Published:Updated:

நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிணி!- சான்றுகள் சரிபார்ப்புக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிணி!- சான்றுகள் சரிபார்ப்புக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிணி!- சான்றுகள் சரிபார்ப்புக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

அணைக்கட்டு காவல்நிலையம் அருகே நள்ளிரவில் கடத்தப்பட்ட சிறுமி ஹரிணி காவல்துறையினரால் மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். குழந்தை பெற்றோருடன் இருந்தாலும் சட்டபூர்வமாகச் சிறுமியை ஒப்படைக்கும் முயற்சியில் காஞ்சிபுரம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து இன்று மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமியை ஆஜர்படுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதியைச் சேர்ந்த நாடோடி தம்பதியினர் வெங்கடேசன்-காளியம்மாள். இவர்களின் இரண்டு வயது மகள் ஹரிணி அணைக்கட்டு காவல்நிலையம் அருகே கடந்த 15.9.2018 அன்று இரவு கடத்தப்பட்டார். இந்த நிலையில், தாய் காளியம்மாள் ‘ஹரிணி கிடைக்கும் வரை நான் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன்’ எனக் காவல்நிலையத்தின் அருகிலேயே தங்கிவிட்டார். காளியம்மாளின் மனஉறுதியால் ஹரிணி கடத்தல் சம்பவத்தில் காவல்துறையினருக்கு பெறும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஹரிணியைத் தேடும் முயற்சியில் காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிணி காணாமல் போனபோது பதிவான சிசிடிவி படங்களை வெளியிட்டனர். அதில் உள்ள நபர்களைக் கண்காணித்த காவல்துறையினர் கடந்த எட்டாம் தேதி ஹரிணியை திருப்போரூரில் மீட்டனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குழந்தை கிடைத்ததும் வெங்கடேசனுக்கும் காளியம்மாளுக்கும் தகவல் சொல்லப்பட்டு, கடப்பாக்கம் காவல்நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்பு சிறுமி ஹரிணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஹரிணி பெற்றோருடன் இருந்து வருகிறார். சிறுமி காணாமல் போனபோது அணைக்கட்டு காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து வழக்கை முடித்து சட்டப்படி சிறுமியைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக இன்று காலை ஹரிணியைப் பெற்றோருடன் அணைக்கட்டு காவல்துறையினர் மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால், எவ்வித அடையாளச் சான்றுகளையும் வெங்கடேசன் கொண்டு வரவில்லை. இதைத் தொடர்ந்து உத்தரமேரூர் அருகே உள்ள மானாமதிக்கு வெங்கடேசனை அழைத்துச் சென்று ஹரிணியின் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் கார்டு ஆகியவற்றைக் காவல்துறையினர் கொண்டுவந்தனர். பின்பு நீதிபதி ப்ரீத்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சான்றுகள் சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன், காளியம்மாளிடம் விசாரணை நடத்தி ஹரிணியை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

சிறுமி காணாமல் போனதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர் அருள் தேவசகாயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குக்காகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரிணி நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.