Published:Updated:

ஜெயலலிதாவைக் கொல்ல முயற்சி நடந்ததா...? - துப்பறியும் நிபுணர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

ஜெயலலிதாவைக் கொல்ல முயற்சி நடந்ததா...? - துப்பறியும் நிபுணர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்
ஜெயலலிதாவைக் கொல்ல முயற்சி நடந்ததா...? - துப்பறியும் நிபுணர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

2010-ம் ஆண்டில் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவைக் கொல்ல முயற்சி நடந்ததாக அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார் துப்பறியும் நிபுணர் வரதராஜன்

``2010-ல் ஜெயலலிதா எந்த அரசுப் பதவியிலும் இல்லை. அவரது போயஸ்கார்டன் வீட்டில் அமைதியாக காலங்கழித்து வந்தார். திடீரென ஒரு நாள்.. என்னுடைய ஆபீஸ் போனில் அழைப்பு வந்தது. எதிர்முனையில் அ.தி.மு.க. தலைமைக்கழக பொறுப்பாளர் மகாலிங்கம் பேசினார்.  `உங்களை அம்மா அழைக்கிறார். உடனே வாருங்கள் ' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நேரில் சென்றேன். `எனக்காக ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். முடியுமா?' என்று கேட்டார். நானும் நிச்சியமாகச் செய்கிறேன் என்றேன். 

அப்போது அவர் என்னிடம் `நான் இரவில் படுக்கப்போகும்முன் பால் குடிப்பேன். அதுபோலத்தான், இந்த டம்ளரை கையில் எடுத்தேன். முகத்தருகே கொண்டு சென்றபோது, பயங்கர அதிர்ச்சி. பாலில் இருந்து ஏதோ புதுவித வாடை வந்தது. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மூட்டு வலி தைலத்தின் வாடை என்பதைப் புரிந்துகொண்டேன். உடனே, அந்த தைல பாட்டிலை எடுத்துப் பத்திரப்படுத்தினேன். அதில் ஏதாவது விரல்ரேகை இருக்கிறதா? என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் ' என்றார். 

அதையடுத்து,  நான் தடய அறிவியல் கருவிகளை வரவழைத்தேன். அவற்றின் உதவியுடன் தைலப் பாட்டிலின் வெளிப்புறம் பதிந்திருந்த விரல் ரேகைகளைப் பதிவு செய்தேன். அதேநேரம், அவரது அறைக்கு அடிக்கடி சென்று வரும் சின்ன வயதுக்காரர்களான நான்கு பணியாட்களின் விரல்ரேகை பதிவுகளை ஜெயலலிதா என்னிடம் கொடுத்தார். இவர்களின் விரல்ரேகைகளுடன் அந்த தைலப் பாட்டிலில் இருந்த ரேகையும் ஒத்துப்போகிறதா? என்று பார்த்துச் சொல்லுங்கள் என்றார். 

இதை நான் செய்ய லேப்புக்கு செல்ல வேண்டும். விரல் ரேகைகளை எடுத்துச் செல்லட்டுமா? என்று கேட்டேன். அப்போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மறுத்தார். ஆனாலும், அவரையும் மீறி என்னை வெளியே எடுத்துச் செல்ல ஜெயலலிதா அனுமதித்தார். நானும் சின்ஸியராக செக்கப் பண்ணினேன். ரிசல்ட்டை சொன்னேன். ஜெயலலிதா சந்தேகப்பட்ட நான்கு பேர்களின் விரல்களுடன் ஒத்துப்போகவில்லை என்றேன். அதைக்கேட்ட ஜெயலலிதா,  சற்று யோசித்தார். ' ஒ.கே. இதை இதோடு விட்டுவிடுங்கள் ' என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார்.

அந்த நேரத்தில் அங்கே இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர்தான் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்" - இந்த தகவலை நம்மிடம் சொன்னவர்.. வரதராஜன்! சென்னை செனாய் நகரில் ஆபீஸ் நடத்தி வரும் வரதராஜனை நாம் சந்தித்தபோது, அவர் சொன்னதைத்தான் மேலே சொன்னோம்.

தமிழக காவல் துறையில் 25 வருடங்கள் பணிபுரிந்தவர். இன்ஸ்பெக்டர் ரேங்கில் இருந்தபோது, விருப்ப ஒய்வில் வெளியே வந்தவர். பிறகு, சன் டிடெக்ட்டிவ் என்கிற துப்பறியும் நிறுவனத்தை ஆரம்பித்து இன்று வரை நடத்தி வருகிறார். இவர் கண்டுபிடித்த பல சென்சிஸ்டிவ்வான விவகாரங்கள் பற்றி மீடியாக்களில் எழுதி பிரபலமானவர். அவள் விகடனில் கூட இவரது தொடர் வெளிவந்தது. காவல்துறைக்கு ஆதரவாக தற்போது டி.வி. விவாதங்களில் கலந்துகொண்டு வருகிறார். இவர் கண்டுபிடித்த ஒரு கதையை பிரபல சினிமா டைரக்டர் ஒருவர் ஃபேஸ்புக்கில் படித்து பிரமித்து நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை நடிக்க ஏற்பாடு செய்து வருகிறார். இத்தனை இருந்தாலும், தினமும் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வக்கீலாகவும் பணிசெய்கிறார். அடிப்படையில் இவர் ஒரு ஜெயலலிதா விசுவாசி. அ.தி.மு.க -வின் விசுவாசி. ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர். 
தற்போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், வரதராஜன் கூறிய தகவல்கள் பகீர் ரகமாக இருக்கின்றன. 

போயஸ் கார்டனுக்கு வந்துபோன பிறகு, வரதராஜனுக்கு அ.தி.மு.க -வில் அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்தாராம். 2009 -ம் வருடம் நடந்த

எம்.பி தேர்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தாராம் வரதராஜன். நேர்காணலுக்குப்போயிருந்தபோது, வரதராஜனின் பின்னணியைக் கேட்டு ஆச்சர்யப்பட்டு அவரது டைரியில் குறிப்பு எடுத்துக்கொண்டாராம். சீட் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்த வருடம். போயஸ்கார்டனில் கொலை முயற்சி நடந்தபோது, ஜெயலலிதா அவரது டைரியை தேடியிருக்கிறார். அது கிடைக்கவில்லையாம். ஆனாலும், விடாமல், ராமநாதபுரத்தில் நிற்க சீட் கேட்டு பயோ-டேட்டா கொடுத்தார். அந்த ஃபைலை தேடிப்பிடித்து கேட்டு வாங்கி அதிலிருந்த ஒரு போன் எண்ணை வைத்து அவரை அழைத்து வரச் சொன்னாராம். அதன்பிறகு, ராஜ்யசபா தேர்தல் வந்தபோதும் சரி, சட்டமன்றத் தேர்தல் வந்தபோதும் சரி முதுகுளத்தூரில் வரதராஜனை நிற்க வைக்க ஜெயலலிதா விரும்பினாராம். ஆனால், அவரது எண்ணம் திடீரென சிலரால் திசைதிருப்பிவிடப்பட்டதாம். இதையெல்லாம் பார்த்து நொந்துபோன வரதராஜன், `வேண்டாம்..இந்த அரசியல் ' என்று பெரிய கும்பிடு போட்டுவிட்டு மற்ற பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். 
பட்டாசை பற்றவைத்துவிட்டார் வரதராஜன்! அடுத்த என்ன நடக்கப்போகிறது? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு