Published:Updated:

நாடாளுமன்றமா? நாடக அரங்கமா?

தமிழருவி மணியன்

நாடாளுமன்றமா? நாடக அரங்கமா?

தமிழருவி மணியன்

Published:Updated:
##~##

'நேர்மையானவன் என்ற பெருமையை எப்படியாவது நீ பெற்றுவிட வேண்டும். அப்போதுதான் உன்னை அனைவரும் நம்புவார்கள். அதற்குப் பிறகு, அவசியத்துக்கேற்ப அடிக்கடி நீ பொய் பேச வேண்டும். அதையும் நீ அழகாகவும் எளிதாகவும் செய்தாக வேண்டும்’ என்று இத்தாலிய அரசியல் அறிஞன் மாக்கியவல்லி அறிவுறுத்தினான். நம் பிரதமர் வழங்கிய புத்தாண்டுச் செய்தியில், 'வலிமை மிக்க லோக்பால் சட்டம் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும். ஊழலற்ற தூய்மையான நிர்வாகம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டிருப்பதை வாசித்தபோது மாக்கியவல்லியின் வாசகம்தான் நினைவு மேடையில் நிழலாடியது. 

நாடாளுமன்ற மக்களவையில் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதா, போதிய உணவின்றி எலும்பும் தோலுமாய் எழுந்து நிற்கும் ஏழை இந்தியரைப் போன்று - எந்த வலிமையும் இல்லாமல் ஏமாற்றும் நோக்குடன் - வடிவமைக்கப்பட்டது. 'அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படாமல் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் இயங்கும் லோக்பால் அமைப்பு உதயமாக வேண்டும். ஊழல் கண்காணிப்பு ஆணை யமும், மத்தியப் புலனாய்வு அமைப்பின் ஊழல் தடுப்புத் துறையும் லோக்பாலில் இணைக்கப்பட வேண்டும். விசாரணை நடத்தவும், குற்ற வழக்கைப் பதிவு செய்யவும், தண்டனை தரவும் முழுமையான அதிகாரம் லோக்பாலிடம் இருக்க வேண்டும். பிரதமர், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், நீதிபதிகள் அனைவரும் லோக்பால் வரம்புக்குள் வர வேண்டும். மாநிலங்களில் லோக்அயுக்தா அமைக்கப் பட வேண்டும்’ என்ற மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளில் ஒன்று கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

நாடாளுமன்றமா? நாடக அரங்கமா?

லோக்பால் வரம்புக்குள் பிரதமர் வரக்கூடாது என்று லாலு பிரசாத்தும், முலாயம்சிங் யாதவும், மாயாவதியும், ஜெயலலிதாவும் விரும்புகின்றனர். என்றாவது ஒரு நாள் மொத்த மக்களின் ஆதரவில்

நாடாளுமன்றமா? நாடக அரங்கமா?

அந்த நாற்காலியில் அமர்ந்துவிட முடியும் என்ற ஊமைக் கனவை உள்ளத்தில் சுமந்தபடி உலா வருபவர்கள் இவர்கள். அண்ணா ஹஜாரேவின் அழுத்தத்தால் சில நிபந்தனைகளுடன் இவர்களுடைய எதிர்ப்பையும் மீறி, பிரதமர் பதவி லோக்பால் வரம்புக்குள் வந்துவிட்டது. ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் பாரதிய ஜனதா இந்த ஆயுதத்தைப் பயன்படுத்த அனுமதிக்கலாகாது என்பதற்காகவே காங்கிரஸ், பிரதமரை லோக்பால் வளையத்தில் வேறு வழியின்றி நிறுத்தியது.

