Published:Updated:

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை! - பறிபோகிறது பதவி?

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை! - பறிபோகிறது பதவி?
அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை! - பறிபோகிறது பதவி?

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் மீது 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து போராட்டம் நடந்தது. கர்நாடக மாநில எல்லையில் நடந்த போராட்டத்தில் அரசுப் பேருந்துகள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டதாக பாலகிருஷ்ணா ரெட்டி மீது காவல் துறை சார்பில் வழக்கு பதியப்பட்டிருந்தது. இதே வழக்கில் 108 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீண்ட நாள்களாக நடந்தது வந்தது.

சமீபத்தில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

பதவியை இழக்கும் பாலகிருஷ்ணா ரெட்டி?

மக்கள் பிரதிநிதி ஒருவர் இரண்டு ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றால் அவர் வகித்து வரும் பதவி பறிக்கப்படும். இந்த அடிப்படையில் பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேல்முறையீட்டுக்காக தண்டனையை நிறுத்திவைப்பதாக கூறி உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம்

1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது. இதனால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். ஆனால், கள்ளச் சாராயத்தை தடுக்கவேண்டிய போலீஸ் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தது. இதனால், ஜீமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கள்ளச் சாராய பாதிப்பால் கொதித்துபோய் போலீஸுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். ஊர் பொதுமக்கள் அனைவரும் பா.ஜ.க பிரமுகர் கோவிந்தரெட்டி தலைமையில் பெரும் கூட்டம் ஒன்று திரண்டு, கர்நாடக எல்லையில் உள்ள பாகலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தபோது, அவர்களை பாகலூர் பேருந்து நிலையத்திலேயே போலீஸ் தடுத்து நிறுத்துகிறது.

ஆனால், அத்திரம் அடைந்த ஜீமங்கலம் கிராம மக்கள் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்தனர். அப்போது பிரச்னை கலவரமாக மாறி போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்துக் கொளுத்துகின்றனர். அந்தச் சம்பவத்தில் 108 பேர் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். இந்தச் சம்பவத்தில் அப்போது பா.ஜ.க-விலிருந்து தற்போது அ.தி.மு.கவில் இருக்கும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீதும் வழக்கு பதியப்பட்டது.