Published:Updated:

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு கூடுதல் வழக்கறிஞர் புதிய மனு! மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

``இந்திய சாட்சியல் சட்டம் 27-ன் படி கைதானவர்கள் மறைத்து வைத்திருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்காதபோது, சாட்சி மறைத்து வைத்திருந்ததாகச் சொல்வதைப் பதிவு செய்யக்கூடாது''.

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு கூடுதல் வழக்கறிஞர் புதிய மனு! மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!
கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு கூடுதல் வழக்கறிஞர் புதிய மனு! மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கியச் சாட்சியாக அவருடைய தோழி ஸ்வாதி கருதப்பட்ட நிலையில், அவர் பிறழ் சாட்சியாக வாக்குமூலம் அளித்துச் சென்றார். தற்போது இவ்வழக்கின் அரசு கூடுதல் வழக்கறிஞராக ப.பா.மோகன் ஆஜராகி இருக்கிறார். இந்நிலையில் பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதி அவருடைய அம்மா செல்வி உட்பட முக்கியச் சாட்சிகளை மறு விசாரணை செய்ய நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்திருப்பது யுவராஜ் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் 30.8.2018-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜின் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் கோகுல்ராஜ் தாய் சித்ரா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அரசுத் தரப்பு கூடுதல் மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன் முதல்முறையாக நேற்று ஆஜரானார். யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜு ஏனோ வரவில்லை. அவர்கள் தரப்பில் அரவிந்த், பிரேம் ஆஜரானார்கள். அரசுத் தரப்பு சாட்சியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கம்போல யுவராஜும், அவருடைய ஆட்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வி.ஏ.ஓ. வாக்குமூலம்

திருச்செங்கோடு டவுன் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கூண்டேறி சாட்சியம் அளித்தார். ``கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதையடுத்து சதீஷை அழைத்துக்கொண்டு நான், என் உதவியாளர், டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மேடம் மற்றும் அவருடைய டீமோடு கொக்கராயன்பேட்டை கிழக்குத் தெருவில் உள்ள ரகு வீட்டுக்கும், சிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள ரகுவின் சகோதரர் ரஞ்சித் வீட்டுக்கும், பள்ளிப்பாளையம் தாஜ் நகரில் உள்ள செல்வராஜ் வீட்டுக்கும், எஸ்.பி.பி காலனியில் உள்ள சந்திரசேகர், அவருடைய மனைவி ஜோதிமணி குடியிருந்த வீட்டுக்கும் சென்றோம். சதீஷ் இவர்களை அடையாளம் காட்டினார். பிறகு அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் பெற்றோம். அவர்கள்  கோகுல்ராஜ் கொலைக்குப் பயன்படுத்திய செல்போன்கள், டூவீலர் வாகனங்களை மறைத்து வைத்திருந்தார்கள். அவற்றை டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மேடம் கைப்பற்றி அவர்களைக் கைது செய்தார்'' என்றவரிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி வி.ஏ.ஓ மணிவண்ணனிடம் ஆவணங்களைக் காட்டி உறுதிசெய்தார்.

ஆட்சேபனை நிராகரிப்பு:

அப்போது யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் குறுக்கிட்டு நீதிபதியைப் பார்த்து, ``இந்திய சாட்சியல் சட்டம் 27-ன்படி கைதானவர்கள் மறைத்து வைத்திருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்காதபோது, சாட்சி மறைத்து வைத்திருந்ததாகச் சொல்வதைப் பதிவு செய்யக் கூடாது'' என்றார். அதற்கு நீதிபதி, ``அதை நீங்க இப்ப சொல்லக் கூடாது. விவாதத்தின்போது சொல்லுங்கள்'' என்றார்.
உடனே இருக்கையைவிட்டு எழுந்துவந்த வழக்கறிஞர் ப.பா மோகன், ``எதிர்தரப்பு வழக்கறிஞரின் ஆட்சேபனையை ஏற்றுக்கொள்ளக் கூடாது. சாட்சியிடம் குறுக்கீடு செய்யும்போது மட்டுமே இதுபற்றிக் கேட்டுக்கொள்ள வேண்டும்'' என்றார். அதையடுத்து யுவராஜ் தரப்பின் ஆட்சேபனையை நீதிபதி நிராகரித்தார்.

பைக் மிஸ்ஸிங்!

குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களை மணிவண்ணன் அடையாளம் காட்ட, நீதிபதி பார்வையிட்டுப் பதிவு செய்துகொண்டார். அதேபோல வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை மணிவண்ணன் அடையாளம் காட்டியபோது 4 பைக்குகளில் ஒரு பைக் மிஸ்ஸிங் ஆனதை அடுத்து... நீதிபதி, ``இன்னும்  ஒரு பைக் எங்கே?'' என்று கேட்க சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும், ``அந்த பைக்கின் உரிமையாளர் கொண்டுவரவில்லை''என்றார்கள். அதற்கு நீதிபதி, ``நாளைக்கு பைக்கைக் கொண்டுவந்து காட்டவேண்டும்'' என்று கூறிவிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்து வழக்கை இன்று தள்ளிவைத்தார்.

ஸ்வாதியிடம் மறு விசாரணை:

சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த வழக்கின் மிக முக்கியச் சாட்சியாக கோகுல்ராஜின் தோழி ஸ்வாதியைக் கருதினார்கள். அவருடைய வாக்குமூலம் ஏற்கெனவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164-ன்படி நீதிபதி முன்பு பதிவுசெய்யப்பட்டது என்பதால், பிறழ் சாட்சியாக மாற வாய்ப்பில்லை என்று முழுமையாக நம்பிய நிலையில், கடந்த 10.9.2018-ம் தேதி ஆஜராகி கூண்டேறி நீதிபதியைப் பார்த்து...
``கோகுல்ராஜ் என்னோடு கல்லூரியில் படித்திருக்கலாம். ஆனால், சரியாகப் பார்த்ததில்லை. திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுநாள் வரை போனதில்லை'' என்றும் கோயிலில் பதிவான வீடியோவைப் பார்த்து, ``இந்த உருவம் நான் இல்லை'' என்று கூறி 164-ன்படி கொடுக்கப்பட்ட வாக்குமூலத்துக்குச் சிறிதளவும் சம்பந்தம் இல்லாமல் வாக்குமூலம் அளித்தார்.

இதனால் அதிர்ந்துபோன சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஸ்வாதியைக் குற்றவாளியாகச் சேர்க்கவும் முடிவுசெய்தார்கள். இந்த நிலையில் புதிதாக அரசு கூடுதல் வழக்கறிஞராக ஆஜராகியிருக்கும் ப.பா.மோகன் இவ்வழக்கில் பிறழ் சாட்சியமாக மாறிய ஸ்வாதி, அவருடைய அம்மா செல்வி, யுவராஜுக்கு கார் வாங்கிக் கொடுத்த புரோக்கர் செல்வி என்கிற செல்வரத்தினம், யுவராஜ் காரின் முன்னாள் உரிமையாளர் ரமேஷ்குமார், எஸ்.டி.டி பூத் உரிமையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை மீண்டும் மறு விசாரணை நடத்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனால் யுவராஜ் தரப்பினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.