Published:Updated:

விதிகளை மீறி வடமாநிலங்களுக்குப் பட்டாசு ஏற்றிச்சென்ற லாரிகள் பறிமுதல் - வருவாய்துறை நடவடிக்கை!

விதிகளை மீறி வடமாநிலங்களுக்குப் பட்டாசு ஏற்றிச்சென்ற லாரிகள் பறிமுதல் - வருவாய்துறை நடவடிக்கை!
விதிகளை மீறி வடமாநிலங்களுக்குப் பட்டாசு ஏற்றிச்சென்ற லாரிகள் பறிமுதல் - வருவாய்துறை நடவடிக்கை!

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 2 மாதங்களுக்கும் மேலாகப் பட்டாசு ஆலைகள் செயல்படாத நிலையில் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை ஏற்றிச் சென்ற 3 லாரிகளை வருவாய்த்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு ஆலைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது. பசுமை பட்டாசுகளையே உற்பத்தி செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடு காரணமாகக் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக உற்பத்தி நடைபெறவில்லை. இந்நிலையில் சிவகாசி பகுதியிலிருந்து லாரிகளில் பட்டாசு ஏற்றிச் செல்வதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகாசி நகர் பகுதியிலிருந்து பட்டாசு ஏற்றி வந்த 3 லாரிகளை சோதனையிட்டனர். பின்னர் அந்த 3 லாரிகளையும் கைப்பற்றிய வருவாய்த்துறையினர் அவற்றை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர். பேரியம் நைட்ரேட் பயன்படுத்த உச்ச நீதிமன்றத் தடை விதித்ததால், தற்போது ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 3 லாரிகளில் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை வடமாநிலங்களுக்கு ஏற்றிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இவை அனைத்தும் தீபாவளி பண்டிகைக்கு முன் உற்பத்தி செய்யப்பட்டு குடோனில் இருப்பு வைத்திருந்தவையா அல்லது விதிமுறைகளை மீறி உற்பத்தி செய்யப்பட்டவையா என்றும், உரிய ஆவணங்களோடு கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து வருவாய்த்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக உற்பத்தி இல்லாததால் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில், தற்போது வடமாநிலங்களுக்கு 3 லாரிகளில் பட்டாசு ஏற்றிச் சென்ற சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.