Published:Updated:

லோக்பாலுக்கு அதிகாரம்... அரசுக்கு லாலிபாப்!

நாராயணசாமி கிண்டல்!

லோக்பாலுக்கு அதிகாரம்... அரசுக்கு லாலிபாப்!

நாராயணசாமி கிண்டல்!

Published:Updated:
##~##

புதுவையைப் புயல் புரட்டி எடுத்துக்​கொண்டிருந்த கடந்த 29-ம் தேதி, லோக்​பால் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து, கடும் சர்ச்சைப் புயலில் சிக்கிக்கொண்டு திணறினார், புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணசாமி. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல், அடுத்த பட்ஜெட் கூட்டத்​தொடருக்குத் தள்ளி வைத்திருக்கும் நிலையில் நாராயணசாமியைச் சந்தித்தோம். 

''நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தது, அண்ணா ஹஜாரேவின் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட நாடகமா?''

''பத்திரிகைகளின் கேள்விகளுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டு உள்ளோம். ஆனால், அண்​ணா ஹஜாரே பற்றி உங்களுடைய மதிப்பீடு​களையும் கருத்துக்களையும் எங்கள் மீது திணிக்காதீர்கள். அடிப்படை விவரத்தைத் தெரிந்து கொண்டால்தான், உங்கள் கருத்து எத்தகைய தவறு என்பது தெரியவரும். லோக்பால் பிரச்னையை அண்ணா ஹஜாரே தொடங்கியது 2011 ஏப்ரல் மாதம்தான். ஆனால், அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது முக்கியம். 2010-ல் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திலேயே சோனியா

லோக்பாலுக்கு அதிகாரம்... அரசுக்கு லாலிபாப்!

காந்தி, 'ஊழலை அனுமதிக்க முடியாது’ என்றதோடு, லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இருப்பது குறித்தும் பேசினார். இதன்படி, 2011 ஜனவரியிலேயே பிரணாப் முகர்ஜி தலைமையில் ஊழல்களுக்கு எதிரான அமைச்சரவைக் குழுவை பிரதமர் ஏற்படுத்தினார். இந்தக் குழுவில் ப.சிதம்பரம், கபில்சிபல், வீரப்பமொய்லி, சல்மான் குர்ஷித் போன்றவர்கள் இருந்தார்கள்.

ஏற்கெனவே, சட்டத் துறையில் லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டு இருந்தது. 'அந்த மசோதாவை ஆய்வு செய்து முழுமையாக்க வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். நீதித்துறை மாற்றங்கள், அமைச்சர்களுக்குரிய அதிகாரம், அரசின் கொள்முதல் கொள்கையில் வெளிப்படைத்தன்மை, கனிமவளக் கொள்கை, ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது போன்றவை குறித்து இந்தக் குழு மார்ச் மாதம் இடைக்கால அறிக்கையைக் கொடுத்தது. அதனால், சமீபத்திய ஊழல் விவகாரங்களின் அடி ப்படையில்தான் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசு முடிவு எடுத்தது என்று சொல்வது தவறு.

ஊழல் குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கான பாதுகாப்பு மசோதா, பொதுமக்கள் சேவை மற்றும் குறை தீர்ப்பு உரிமை மசோதா, நீதித் துறையின் தரம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா, வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நிதிஉதவி, ஊழல் தடுப்பு மசோதா, அரசின் கொள்முதல் முறைப் படுத்துதல் மசோதா, தேர்தல் சீர்திருத்தம் போன்ற மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதெல்லாம் அண்ணா ஹஜாரேவுக்காக எடுத்த முடிவுகள் அல்ல. ஆகஸ்ட் மாதம் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, அவர்களது கருத்துகளைக் கேட்டோம். அண்ணா ஹஜாரே குழுவுடனும் பேசினோம். பின்னர் இந்த மசோதா, நிலைக்குழுவுக்குச் சென்றது. தனது அறிக்கையை நிலைக்குழு சமர்ப்பித்த பின்னரும், பிரதமர் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்துகளைக் கேட்டார். அந்தக் கருத்துகளின் அடிப்படையில்தான் இப்போது பாராளுமன்றத்தில் லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.''

''லோக்பாலுக்கு கீழ் சி.பி.ஐ-யைக் கொண்டு​வருவதில் என்ன பிரச்னை?''

''வினீத் நாராயணன் வழக்கின் தீர்ப்பில் 'ஒரு  புலன் விசாரணயை சி.பி.ஐ. மேற்கொள்ளும்போது சுப்ரீம் கோர்ட் உட்பட யாருமே தலையிட முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. ஆனால், அவர்களுக்கு நிதி உதவியளிக்கவும் சி.பி.ஐ. சார்பில் நாடாளு​மன்றத்தில் பதில் அளிக்கவும் சி.பி.ஐ-க்குத் தேவையான அதிகாரிகளை நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் இருப்பதையும் அந்தத் தீர்ப்பு உறுதி செய்தது.

சி.பி.ஐ-க்குத் தேவைப்படும் அதிகாரிகளை அனுப்பவோ, கொடுப்பதற்குப் பணமோ லோக்பால் அமைப்பிடம் கிடை​யாது. அரசுதான் இந்த அமைப்பை நடத்த பண வசதியை​யும் மற்ற ஏற்பாடுகளைச் செய்யும் நிலையில், இந்த அமைப்பை லோக்பாலிடம் ஒப்படைக்கச் சொல்வது எதற்காக? சி.பி.ஐ. குறித்து எதிர்க் கட்சிகள் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டுவரும் நிலையில், செய்யவேண்டிய மாற்றங்களுக்கு நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.''

''உங்கள் இருக்கைக்கு வந்து ஆர்.ஜே.டி. உறுப்பினர் காகிதத்தைக் கிழித்தார். இப்படி நடக்கும் என்பதை எதிர்பார்த்துத்தான், நீங்கள் பின் வரிசையில் இருந்து மசோதாவை தாக்கல் செய்ததாகச் சொல்லப்படுகிறதே?''

''அது தவறு. நான் இணை அமைச்சர். கேபினெட் அமைச்சர்கள் உட்காரும் இடத்தில் நான் உட்காருவது இல்லை. அன்றைய தினம், இந்த இரு கட்சிகள் மட்டுமல்ல பி.ஜே.பி., இடதுசாரிகள் போன்ற கட்சிகளும்தான் பிரச்னை செய்தன. இவர்கள் சொல்லும் திருத்தங்களை எல்லாம் செய்துகொண்டே இருக்க முடியுமா? எல்லாக் கட்டுப்பாடுகளையும் லோக்பாலிடம் கொடுத்துவிட்டு அரசாங்கம் லாலிபாப் வைத்துக்கொள்ளவா முடியும்? லோக்பால் என்பது விசாரணைக் குழுதான். பேப்பர்களை அனுப்பும் போஸ்ட் ஆபீஸ் பணிதான். நீதிமன்றத்தின் பணிதான் முக்கியமானது. குற்றமா, இல்லையா என்பது குறித்து நீதிமன்றம்தான் சொல்லும். இந்த நிலையில், லோக்பால் மசோதாவால்தான் ஊழல் ஒழியப் போகிறது என்று சொல்ல முடியாது''.      

- சரோஜ் கண்பத்