Published:Updated:

விதிகளை மீறினாரா? - தூத்துக்குடிக்குச் சென்ற அமெரிக்க பத்திரிகையாளர் திருப்பி அனுப்பப்பட்டார்!

இ.கார்த்திகேயன்
விதிகளை மீறினாரா? - தூத்துக்குடிக்குச் சென்ற அமெரிக்க பத்திரிகையாளர் திருப்பி அனுப்பப்பட்டார்!
விதிகளை மீறினாரா? - தூத்துக்குடிக்குச் சென்ற அமெரிக்க பத்திரிகையாளர் திருப்பி அனுப்பப்பட்டார்!

அமெரிக்காவிலிருந்து சுற்றுலா விசாவில் தூத்துக்குடிக்கு வந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற கிராமங்களுக்குச் சென்ற சியல்லோ மார்க் என்ற பத்திரிகையாளர், விதிகளை மீறிச் செயல்பட்டதால் மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற கிராமங்களுக்குச் சென்று புகைப்படம், வீடியோ எடுத்ததுடன் மக்கள் மற்றும் போராட்டக்காரர்களை சந்தித்து வருகிறார் எனவும், அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளார் எனவும் உளவுத்துறைப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தங்கியுள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்று உளவுப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சியல்லோ மார்க் என்பதும், அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கார்டியன், அல்ஜசீரா ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது எச்.பி.ஓ., ஆங்கிலத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்த மார்க், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மார்க்கை அழைத்துச் சென்று, மக்கள் கருத்துகளை மொழிபெயர்ப்பு செய்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி உதவிக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து, அவர் தூத்துக்குடியில் எந்தெந்தப் பகுதிகளுக்கெல்லாம் சென்றார், அவர் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக, கடந்த 3 நாள்களாக அவரிடம் தொடர்  விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த மார்க், விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் மீண்டும் அவர் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். தூத்துக்குடியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுரை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து, விமானம் மூலம் ஹைதராபாத் வழியாக அமெரிக்கா செல்வதாக போலீஸார் தெரிவித்தனர்.  

இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு, மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்ட பிரின்ஸ், வணிகர் சங்கத்தைச் சேர்ந்த ராஜா, மீனவர் சங்கத்தைச் சேர்ந்த ரீகன் ஆகிய நான்கு பேருக்கு தூத்துக்குடி வடபாகம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.