Published:Updated:

‘மக்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு!’ -வேலூர் மாவட்ட காவல்துறையின் 2018 சாதனைகள்

‘மக்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு!’ -வேலூர் மாவட்ட காவல்துறையின் 2018 சாதனைகள்
‘மக்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு!’ -வேலூர் மாவட்ட காவல்துறையின் 2018 சாதனைகள்

வேலூர் மாவட்ட காவல்துறையினர் 2018ல் பல்வேறு விதமான வழக்குகளில் துரிதமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, பொதுமக்கள் பிரச்னையை அதிகமாகத் தீர்த்து வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்ட காவல்துறை மூலம் 2018ம் ஆண்டில் மொத்தம் 31 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 582 சொத்து வழக்குகளில் 81 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு ஆதாய கொலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏழு கூட்டுக் கொள்ளை மற்றும் ஒரு வழிப்பறி கொள்ளை வழக்குகளில் மொத்தம் ரூ.45 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மோசடி சம்பந்தமான வழக்கில் வெற்றிகரமான புலனாய்வின் மூலம் 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் பதிவான 71 கொலை வழக்குகளில், 69 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 13 கொலை வழக்குகளில் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது.

ஏழு கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு, நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 96 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 16 வழக்குகளில் தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது. 474 சாலை விபத்துகளில் மரணமடைந்த வழக்குகள் உட்பட மொத்தம் 2,588 சாலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பலனாக கடந்த ஆண்டை விட 2018ல் 21 சதவீதம் அளவிற்குச் சாலை விபத்துகளில் மரணிக்கும் வழக்குகள் குறைந்துள்ளது. மணல் குண்டர்கள், ரௌடிகள் உட்பட மொத்தம் 109 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் நடப்பதைத் தடுக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் 2108 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேபோல், காணாமல் போனவர்களை மீட்டது, சாராய வழக்குகள், லாட்டரி மற்றும் சூதாட்ட வழக்குகளிலும் வேலூர் மாவட்ட போலீஸார் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். 2018ல் வேலூர் மாவட்ட காவல்துறையின் சாதனைகளைப் பட்டியலிட்ட டி.ஐ.ஜி வனிதா மற்றும் எஸ்.பி பிரவேஷ்குமார் பெருமிதம் கொண்டனர். இருவரும் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ‘‘காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் அனைத்து காவலர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதுவரையில் 320 காவல்துறையினருக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உளவியல் ரீதியாகவும் பயிற்சி கொடுக்கிறோம். போலீஸாரின் திருமண நாள், பிறந்த நாட்களுக்கு விடுமுறை அளிக்கிறோம்.

2018ல், வேலூர் மாவட்டத்திற்கு ஜனாதிபதி உட்பட மொத்தம் 22 முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர். இதில் எவ்வித அசம்பாவிதமின்றி சிறப்பான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்தம் 35 செம்மர ஏஜென்ட்டுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 24 ஏஜென்ட்டுகளை கைது செய்துள்ளோம்’’ என்றனர்.