை கொன்ற தாய் -  5 மாத சபதத்தை ஜாமீனில் வந்து நிறைவேற்றம் 
 மகனைக் கொலை செய்தவனை கொன்ற தாய் - 5 மாத சபதத்தை ஜாமீனில் வந்து நிறைவேற்றம் 


 
திருவண்ணாமலையில் கடந்த 29-ம் தேதி நடந்த நாகராஜ் கொலையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்துள்ளனர். 

 திருவண்ணாமலையில் உள்ள செல்போன் கடையில் வேலைபார்த்த நாகராஜ் என்பவர் சில நாள்களுக்கு முன் (டிசம்பர் 29) கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாகத் திருவண்ணாமலை டவுன் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகேயன், இவரின் மனைவி மஞ்சுளா. இவர்களின் மகன் ரித்தேஷ் சாய் (10).  சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மஞ்சுளா வேலைபார்த்தார். மஞ்சுளா குடும்பத்தினருடன் நாகராஜ் என்பவர் குடும்ப நண்பர்போல பழகி வந்துள்ளார். 

நாகராஜும் மஞ்சுளாவும் நெருங்கிப் பழகினர். அதைக் கார்த்திகேயன் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், ரித்தேஷ் சாயை கடத்திச் சென்று சேலையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் நாகராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 9 மாதங்களாகச் சிறையில் இருந்த நாகராஜ் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், அவர் திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு செல்போன் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் நாகராஜ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் நாகராஜை, சிறுவன் ரித்தேஷ் சாயின் தந்தை கார்த்திகேயனோ அல்லது தாய் மஞ்சுளாவோ அல்லது உறவினர்களோதான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தோம். அதுதொடர்பாக விசாரித்தோம். 

இதற்கிடையில் நாகராஜை தீர்த்துக்கட்ட பொம்மை துப்பாக்கி வாங்கிய வழக்கில் மஞ்சுளாவை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். ஜாமீனில் வெளியில் வந்த மஞ்சுளா தலைமறைவாக இருந்தார். இந்தச் சூழ்நிலையில் மஞ்சுளா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த சியாம் சுந்தர், சந்தோஷ் குமார், சரவணன் ஆகிய ஐந்து பேர் சென்னை ஜார்ஜ் டவுன் 7 வது கோர்ட்டில் இன்று சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பஷீர் அவர்களை அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அவர்களை  4-ம் தேதி மாலை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது அவர்களை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

 ரித்தேஷ்சாய் கொலை செய்யப்பட்ட பிறகு கணவர் கார்த்திகேயனைவிட்டுப் பிரிந்த மஞ்சுளா, சைதாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். ஜூலை மாதம், நாகராஜை கொலை செய்வதற்காக நண்பர்களிடம் துப்பாக்கிக் கேட்டார். ஆனால், அவர்களோ பணத்தை வாங்கிக்கொண்டு பொம்மை துப்பாக்கியை மஞ்சுளாவிடம் கொடுத்தனர். இந்தச் சம்பவத்தில் மஞ்சுளா மற்றும் அவரின் நண்பர்களை சைதாப்பேட்டை போலீஸார்  கைது செய்தனர். அப்போது மஞ்சுளாவிடம் போலீஸார் விசாரித்தபோது என் மகனைக் கொலை செய்த நாகராஜை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கூறியுள்ளார். அந்தச் சபதத்தை 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியில் வந்து நிறைவேற்றியுள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர். 

மகனை ஈவு இரக்கமின்றி அடித்துக் கொலை செய்த நாகராஜை கூலிப்படையினர் மூலம் மஞ்சுளா கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.