Published:Updated:

2018-ல் அதிர்ச்சியான சம்பவங்களால் முதலிடம் பிடித்த விருதுநகர்! #2018Rewind

2018-ல் அதிர்ச்சியான சம்பவங்களால் முதலிடம் பிடித்த விருதுநகர்! #2018Rewind
2018-ல் அதிர்ச்சியான சம்பவங்களால் முதலிடம் பிடித்த விருதுநகர்! #2018Rewind

புத்தாண்டு பிறந்துள்ள மகிழ்ச்சியில் மனம் திளைத்தாலும், கடந்து சென்ற ஆண்டை ஓர் அச்சத்துடனே திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டில், மகிழ்ச்சியான விஷயங்கள் குறைவாகவும், இன்னலைத் தந்த சம்பவங்கள் அதிகமாகவும் இருந்துள்ளன. ஸ்டெர்லைட் போராட்டங்கள், துப்பாக்கிச் சூடு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பசுமை வழிச் சாலை, நியூட்ரினோ உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புகள், தாக்குதல்கள் எனப் பல மோசமான சம்பவங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது, 2018. இப்படி, அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும் விருதுநகர் மாவட்டமே இதில் முதல் இடத்தில் உள்ளது. ஏற்கெனவே நாம் அறிந்ததுதான் என்றாலும் அவற்றில் முக்கியமான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.... 


நிர்மலாதேவி விவகாரம் : 

கல்லூரி மாணவிகளைப் பாலியல் சுரண்டலுக்குப் பயன்படுத்த நினைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் ஏப்ரல் 15-ம் தேதி பரபரப்பைக் கிளப்பியது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் தொடங்கிய இந்த விவகாரம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைத் தொட்டு சென்னையிலுள்ள அதிகார பீடங்கள்வரை சென்று பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இன்றும் சூடு மாறாமல் உள்ளது. 

செய்யாத்துரை அலுவலக ரெய்டு  :

அடுத்த சில நாள்களில் அதே அருப்புக்கோட்டையில் பக்கத்து வீட்டுக்காரருக்குக்கூடத் தெரியாத வகையில் வாழ்ந்துவந்த செய்யத்துரை என்ற நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரின் அனைத்து அலுவலகங்களிலும் பெரிய அளவில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. 195 கோடி ரூபாய் ரொக்கமாகவும், கிலோக்கணக்கில் தங்கம், வெள்ளி பிடிபட்டது. அதற்குப் பின்புதான் இவர், தமிழக முதலமைச்சரின் சம்பந்தியோடு பங்குதாரராகத் தொழில் செய்கிறவர் என்பதும், பல்லாயிரம் கோடி ரூபாய்க்குச் சாலை ஒப்பந்தங்கள் எடுப்பவர் என்பதும் தெரிந்து ஊர் மக்கள் அதிர்ந்தார்கள். 


பருப்பு ஆலை அதிபர்களின் கோல்மால் :

அதைத்தொடர்ந்து, விருதுநகரில் தன்னிடம் வேலை செய்கிறவர்களின் பெயரில் ஆவணங்கள் தயாரித்து பருப்பு ஏற்றுமதி செய்வதாக ஸ்டேட் பேங்கில் 300 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினர். மேலும், அதை வேறு தொழில்களில் முதலீடு செய்து,  திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தனர். இப்படி, மோசடி செய்த பிரபல பருப்பு ஆலை அதிபர்களான வேல்முருகன், செண்பகராமன் ஆகியோர்  அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். பெரு நகரங்களில் மட்டுமே நடந்துவந்த இதுபோன்ற நிதி மோசடிகள், சிறு நகரமான விருதுநகரில் நடந்ததைப் பார்த்து அனைவருக்குமே அதிர்ச்சியானது.
 

கள்ள நோட்டுக் கும்பல்  :

கடந்த ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிகளவில் கள்ள நோட்டுக் கும்பல்களை காவல் துறையினர் பிடித்தனர். கடந்த தீபாவளி நேரத்தில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில்விட வந்த சேவல்ப்பட்டியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரித்ததில், அந்த நெட் ஒர்க்கில் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு கடைசியில் கள்ள நோட்டை அச்சடித்த இளங்கோ என்பவரை மதுரை அருகே கைதுசெய்தனர். 36 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதற்கு முன்பு ஜனவரி மாதத்தில் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளுடன் சாத்துரைச் சேர்ந்த செந்தூரான் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்ததன் மூலம் கோவையிலுள்ள மற்றொரு கள்ள நோட்டுக் கும்பலைப் பிடித்தனர். 

பட்டாசு ஆலைகள் மூடல்:

`சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது' என்று பட்டாசு உற்பத்திக்குக் குண்டு வைப்பதுபோல் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில் உத்தரவிடப்பட்டதால் சிவகாசி பட்டாசு ஆலைகள் தொடர்ந்து இயங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சொல்லும் பசுமைப் பட்டாசுகள் எப்படித் தயாரிப்பது என்று தெரியாமல், உரிமையாளர்கள் பட்டாசு ஆலைகளை மூடிவிட்டார்கள். இதனால் இதை நம்பிப் பிழைத்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள், கடந்த இரண்டு மாதங்களாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு, கடந்த வாரம் விருதுநகரில் பெரும் போராட்டம் நடத்தினார்கள்.

ஹெச்.ஐ.வி. ரத்தம் :

மாவட்டத்தில் பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து, ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்த நிலையில் ஆண்டின் இறுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. சாத்தூரைச் சேர்ந்த ஏழைக் கர்ப்பிணிப் பெண்ணின் சத்துக் குறைபாட்டுக்காக சிவகாசி ரத்த வங்கியைச் சேர்ந்தவர்களும், சாத்தூர் அரசு மருத்துவர்களும் ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றி அவரின் வாழ்க்கையை அழித்துள்ளனர். இதன்மூலம் ரத்தம் கொடுப்பவர்களும், ரத்தம் பெறுபவர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் ஒரு குடும்பமே கண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறது. அரசு அனைத்து உதவிகளையும் அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குச் செய்வதாகக் கூறினாலும், அவர் உயிருக்கு உத்தரவாதத்தை அளிக்க முடியாமல் திணறுகிறது.

இப்படி, கடந்த ஆண்டு முழுவதும் துன்பமும், அதிர்ச்சியும் கலந்த சம்பவங்களால் விருதுநகர் மாவட்டம் ஊடகச் செய்திகளில் முன்னிலையில் இருந்தாலும், சமூகப் பொருளாதார தளத்தில் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.