Published:Updated:

`பணத்துடன் வீட்டுக்கு வருவார்; ஆடம்பரமாக வாழ கடத்தினேன்’ - ஒடிசா பெண் வாக்குமூலம் 

`பணத்துடன் வீட்டுக்கு வருவார்; ஆடம்பரமாக வாழ கடத்தினேன்’ - ஒடிசா பெண் வாக்குமூலம் 
`பணத்துடன் வீட்டுக்கு வருவார்; ஆடம்பரமாக வாழ கடத்தினேன்’ - ஒடிசா பெண் வாக்குமூலம் 

சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எஃப் பகுதியில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வீட்டுக்கு வந்த கட்டட மேஸ்திரியை ஸ்கெட்ச் போட்டு கடத்தியதாக ஒடிசா பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  

 சென்னை ஐ.சி.எஃப் தெற்கு காலனி, 4வது குறுக்குத் தெருவில் ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டட நிறுவனத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், ஐ.சி.எஃப் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `எங்கள் கட்டுமான நிறுவனத்தில் தலைமை மேஸ்திரியாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அபிஜித் தாஸ் (45) கடந்த 6 மாதங்களாகப் பணியாற்றிவந்தார். அவர் நொளம்பூரிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க ஐ.சி.எஃப்-க்கு வருவார். சம்பவத்தன்று வந்த அவரைக் காணவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 

புகாரின் பேரில் ஐ.சி.எஃப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராயப்பன் தலைமையிலான போலீஸார் அபிஜித் தாஸை தேடினர். போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சனிக்கிழமை இரவு ஐசிஎஃப் பகுதிக்கு வரும் மேஸ்திரி அபிஜித் தாஸ், அங்குள்ள ஒரு வீட்டில்  தங்கிவிட்டு மறுநாள் சம்பளத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வார். அதுபோலதான் அவர், கடந்த 5-ம் தேதி பணத்துடன் வந்துள்ளார். அதன் பிறகு வழக்கமாக அவர் தங்கும் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதையடுத்துதான் அவர் மாயமாகியுள்ளார். மேலும், அந்த வீட்டில் உள்ளவர்களும் தலைமறைவாகி இருந்தனர். இதனால் அவர்கள் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்தோம். அப்போது அந்த வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த ஜோஸ்னா என்ற பெண் மற்றும் அவருடன் வேலைபார்ப்பவர்களின் செல்போன் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தனர். அது, விருகம்பாக்கத்தை காட்டியது. இதற்கிடையில் அபிஜித் தாஸ் என்பவரின் ஏ.டி.எம் கார்டிலிருந்து பணம் எடுக்கப்பட்ட தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. உடனே அந்த ஏ.டி.எம் மையத்துக்குச் சென்றபோது கட்டுமான நிறுவனத்தில் வேலைபார்ப்பவர்களில் இருவர் பணத்தை எடுக்கும் வீடியோ காட்சிகள் கிடைத்தன. 

 விருகம்பாக்கத்துக்குச் சென்று விசாரித்தபோது அபிஜித் தாஸை ஒரு வீட்டுக்குள் சிறைப்பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அந்த வீட்டுக்குள் சென்று அவரை மீட்டோம். தொடர்ந்து அந்த வீட்டிலிருந்தவர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தோம். அவர்களிடம் விசாரித்தபோது, பணத்துக்காக அபிஜித் தாஸை கடத்தியதாகக் கூறினர். 

வாரந்தோறும் சனிக்கிழமை ஐ.சி.எஃப் பகுதிக்கு வரும் அபிஜித் தாஸ், ஒடிசாவைச் சேர்ந்த ஜோஸ்னா வீட்டில்தான் இரவு தங்குவார். கட்டடத் தொழிலாளர்களுக்குச் சமையல் செய்து கொடுக்கும் வேலையை ஜோஸ்னா செய்துவந்தார். அபிஜித் தாஸ் மேஸ்திரி என்பதால் ஜோஸ்னாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அபிஜித் தாஸிடம் பணம் அதிகமாக இருந்ததால் அதைப் பறிக்க ஜோஸ்னா திட்டமிட்டார். இதற்காக அவரின் கணவரும் காவலாளியுமான ராகேஷ் குமார் தாஸ் மற்றும் கட்டுமான நிறுவன சூப்பர்வைசர் திருலோச்சம், கட்டுமான தொழிலாளர்கள் அஸ்ஸாமைச் சேர்ந்த ஜமாலுதீன், பிட்டூ, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் திலகாம் ஆகியோரிடம் தன்னுடைய திட்டத்தை ஜோஸ்னா கூறினார். உடனே கிண்டியைச் சேர்ந்த சரவணன் என்ற கார் டிரைவர் மூலம் அபிஜித் தாஸை காரில் 6-ம் தேதி அதிகாலை கடத்தியுள்ளனர். 

சம்பவத்தன்று அபிஜித் தாஸ் மற்றும் ஜோஸ்னா ஆகியோர் மட்டும் வீட்டுக்குள் தங்கியிருந்துள்ளனர். அதிகாலையில் வீட்டின் கதவை ராகேஷ் குமார் தாஸ் மற்றும் சிலர் தட்டியுள்ளனர். அப்போது, குடிபோதையில் இருந்துள்ளார் அபிஜித் தாஸ். உடனே அவரிடம் தகராறு செய்த ராகேஷ் குமார் தாஸ் மற்றும் சிலர் காரில் அவரைக் கடத்தி விருகம்பாக்கத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அபிஜித் தாஸ் கையிலிருந்த 10,000 ரூபாய் மற்றும் அவரின் ஏடிஎம் கார்டு மூலம் 20,000 ரூபாய் ஆகியவற்றை எடுத்துள்ளனர். வெறும் 30,000 ரூபாய்க்காகத்தான் இந்தளவுக்குக் கடத்தல் கும்பல் ரிஸ்க் எடுத்துள்ளனர். அபிஜித் தாஸைக் கடத்தியவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர். 

 ஜோஸ்னாவிடம் போலீஸார் விசாரித்தபோது, ``கட்டட மேஸ்திரி அபிஜித் தாஸிடம் எப்போதும் பணம் அதிகமாக இருக்கும். அவ்வப்போது எனக்கு செலவுக்குப் பணம் தருவார். இதனால் அவரைக் கடத்தி பணத்தைப் பறித்தால் ஆடம்பரமாக வாழலாம் என்றுதான் திட்டம்போட்டோம். ஆனால், சிக்கிக்கொண்டோம்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.