Published:Updated:

மெட்ரோவில் நடக்கும் பிக் பாக்கெட் வழக்கில் 94% பேர் பெண்கள் -அதிர்ச்சி தரும் கைது எண்ணிக்கை

மெட்ரோவில் நடக்கும் பிக் பாக்கெட் வழக்கில் 94% பேர் பெண்கள்  -அதிர்ச்சி தரும் கைது எண்ணிக்கை
மெட்ரோவில் நடக்கும் பிக் பாக்கெட் வழக்கில் 94% பேர் பெண்கள் -அதிர்ச்சி தரும் கைது எண்ணிக்கை

நாட்டின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. நகரத்தின் வாகன நெரிசலைக் குறைக்கவும் மக்களுக்கு எளிதான பயண வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இந்த நிலையில், டெல்லி மெட்ரோவில் 2017-ம் ஆண்டில் அதிகப்படியான பிக் பாக்கெட் புகார்கள் வர மத்திய பாதுகாப்புப் படை, அதிரடியாகப் பாதுகாப்பை அதிகப்படுத்தியது. இதன் காரணமாக பயணிகளிடம் பிக் பாக்கெட் அடிக்கும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிசிடிவி கேமராக்கள் பெரிதும் பயன்பட்டதாக தெரிவிக்கின்றனர் மத்திய பாதுகாப்புப் படையினர். 

இந்த நிலையில், கைதானவர்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்ததில் 2017-ம் ஆண்டில் சுமார் 1,298 பேர் பிக்பாக்கெட் வழக்கில் கைதாகியுள்ளனர். ஆனால், இந்த ஆண்டில் அது 498 ஆகக் குறைந்துள்ளது. இதில் 470 பேர் பெண்கள். 28 பேர் ஆண்கள். அதாவது டெல்லி மெட்ரோவில் பிக்பாக்கெட் வழக்கில் பிடிபட்டதில் 94 சதவிகிதம் பேர் பெண்கள். 

இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ``பிக்பாக்கெட் அடிப்பவர்கள் கூட்டமில்லா ரயில் நிலையங்களில் ஏறி கூட்டமாக இருக்கும் ரயில் நிலையத்தில் பயணிகளுடன் இறங்கி விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் குழந்தைகளைக் கையில் வைத்துக்கொண்டு ரயில் ஏறுகின்றனர். மாதம் சராசரியாக 40 பேர் பிக்பாக்கெட் வழக்கில் கைதாகிறார்கள்” என்கின்றனர். 

இவர்கள் பர்ஸ், லேப்டாப், செல்போன்கள்  முதலியவற்றைத் திருடுவதாக புகார்கள் பதிவாகியுள்ளன. ஆண்களும் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டாலும், பெண்கள்தான் அதிகம் சிக்குகிறார்கள் என்கின்றனர் அதிகாரிகள். இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகத்தின் டி.சி.பி கூறுகையில்,  ``எங்கு அதிக பாதுகாப்பு தேவை என்பதை ஆலோசித்து வருகிறோம். பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.