Published:Updated:

இன்னும் எத்தனை முறை..?

இன்னும் எத்தனை முறை..?
பிரீமியம் ஸ்டோரி
இன்னும் எத்தனை முறை..?

ரீ.சிவக்குமார் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

இன்னும் எத்தனை முறை..?

ரீ.சிவக்குமார் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இன்னும் எத்தனை முறை..?
பிரீமியம் ஸ்டோரி
இன்னும் எத்தனை முறை..?

மீண்டும் ஓர் ஆணவக்கொலை சம்பவம் நடந்துள்ளது. மீண்டும் அதைக் கண்டித்து எழுகிறோம். மீண்டும் போராட்டங்கள்....மீண்டும் அறிக்கைகள்....மீண்டும்....

இன்னும் எத்தனை முறை..?

ஆனாலும் ஆணவக்கொலைகள் நின்றபாடில்லை. ‘கௌரவக்கொலைகள்’ என்றழைக்கப்பட்ட ஒரு கொடூரம் ‘ஆணவக்கொலைகள்’ என்று பெயர்மாற்றிக்கொண்டதைத் தவிர வேறு எதுவுமே நிகழவில்லை என்பது நம்மை விரக்தியில் தள்ளுகிறது. சமத்துவம், மனிதநேயம், தனிமனித உரிமைகள், பெண்களுக்கான சுதந்திரம் ஆகியவற்றின்மீது அக்கறை கொண்டவர்கள் மட்டுமே இந்த ஆணவக்கொலைகளைக் கண்டு துணுக்குறுகின்றனர். அதற்கான எதிர்ப்புக்குரல்களையும் பதிவு செய்கின்றனர். உண்மையில் பொதுச்சமூகம் இதற்காகத் திடுக்கிடுகிறதா அல்லது மற்ற கொலைகள், கொள்ளைகள், வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் ஒன்றாகத்தான் ஆணவக்கொலைகளைப் பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏனெனில் இத்தகைய கொலைகளை நிகழ்த்துபவர்கள் அரசியல் பலம் கொண்டவர்களோ அதிகாரப் பின்னணி கொண்டவர்களோ அல்ல. குற்றப்பின்னணி கொண்டவர்களோ குற்றச்சம்பவங்களில் அனுபவம் கொண்டவர்களோ அல்ல. நாம் எதைப் பொதுச்சமூகம் என்கிறோமோ அந்தப் பொதுச்சமூகத்தில் இருப்பவர்கள்தான் இத்தகைய கொலைகளை நிகழ்த்துகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை சாதியத்துக்காகவும் குடும்ப கௌரவத்துக்காகவும் ஊரார் பழிச்சொல்லுக்கு அஞ்சியும் எதையும் செய்யலாம். அப்படிச் செய்யப்படுவதன் உச்சம்தான், எதற்காகத் தங்கள் வாழ்க்கை முழுவதும் உழைத்து வளர்த்தார்களோ அந்த மகளை/மகனைக் கொலை செய்வது.

‘ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்ற குரல் எழுந்து பல ஆண்டுக்காலம் ஆகிறது. ஆனாலும் அரசு அதுகுறித்துப் பரிசீலிப்பதாகத் தெரியவில்லை. முடிந்தவரை ‘ஆணவக்கொலை என்கிற ஒன்று நடந்தது என்பதே தெரியாமல் நடந்துகொள்வது’ என்பது மட்டும்தான் அரசின் செயற்பாடாக உள்ளது.

இன்னொருபுறம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் துயரத் தொடர்கதைகளாக உள்ளன. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டியில் படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமி, அரூர் கோட்டப்பட்டியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின மாணவி, ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாலதி என்னும் பெண் படுகொலை என்று ரத்தக்கணக்கு நீள்கிறது. 

இன்னும் எத்தனை முறை..?

“திருச்சியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு அ.தி.மு.க பிரமுகரால் பாலியல் தொல்லை, திருப்பூரில் 4 வயது குழந்தை பாலியல் வல்லுறவு, தஞ்சை திருபுவனத்தில் 21 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு, புதுக்கோட்டையில் 19 வயது பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஏழு மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் சிறுமிகள்மீதான பாலியல் வல்லுறவுகளும், அதில் மூன்று கொலைக்குற்றங்களும் நடந்துள்ளன” என்று சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

பெண்கள்மீதான பாலியல் வன்முறை மற்றும் படுகொலை என்பது ஆணாதிக்க மனநிலையைக் காட்டுகிறது என்றால் தலித் மற்றும் பழங்குடிப்பெண்கள்மீதான வன்முறை ஆணாதிக்கத்துடன் இணைந்த சாதிய மனநிலையைக் காட்டுகிறது. சாதிவெறியர்களும் ஆணாதிக்க வெறியர்களும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான களமாகப் பெண்ணுடலையே கருதுகின்றனர். மறுபுறம் சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் சிதையாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் பெண்கள்மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஆணவக்கொலைகளில் பெண்களும் முதன்மைக் குற்றவாளிகளாக இருக்கின்றனர்.

ஓசூரில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஷும் சுவாதியும் நம் மனசாட்சியின் முன் கேள்விச்சடலங்களாகக் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். அந்தச் சடலங்களின் சிதைக்கப்பட்ட புகைப்படங்கள், சாதியத்தின் கொடூர மனநிலையை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன. ஆனாலும் ஆணவக்கொலைகளை ஆதரிப்பவர்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்; வெளிப்படையாகவே எழுதுகிறார்கள்; வெளிப்படையாகவே சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்கள்; வெளிப்படையாகவே சாதிச்சங்கங்களையும் சாதிக்கட்சிகளையும் நடத்துகிறார்கள். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவர் வெளிப்படையாகத்தான் ஆணவக்கொலைகளை ஆதரித்துப் பேசினார். எல்லாமே வெளிப்படைதான். ஏனெனில் சாதிவெறி என்பது வெளிப்படையானதுதான். சாதியை ஒழிக்காமல் ஆணவக்கொலைகளையும் ஒழிக்கமுடியாது என்பதும் வெளிப்படைதான்.