Published:Updated:

`தல இருக்கும்போது வால் ஆடக் கூடாது' - ரவுடி சந்தானத்தைக் கொன்ற ராபர்ட் வாக்குமூலம் 

`தல இருக்கும்போது வால் ஆடக் கூடாது' - ரவுடி சந்தானத்தைக் கொன்ற ராபர்ட் வாக்குமூலம் 
`தல இருக்கும்போது வால் ஆடக் கூடாது' - ரவுடி சந்தானத்தைக் கொன்ற ராபர்ட் வாக்குமூலம் 

சென்னையில் கொலை செய்யப்பட்ட ரவுடி சந்தானத்தின் வழக்கில் முக்கியக் குற்றவாளியான சின்னராபர்ட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது சின்ன ராபர்ட்டின் வலது கை முறிந்துள்ளது. 

சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரில் திருந்திவாழ்ந்த ரவுடி சந்தானம், கடந்த 2-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து அன்னை சத்யா நகரைச் சேரந்த சதீஷ், ஜோசப், அரி, விமல் மற்றும் 18 வயதுக்குக் கீழ் உள்ள இருவர் என 6 பேரை போலீஸார் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான ராபர்ட் என்கிற சின்ன ராபர்ட்டை போலீஸார் தேடிவந்தனர். இந்தநிலையில் ராபர்ட் பதுங்கியிருக்கும் இடம் குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் அங்குச் சென்றனர். அப்போது போலீஸாரைப் பார்த்த சின்ன ராபர்ட் தப்பிக்க கூவம் பாலத்திலிருந்து குதித்தார். இதில் அவரின் வலது கை முறிந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீஸார் சிகிச்சை அளித்தனர். பிறகு கையில் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

சின்ன ராபர்ட்டிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், ``அன்னை சத்யா நகரில் குடியிருக்கும் ரவுடி சந்தானத்துடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. குறிப்பாக, பெரிய ரவுடியான நான் இருக்கும்போது நீங்கள் அமைதியாக இருங்கள் என்று எங்களை மிரட்டிவந்தார். சில மாதங்களுக்கு முன், எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தானம், உனக்கு வாய் அதிகம் என்று கூறியபடி என்னுடைய வாயிலேயே கையால் குத்தினார். இதனால் நான் அவமானம் அடைந்தேன். இதையடுத்து சந்தானத்தைக் கொலை செய்ய என்னுடைய நண்பர்கள், கூட்டாளிகளுடன் திட்டமிட்டேன். 

சம்பவத்தன்று அனைவரும் நன்றாக மது அருந்தினோம். அப்போது பைக்கில் சந்தானம் வீட்டுக்குத் தனியாக வரும் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு பைக்கில் சென்று சந்தானத்தின் கதையை முடித்துவிட்டு தப்பிவிட்டோம் என்று வாக்குமூலமாக கொடுத்துள்ளார். அன்னை சத்யா நகரில் யார் பெரிய ரவுடி என்ற போட்டியே சந்தானத்தின் கொலைக்கு முக்கியக் காரணம் என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சின்ன ராபர்ட் கொடுத்த தகவல்படி பார்த்தால் தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று ரவுடி சந்தானம் மிரட்டியது தெரியவருகிறது. ஆனால், சந்தானம் ரவுடி தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ்ந்ததாக அப்பகுதியினர் சொல்கின்றனர். சில மாதங்களாக சந்தானத்தின் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் சின்ன ராபர்ட் கூறிய தகவல்படி தொடர்ந்து விசாரித்துவருகிறோம். சின்னராபர்ட்டின் சகோதரர் ஜோசப். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நடக்கும் குற்றச் செயல்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஈடுபடுவது வேதனைக்குரியது. சந்தானம் வழக்கில் கைதானவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இவ்வாறு இளைய தலைமுறையினர் தவறான பாதைகளில் செல்வது தடுக்கப்படவேண்டும். அவர்கள் இருவரையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளோம். சமீபகாலமாக செல்போன், செயின் பறிப்புச் சம்பவங்களில்கூட 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஈடுபவது அதிர்ச்சியாக உள்ளது. அவர்களை நல்வழிப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறோம். அதிலும் இன்ஜினீயர்கள், பட்டதாரிகள் ஈடுபடுவதும் எங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் திருந்தும் இடமாகவே சிறைச்சாலைகள் இருக்கவேண்டும். ஆனால், இன்று அங்குதான் பல குற்றச்சம்பவங்களுக்கு சதி திட்டம் போடப்படுகிறது. எனவே, குற்றங்களைத் தடுப்பதோடு சிறுவர்களுக்குத் தேவையான கவுன்சலிங் அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்றார்.