ராகுல் காந்தி தன்னுடைய அரசியல் வாழ்வில் வாய் திறந்து உருப்படியாக வழங்கிய ஒரேயரு ஆலோசனை, லோக்பால் அமைப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கமாக வேண்டும் என்று அழுத்த மாக வற்புறுத்தியதுதான். நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சாதாரணச் சட்டம் நிறைவேறச் சாதாரண பெரும்பான்மையே போதும். அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். லோக்பால், அரசமைப்புச் சட்டத்திருத்தம் பெறாவிடில், ஓர் ஊழல் அரசு அதை வேறொரு சமயம் இன்னொரு சாதாரணச் சட்டத்தின் மூலம் குப்பைக் கூடையில் கொண்டு போய் போடுவதற்கு சகலவிதமான சாத்தியங்களும் உண்டு. அரியானாவிலும் பஞ்சாபிலும் நடைமுறையில் இருந்த லோக்அயுக்தா அமைப்பு, ஊழல் முதலமைச்சர்களின் உறக்கத்தைக் கெடுத்ததால் ஒரு மேலாணை (ordinance)  மூலம் குப்பைக்குப் போனதை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற வி.என்.கரே நினைவுபடுத்துகிறார்.

லோக்பால் அமைப்பு எளிதில் கலைக்கப்பட வாய்ப்பில்லாத அரசியலமைப்பின் அங்கமாக (Constitutional body) இருக்க நம் அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா? 'பலவீனமான லோக் பால்’ என்ற பல்லவியுடன் பாரதிய ஜனதா 116வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவைப் பாடையில் படுக்க வைத்தது. பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் கட்சியின் 12 உறுப்பினர்கள் வாக்களிக்கவே வரவில்லை. கூட்டணிக் கட்சிகளையும், பாரதிய ஜனதாவையும் உண்மையான உணர்வுடன் காங்கிரஸ் அணுகவில்லை. 'பாரதிய ஜனதாவால் லோக்பால் அரசமைப்புச் சட்டத்தின் அங்கமாகவில்லை’ என்ற பழியைச் சுமத்த இந்த மசோதா பயன்பட்டதே போதுமென்று காங்கிரஸ் பரிவாரம் பரவசம் கொண்டது. எப்போது வேண்டுமானாலும் எளிதில் தூக்கியெறியப்படக்கூடிய ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு நள்ளிரவு வரை நடந்த நாடகக் காட்சிகளில் பங்கேற்ற நடிகர் திலகங்களின் ஆற்றல் அளவிடற்கரியது.

மத்தியப் புலனாய்வுத் துறையை எந்த நிலையிலும் தன் ஆளுகையிலிருந்து விடுவிக்க மன்மோகன் அரசு தயாராக இல்லை. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் முற்றுரிமை லோக்பாலிடம் இருக்கக் கூடாது என்பதில் அது மிகத்தெளிவாக உள்ளது. நீதிபதிகளும் லோக்பால் கண்காணிப்பில் இருப்பது தகாது என்ற முடிவில் அரசு திடமாக இருக்கிறது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவருக்கு மிக நெருக்கமான மனிதராக இருந்த லலித் நாராயண் மிஸ்ரா 1975-இல் படுகொலை செய்யப்பட்டார். 36 ஆண்டுகள் முடிந்த பின்பும் மர்மம் விலகவில்லை. குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட 27 வயது இளைஞனுக்கு இன்று 63 வயது முடிந்து விட்டது. 39 சாட்சிகளில் 31 பேர் கண்மூடி விட்டனர். விசாரணைப் படலத்தில் இதுவரை 22 நீதிபதிகள் ஈடுபட்டனர். ஒரு பயனுமில்லை. தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்கு 16 ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து இன்று, டில்லி உயர் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்புரைத்தது. அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். 85 வயதான சுக்ராம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது உயிரோடு இருப்பாரா? யார் அறிவார்? இன்று திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசா கதை என்னவாகும்? நல்ல நாடு; நல்ல ஆட்சி; நல்ல நாடாளுமன்றம்; மிக நல்ல வாக்காளர்கள்!

திரை மறைவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம்சிங் கட்சியும் வெளிநடப்பில் ஈடுபட்டன. 'லோக்பால் மசோதா வலிமையாக இல்லை; கார்ப்பரேட் நிறுவனங்களைக்

நாடாளுமன்றமா? நாடக அரங்கமா?

