Published:Updated:

மது போதையில் ரகளை - குடியாத்தத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

மது போதையில் ரகளை - குடியாத்தத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
மது போதையில் ரகளை - குடியாத்தத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

குடியாத்தத்தில், பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடையில் வழங்கிய 1000 ரூபாயில் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட வாலிபர், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்தவர், உலகநாதன். இவரின் மகன் உதயசூரியன் (25). மேளம் அடிக்கும் தொழிலாளி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உஷா (22) என்ற பெண்ணை காதலித்து,  திருமணம் செய்து கொண்டார். உஷா, தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாயை, உதயசூரியனும் வாங்கினார். அந்தப் பணத்தை நேற்றிரவு (8-ம் தேதி) எடுத்துக்கொண்டு மது குடிப்பதற்காகத் தன்னுடைய நண்பன் சுமன் என்பவரை அழைத்துக்கொண்டு, குடியாத்தம் காந்தி நகர் டாஸ்மாக் கடைக்குச் சென்றார்.

மது குடித்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த குடியாத்தம் அண்ணா நகரைச் சேர்ந்த பெயின்டர் ராஜா என்பவருக்கும், உதயசூரியனுக்கும் தகராறு ஏற்பட்டது. பெயின்டரை, உதயசூரியன் அடித்து உதைத்தார். பின்னர், அங்கிருந்து உதயசூரியன் தன்னுடைய நண்பன் சுமனை அழைத்துக்கொண்டு பைக்கில் வீட்டுக்குப் புறப்பட்டார். அடி வாங்கிய பெயின்டர் ராஜா, தன்னுடைய உறவினர் ரமேஷை வரவழைத்தார். இருவரும் சேர்ந்து அரிவாளை எடுத்துக்கொண்டு, உதயசூரியனை பைக்கில் விரட்டிச் சென்றனர். ஒரு இடத்தில் பைக்கை வழிமறித்து, உதயசூரியனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிஓடிவிட்டனர்.

பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முயன்றனர். வழியிலேயே உதயசூரியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம்குறித்து, வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் டவுன் போலீஸார், தப்பி ஓடிய கொலையாளிகள் இருவரை தீவிரமாகத் தேடிவருகின்றனர். மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், கணவன் கொலைசெய்யப்பட்ட சம்பவம், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.