Published:Updated:

``என்னோட குழந்தை போலத்தான் பார்த்துக்கிட்டேன்!’’ - ஹரிணியை வைத்திருந்த சங்கீதா கதறல்

``என்னோட குழந்தை போலத்தான் பார்த்துக்கிட்டேன்!’’ - ஹரிணியை வைத்திருந்த சங்கீதா கதறல்
``என்னோட குழந்தை போலத்தான் பார்த்துக்கிட்டேன்!’’ - ஹரிணியை வைத்திருந்த சங்கீதா கதறல்

ஹரிணி கிடைத்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் வெங்கடேசன்-காளியம்மாள் நாடோடி தம்பதியினர். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் இருந்து நேற்று அதிகாலைதான் காஞ்சிபுரம் காவல்துறையினரால் ஹரிணி மீட்கப்பட்டாள்.

இந்த நிலையில் கடப்பாக்கம் காவல்நிலையத்தில் ஹரிணியைக் கண்டதும் வெங்கடேசனும் காளியம்மாளும் அழத்தொடங்கிவிட்டார்கள். பேசுவதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை. காவல்துறைக்குக் கண்ணீரால் நன்றி தெரிவித்த காளியம்மாளும் வெங்கடேசனும் குழந்தையைத் தழுவி முத்தமிட்டு கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் குழந்தையை வீட்டில் வளர்ந்து வந்த சங்கீதாவை அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள். காவல் நிலையத்தில் இருந்த சங்கீதாவிடம் பேச்சு கொடுத்தோம். ``என்னோட சொந்த ஊர் கல்பாக்கம் பக்கத்துல இருக்குற பூந்தண்டலம். மாமியார் வீடு திருப்போரூர்ல இருக்கிறது. மாமியார் வீட்லதான் இருந்தேன். எனக்கு எட்டு வருஷமா குழந்தை இல்லை. நிறைய ஹாஸ்பிட்டல் போய் பரிசோதனை செய்தோம். குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு குறைவா இருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். என்னோட குடும்ப நண்பர்களான பிரகாஷ், வீரபாண்டி இவங்க எனக்கு ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து கொடுப்பதாகச் சொன்னாங்க. ‘குழந்தையை வளர்க்க முடியாமல் நாடோடி சமூகத்தினர் கஷ்டப்படுவாங்க. அவங்க குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம். கொஞ்சம் பணம் கொடுத்தா அவங்க குழந்தையைக் கொடுப்பாங்க’னு சொன்னாங்க. கொஞ்சநாள் கழிச்சு ஹரிணியைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. நானும் அவங்களுக்கு 50,000 பணம் கொடுத்தேன்.

ஹரிணி, அம்மா… அம்மான்னுதான் என்னைக் கூப்பிடுவா. குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்தால் சமத்தா சாப்பிடுவா. அவளுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். புது ட்ரெஸ், செயின், கொலுசெல்லாம் போட்டு என்னோட குழந்தையாகவே பார்த்துக்கிட்டேன். காது குத்தி கம்மல் போட்டோம். ஹரிணி அம்மா அம்மான்னு என்னை கொஞ்சுவா. கொஞ்ச நேரம்கூட என்னைப் பிரிந்து இருக்கமாட்டா. அவளோட செல்ஃபியெல்லாம் எடுத்துக்கிட்டேன். டிவியெல்லாம் எங்க வீட்டுல இல்லை. ரெண்டு மாசம் கழிச்சுதான் அது கடத்தப்பட்ட ஹரிணின்னு எனக்குத் தெரிஞ்சுது. ஆனாலும் குழந்தையைக் கொடுக்க மனசு இல்லை. இதனால் என்னோட கணவருக்கும் எனக்கும் ஒருகட்டத்தில் சண்டை வந்தது. கொஞ்சநாளுக்கு முன்பு குழந்தைக்கு உடம்பு சரியில்லை. இந்தநிலையில அவளைக் கொண்டுபோய் கொடுத்துடலாமான்னுகூட யோசிச்சோம். அப்போதுதான் போலீஸ்லயிருந்து ஹரிணியை அழைச்சிக்கிட்டு போனாங்க. அப்பவும் என்னைப் பார்த்து அம்மான்னுதான் அழத் தொடங்கினாள்” என்கிறார் கண்ணீர் ததும்ப.