59 கொலைகள், 154 குண்டாஸ்... கடந்த ஆண்டின் நெல்லை மாவட்ட க்ரைம் ரிப்போர்ட்! | The Crime report of Nellai district shows good sign

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (02/01/2019)

கடைசி தொடர்பு:17:59 (02/01/2019)

59 கொலைகள், 154 குண்டாஸ்... கடந்த ஆண்டின் நெல்லை மாவட்ட க்ரைம் ரிப்போர்ட்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடந்த மணல் கொள்ளையும் அதைத் தடுக்கும் முயற்சில் நடந்த உயிரிப்புகளும் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த ஆண்டில் 59 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ள விவரமும் தெரிய வந்திருக்கிறது.

59 கொலைகள், 154 குண்டாஸ்... கடந்த ஆண்டின் நெல்லை மாவட்ட க்ரைம் ரிப்போர்ட்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாகவும், ரூ.2 கோடி மதிப்பிலான திருட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் நெல்லை மாவட்ட க்ரைம் ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் 59 கொலைகள் நடந்துள்ளதும், 154 பேர் மீது குண்டாஸ் சட்டம் பதிவு செய்யப்பட்ட விவரமும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது.  

நெல்லை மாவட்டத்தில் அதிகமான கொலைச் சம்பவங்கள் நடப்பது போன்ற தோற்றத்தைத் திரைப்படங்கள் ஏற்படுத்தி விட்டன. அனைத்து மாவட்டங்களையும் போல நெல்லை மாவட்டத்திலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்ற போதிலும், அதைக் கட்டுக்குள் கொண்டுவர மாவட்டக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக குற்றச்செயல்கள் பெருமளவு குறைந்துள்ள விவரம், காவல்துறையின் புள்ளிவிவரக் குறிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. 

மணல் கொள்ளை - க்ரைம் ரிப்போர்ட்

நெல்லை மாவட்டத்தில் 2007 முதல் 2018-ம் ஆண்டுவரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பார்க்கையில், கடந்த ஆண்டு கொலைச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. 2007-ம் ஆண்டு ஓர் ஆதாயக் கொலையுடன் மொத்தம் 79 கொலைகள் நடந்துள்ளன. அதன் பின்னர் தொடர்ந்து அதிகரித்த கொலைச் சம்பவங்கள் 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் 100ஐ கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. பின்னர் காவல்துறையினரின் தீவிரக் கண்காணிப்பு காரணமாகச் சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொலைகள், 2018-ம் ஆண்டு 59 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், வழக்குகளை விரைவாக நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பழைய கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட 12 வழக்குகள் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில் 17 கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

தடுக்கப்படாத மணல் கொள்ளை!

மாவட்ட எஸ்.பி - அருண் சக்திகுமார்

நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டு என்பது தடுக்க முடியாத அளவுக்குத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் கொள்ளையில் காவல்துறையினரே நேரடியாக ஈடுபடும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. கடந்த ஆண்டில் திசையன்விளை காவல்நிலைத்தில் மணல் கொள்ளையர்களுடன் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் தொடர்பில் இருந்தது தெரியவந்ததால் அவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி-யான அருண் சக்திகுமார் உத்தரவிட்டார். மற்றொரு காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தவிர, மணல் கொள்ளையர்களுடன் தொடர்பில் இருந்த காவல்துறையினர் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.  

இது தவிர, நம்பியாற்றில் மணல் கடத்தல் கும்பலால் சமூக ஆர்வலரான செல்லப்பா, லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த இரு வாரங்களிலேயே மணல் கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற ஜெகதீஷ் துரை என்ற முதல்நிலை காவலரை மணல் மாஃபியாக்கள் இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற அவலம் அரங்கேறியது. தாமிரபரணி, நம்பியாறு, கடனாநதி உள்ளிட்ட ஆறுகளில் மணல் கொள்ளை நடந்தபோதிலும் அப்பகுதிகளில் உள்ள காவல்துறையினர் அவற்றைத் தடுக்கத் தவறி விட்டதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த நிலையில், மணல் கொள்ளையைத் தடுக்க ஒரு சில காவல்துறை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக கடந்த ஆண்டில், மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல்நிலையங்களில் 667 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன, இந்த வழக்குகள் தொடர்பாக 764 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 981 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

2018-ம் ஆண்டு பதிவான திருட்டு வழக்குகளில் 360 வழக்குகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் பிடிபட்டனர். அதன் மூலமாக சுமார் ஒன்றரைக் கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர முந்தைய வருடங்களில் நடந்த சில குற்ற வழக்குகளும் கடந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், 50 லட்சம் மதிப்பிலான நகைகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே, கடந்த ஆண்டில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

குற்றம்

மக்களை வாட்டும் கந்துவட்டிக் கொடுமைகள்!

கடந்த ஆண்டில் மணல் கொள்ளையர்கள் 4 பேர், பாலியல் குற்றவாளிகள் 3 பேர், சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை செய்த 4 பேர் உள்ளிட்ட 154 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதவிர, சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் பிற சாதியினரை ஆத்திரப்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் அவதூறாகக் கருத்துகளைப் பதிவிட்டவர்கள் மீது 30 வழக்குகள் பதிவாகின. இதில் 24 பேர் கைதான நிலையில் எஞ்சிய 16 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். 

சாலை விபத்தைப் பொறுத்தவரை, கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த விபத்தை விடவும் 10 சதவிகிதம் விபத்துகள் குறைந்துள்ளன. அதனால் உயிரிழப்புகள் 12 சதவிகிதம் குறைந்திருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நில அபகரிப்புச் சம்பவங்கள் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற புகார்கள் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சுமார் 4.63 கோடி ரூபாய் மதிப்பிலான 66 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளனர். இது தவிர குற்றப்பிரிவில் கிடைத்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் 6.61 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டிச் சம்பவங்கள் அதிகம் இருக்கிறது. கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நடந்த தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. 2017-ம் ஆண்டு இசக்கிமுத்து என்பவர் தன் மனைவி மற்றும் இரு கைக்குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தீக்குளித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மாவட்டம் முழுவதும் கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கந்துவட்டி தொல்லைகள் ஓரளவுக்குக் குறைந்தன. தற்போது கந்துவட்டி சிக்கல்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன. அதன் மீது காவல்துறை பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை என்கிற ஆதங்கம் பொதுமக்களிடம் இருக்கிறது. ஆனால், காவல்துறை அளித்துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

கேரளாவின் குப்பைத் தொட்டியான தமிழகம்! 

நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் புகார்களை தொலைபேசி வாயிலாக அல்லது குறுஞ்செய்திகளாக அளிக்க `ஹலோ போலீஸ்’ என்ற தொலைபேசி சேவைத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சேவையின் மூலமாக 2,650 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 2,645 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பாக 317 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதுடன், 223 பேருக்குப் புகார் ரசீது அளிக்கப்பட்டுத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மொத்தத்தில், நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குற்றங்கள் குறைந்துள்ளதாகக் காவல்துறையின் புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் கேரளாவுக்குக் கடத்தப்படும் மணல் உள்ளிட்ட கனிமக் கடத்தல், கேரளாவிலிருந்து காவல்துறை செக்போஸ்டைக் கடந்து கொண்டுவரப்பட்டு கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவற்றை இந்த ஆண்டிலாவது முழுமையாகத் தடுக்க வேண்டும். இது தவிர, கந்துவட்டி உள்ளிட்ட பிரச்னைகளிலும் இந்த ஆண்டிலாவது காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.  


டிரெண்டிங் @ விகடன்