கண்டுகொள்ளவில்லை’ என்ற குற்றச்சாட்டுடன் இடதுசாரிகளும் வெளியேறினர். சிறுபான்மை ஆதரவில் மூச்சுத் திணறிய ஆளுங்கூட்டணி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களவையில் மசோதவை நிறைவேற்றி விட்டது. மசோதா நிறைவேற லோக்பால் அமைப்பில் இடஒதுக்கீடு வழங்கியாக வேண்டும் என்று லாலு அடம்பிடித்தார்; முலாயம் சிங் ஆர்ப்பரித்தார்; இளவரசர் ராகுல் மேசையைத் தட்டி ஆரவாரித்தார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் என்று 50 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்து அரசு சரித்திரம் படைத்தது. இந்த அரசுதான் லோக்பால் அரசியலமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாகத் திருத்தமசோதா கொண்டு வந்தது. ராகுல்தான் அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் லோக்பாலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார். மன்மோகனும் ராகுலும் உச்ச நீதிமன்றம், தேர்தல் கமிஷன், மத்தியத் தணிக்கைக்குழு, ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அரசியலமைப்புச் சட்ட அங்கங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் இருப்பதில்லை என்பதை ஏன் மறுத்து விட்டனர்? இதற்குப் பெயர்தான் 'வாக்கு வங்கி அரசியல்’.

போகட்டும். மக்களவையில் நிறைவேறிய மசோதா மாநிலங்களவையில் நுழைந்தது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதாவில் மாநிலங்களில் 'லோக்அயுக்தா’ அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இந்த வாசகம் நீக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதாவும், இடதுசாரிகளும், மாநிலக் கட்சிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பின. கூட்டாட்சி அமைப்பையே இந்தக் குறிப்பு குழி தோண்டிப் புதைத்துவிடும் என்று காங்கிரசைத் தவிர எல்லாக் கட்சிகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்தன. அரசமைப்புச் சட்டத்தின் 253-வது பிரிவின் கீழ் லோக்அயுக்தா மாநிலங்களின் மீது திணிக்கப்படுவது தவறுதான். ஆனால், ஊழலற்ற நிர்வாகம் நடத்த விரும்பும் மாநில அரசுகள் தாமாகவே முன்வந்து லோக்அயுக்தாவை அமைத்துக் கொள்ள அனுமதிக்காமல் யார் தடுத்தது? புலியும் மானும் ஒரே நீரோடையில் ஒன்றாகச் சேர்ந்து நீர் அருந்த முடியுமா? ஏன் முடியாது? தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாநிலங்களவையில் அந்த அதிசயத்தை அரங்கேற்றினவே!

மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஊழல் தடுப்புச் சட்டம் என்றெல்லாம் இருந்தும் கலைஞர் அரசும், ஜெயலலிதா அரசும் ஊழல் நடவடிக்கை களில் ஈடுபட்டத்தைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? கடந்த 40 ஆண்டுகளில் ஊழல் கறை படியாத திராவிடக் கட்சிகளின் களங்கமற்ற ஆட்சியை மக்கள் காண முடிந்ததா? லோக்அயுக்தா அமைப்புக்கு முதலமைச்சரை விசாரிக்கும் அதிகாரம் கூடாது என்று தம்பிதுரையும், மைத்ரேயனும் ஏன் ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர்? பீகார் முதல்வர் நிதிஷ்குமார், முதல்வரையும் விசாரணை வளையத்தில் உள்ளடக்கும் லோக்அயுக்தாவை அமைத்திருப்பதுபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏன் அமைக்கவில்லை? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயம் எதற்கு? இரண்டு திராவிட கட்சிகளிலும் உள்ளவர்கள் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி இறங்கும் மழை நீரை விடத் தூய்மையானவர்களா? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு இடமளிக்காதபடி இருக்க வேண்டும் என்பதுதானே நல்ல அரசியலின் இலக்கணம்!

நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தார்மிக அச்சமும் கிடையாது. சமூக அச்சமும் கிடையாது. இவர்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிட்டாது. பொய் வேடம் புனைந்த இந்தப் போலி மனிதர்களால் நாடாளுமன்றம் நாடக மேடையானதுதான் பரிதாபம்.