Published:Updated:

‘தகாத உறவு; தந்தை வெட்டிக் கொலை!’ - காட்பாடியில் கல்லூரி மாணவன் வெறிச்செயல்

‘தகாத உறவு; தந்தை வெட்டிக் கொலை!’ - காட்பாடியில் கல்லூரி மாணவன் வெறிச்செயல்
‘தகாத உறவு; தந்தை வெட்டிக் கொலை!’ - காட்பாடியில் கல்லூரி மாணவன் வெறிச்செயல்

காட்பாடியில், தந்தையை வெட்டிக் கொன்ற கல்லூரி மாணவன், ரத்தக்கறை படிந்த கத்தியுடன் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் காட்பாடி, வஞ்சூரைச் சேர்ந்தவர் கண்ணன் (53). இறைச்சி வியாபாரி. இவரின் மனைவி நிர்மலா. இவரது 17 வயது மகன், வேலூரில் உள்ள கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். வியாபாரி கண்ணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் ரகசிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணனின் மனைவி நிர்மலா, உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார்.

தந்தை கண்ணன், சிகிச்சைக்குப் பணம் செலவழித்து தாயை காப்பாற்றவில்லை என்று அவரது மகன் நினைத்தார். தந்தை மீது ஆத்திரமடைந்தார். இதனிடையே, கடந்த 6-ம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்தபோது, தந்தை- மகனுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. ‘‘பெண்களுடன் தவறான உறவு வைத்துக்கொண்டு ஊதாரித்தனமாக சொத்துகளை விற்று, எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டாய். தாய் சாவுக்கும் நீதான் காரணம். மிச்சம் மீதி இருக்கும் வீட்டுமனையை என் பெயரில் எழுதிவை. என் எதிர்காலமாவது நல்லா இருக்கட்டும்’’ என்று தந்தையிடம் சிறுவன் கேட்டுள்ளார்.

‘சொத்தை எழுதிவைக்க முடியாது’ என்று கண்ணன் கூறியதால் ஆத்திரமடைந்த மகன்,  ஆடு வெட்டும் கத்தியால் தந்தை என்றும் பார்க்காமல் கழுத்திலேயே வெட்டினார். இதில், கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தந்தையைக் கொன்ற வெறியுடன் ரத்தக்கறை படிந்த கத்தியை எடுத்துக்கொண்டு, அருகிலிருந்த விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்குச் சென்று சிறுவன் சரணடைந்தார். போலீஸாரிடம் நடந்ததைத் தெரிவித்தார். போலீஸார் கத்தியைக் கைப்பற்றி,சிறுவனைக் கைதுசெய்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கைதுசெய்யப்பட்ட சிறுவனுக்கு 17 வயதே ஆவதால், சிறார் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸார் எடுத்துவருகின்றனர்.