Published:Updated:

பள்ளிச் சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட கொடூரம்! - மதபோதகருக்கு 30 ஆண்டுகள் சிறை

பள்ளிச் சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட கொடூரம்! - மதபோதகருக்கு 30 ஆண்டுகள் சிறை
பள்ளிச் சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட கொடூரம்! - மதபோதகருக்கு 30 ஆண்டுகள் சிறை

கடலூர் மாவட்டம்  திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்த இரு மாணவிகள் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி காணாமல் போனார்கள். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இரு மாணவிகளும் வடலூரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வரும் சதீஷ்குமார் (28) என்பவரிடம் சிக்கி இருப்பதாகத் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் மாணவிகள் இருவரையும் மீட்டனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர்  மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. இரு மாணவிகளையும் விலைக்கு வாங்கி பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இரண்டு மாணவிகளையும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த மதபோதகர் அருள்தாஸ், லட்சுமி, கலா, ஜெமினா, சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  மேலும், சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகப் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து இந்த வழக்கு கடந்த 4.7.2016-ம் ஆண்டு வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் கடந்த 4-ம் தேதி  நீதிபதி லிங்கேஸ்வரன் 16 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி இன்று அறிவித்தார்.

இதில், திருகண்டேஸ்வரம் ஆனந்தராஜ், விருத்தாசலம் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு 4 ஆயுள் தண்டனையும், ஆனந்தராஜூக்கு ரூ.2.1 லட்சமும், பாலசுப்ரமணியத்துக்கு ரூ.4.1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. விருத்தாசலம் செல்வராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது. விருத்தாசலம் கலா, திட்டக்குடி தனலட்சுமி, வளவனூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த பாத்திமா, ஊமங்கலம் ஸ்ரீதர், திட்டக்குடி மோகன், திட்டக்குடி மதிவாணன் ஆகியோருக்கு  இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கலாவுக்கும், லட்சுமிக்கும் ரூ 4.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வளவனூர் கூட்டுறவு நகர் பாத்திமாவுக்கு, ஊமங்கலம் ஸ்ரீதருக்கும் தலா ரூ.4.61 லட்சமும், மோகனுக்கும், திட்டக்குடி மதிவாணனுக்கும் தலா ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் அன்பழகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3.21 லட்சமும் அபராதமும் விதிக்கப்பட்டது. மதபேதகர் அருள்தாசுக்கு 30 வருடம் சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் கிரிஜா, வடலூர் ஆபத்தாணபுரம் கவிதா, விருத்தாசலம் சர்மிளாபேகம் ஆகியோருக்கு 20 வருடம் சிறைத் தண்டனையும், கிரிஜாவுக்கு, சர்மிளா பேகத்துக்கும் தலா ரூ.20,000, கவிதாவுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் அமுதாவுக்கும் பண்ருட்டி ராதாவுக்கும் தலா 10 வருடங்கள் சிறைத் தண்டனையும், அமுதாவுக்கு ரூ.10,000 அபராதமும், ராதாவுக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் 16 பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில், செந்தில்குமார், நம்மாழ்வார்  ஆகிய 2 பேர் உயிரிழந்து விட்டனர். சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி, ஜெமினா, கபிலன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அதில் பண்ருட்டியைச் சேர்ந்த மகாலட்மி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழங்கறிஞராக செல்வப்பிரியா ஆஜரானார்.