Published:Updated:

வங்கியில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்! - வேலைக்கு வந்த ஊழியர்கள் ஷாக்

வங்கியில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்! - வேலைக்கு வந்த ஊழியர்கள் ஷாக்
வங்கியில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்! - வேலைக்கு வந்த ஊழியர்கள் ஷாக்

விருத்தாசலம் ஸ்டேட் வங்கியின் ஜன்னலை வெல்டிங் மிஷன் மூலம் அறுத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். திருடும் முயற்சி தோல்வியடைந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. கடந்த 31-ம் தேதி வங்கியை முடிவிட்டு ஊழியர்கள்  சென்றுள்ளனர். மறுநாள் புத்தாண்டு என்பதால் வங்கிக்கு விடுமுறை. அடுத்த நாள் 2-ம் தேதி வங்கிக்கு வந்த அதிகாரிகளும், ஊழியர்களும் வழக்கம்போல் தங்கள் பணியைத் தொடங்கியுள்ளனர். அப்பொழுது வங்கி லாக்கர் அருகே தண்ணீர் பாட்டில்கள், சாவிகள் மற்றும் சந்தேகப்படும்படியான பொருள்கள் கிடந்துள்ளன. இது குறித்து வங்கி ஊழியர்கள் வங்கி மேலாளரிடம் தெரிவித்தனர். பின்னர் வங்கி மேலாளர் அலுவலகத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது 31-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் வங்கியில் லாக்கர் பகுதிக்குச் செல்ல முயல்வது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் இது குறித்து விருத்தாசலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

விருத்தாசலம் ஏ.எஸ்.பி தீபா சத்யன், இன்ஸ்பெக்டர் ராஜாதாமரைப்பாண்டியன் மற்றும் போலீஸார் வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது, விடுமுறை நாளில் மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னலை வெல்டிங் மிஷன் மூலம் அறுத்து வங்கிக்குள் நுழைந்தது தெரியவந்தது. பின்னர் மர்ம நபர்கள் வங்கி லாக்கரை திறக்க முயன்று அது முடியாததால் திருப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வங்கி மேலாளர் ராஜாராம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கடலூரிலிருந்து மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.