Published:Updated:

பெருமாள் சிலைக்காக கிரிவலப்பாதையில் வெட்டப்பட்ட மரங்கள்! - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

பெருமாள் சிலைக்காக கிரிவலப்பாதையில் வெட்டப்பட்ட மரங்கள்! - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்
பெருமாள் சிலைக்காக கிரிவலப்பாதையில் வெட்டப்பட்ட மரங்கள்! - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

பெங்களூருக்குக் கொண்டுசெல்லப்படும் 380 டன்  எடையுள்ள பெருமாள் சிலை, திருவண்ணாமலை கிரிவலப்பாதை வழியாகச் சென்றபோது, சாலையோரத்தில் உள்ள பழைமை வாய்ந்த புளியமரங்கள் இடையூறாக இருப்பதாகக் கூறி, 4 மரங்கள் வெட்டப்பட்டன. இதனால், சமூக ஆர்வலர்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில், கடந்த 2014-ம் ஆண்டு விரிசல் இல்லாத முழு பாறை தேர்வுசெய்யப்பட்டு, 380 டன்னில் பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்டது. இந்தச் சிலை, இப்போது பெங்களூருக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இந்தச் சிலை தெள்ளார், பேட்டை, திவனூர், திண்டிவனம், வழியாக செஞ்சி சென்றது. அங்கு, தொல்லியல் துறைக்குச் சொந்தமான செஞ்சி கோட்டையின் சுவர் இடையூறாக இருப்பதால், அதை உடைக்க அனுமதி கேட்கப்பட்டபோது, தொல்லியல்துறை மறுத்துவிட்டது.

அதனால், மீண்டும் மேல்மலையனூர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைந்து, சேத்துப்பட்டு அவலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை நகர் பகுதிக்கு நேற்று முன்தினம் வந்து, பைபாஸ் சாலையில் இரவு தங்கியது. இன்று காலை புறப்பட்டு திருவண்ணாமலை ரயில்வே கேட், பெரியார் சிலை, வழியாக நகரின் மையப்பகுதியில் வந்து கிரிவலப்பாதையில் சென்றது. கிரிவலப்பாதையில் செல்லும்போது, நிருதிலிங்கம் அருகே சாலையின் ஓரம் பழைமை வாழ்ந்த புளிய மரங்கள், சிலை செல்வதற்கு தடுக்கும் வகையில் இடையூறாக இருந்தன என்று, அவற்றை ஒரு மணி நேரத்திலேயே வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால், திருவண்ணாமலை சமூக ஆர்வலர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் செந்தமிழ் அரசு, வழக்கறிஞர் பாசறை பாபு ஆகியோர் கூறுகையில், "திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கீடுசெய்து, அதற்கான வேலையைத் தொடங்கியபோது, சாலை ஓரம் உள்ள பழைமையான மரங்களை வெட்ட திட்டமிட்டது. மரங்களை வெட்டாமல் பாதையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து, பசுமைத் தீர்ப்பாயத்தின் மூலம் மரம் வெட்ட தடை வாங்கினோம். மரம் வெட்டாமலேயே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெருமாள் சிலை கிரிவலப்பாதையில் வந்ததால் மரங்களை வெட்டியுள்ளார்கள். இது யார் அனுமதியோடு வெட்டினார்கள், யாருடைய லாபத்துக்காக மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். தமிழக அரசுக்கே மரம் வெட்டவே தடையிருக்கும்போது, ஒரு தனியாருக்குச் சொந்தமான கோயிலுக்குக்காக எடுத்துப்போகும் சிலைக்காக மரம் வெட்ட யார் அனுமதி கொடுத்தது? பழைமையான மரங்களை வெட்டியது கண்டனத்துக்கு உரியது" என்று கொந்தளித்தனர்.