Published:Updated:

வீடியோ காலால் சிக்கிய செல்போன் திருடன் - ஜெயலலிதா சமாதியில் திருடியதாக வாக்குமூலம் 

வீடியோ காலால் சிக்கிய செல்போன் திருடன் - ஜெயலலிதா சமாதியில் திருடியதாக வாக்குமூலம் 
வீடியோ காலால் சிக்கிய செல்போன் திருடன் - ஜெயலலிதா சமாதியில் திருடியதாக வாக்குமூலம் 

ஜெயலலிதா சமாதியில் செல்போன் திருடியவரை வீடியோ காலில் பேச வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 6 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் கட்டுமானப்பணிகள்  நடந்து வருகின்றன. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி, பெத்தநாயப் பள்ளியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் ஜே.சி.பி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணி முடிந்து அங்குள்ள ஷெட்டில் தூங்கினர். அப்போது வெள்ளையப்பன் மற்றும் அவருடன் தங்கியிருந்த 4 தொழிலாளர்களின் செல்போன்கள் மாயமாகியிருந்தன. அதைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

ஒரே நேரத்தில் 4 செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெள்ளையப்பன்  அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் ஒரே நபர், இரவு நேரத்தில் ஷெட்டுக்குள் நுழைந்து செல்போன்களைத் திருடியது தெரியவந்தது. அவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். 

விசாரணையில் அவர் பெயர் நல்லிவீரன். கோவை பீளமேடு, கருப்பன்னகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரைப் பிடிக்க போலீஸாரும் வெள்ளையப்பனும் திட்டமிட்டனர். தொடர்ந்து வெள்ளையப்பன், தன்னுடை செல்போன் நம்பருக்கு வீடியோ கால் செய்தார். அதை எடுத்த நல்லிவீரன், `நீங்கள் யாரு' என்று பேசினார். அப்போது வெள்ளையப்பன், `நீங்கள் வைத்திருப்பது என்னுடைய செல்போன்' என்று கூறினார். இதனால் வீடியோ காலை நல்லிவீரன் துண்டித்துவிட்டார். இருப்பினும் அவருடைய முகம், செல்போன் சிக்னல் ஆகியவற்றை போலீஸார் கண்டறிந்தனர். உடனடியாக நல்லிவீரன் பதுங்கியிருந்த இடத்துக்குச் சென்று அவரை மடக்கிப்பிடித்தனர். 

 அவரிடம் விசாரித்தபோது, ``சென்னை மெரினா பகுதியில் நள்ளிரவு நேரங்களில் செல்போன்களைத் திருடுவேன். அதை விற்று ஜாலியாக வாழ்வேன். சம்பவத்தன்றுகூட அண்ணா சமாதிக்குள் சென்றேன். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து 4 செல்போன்களை எடுத்துச் சென்றேன். அந்த செல்போனை விற்க முடிவு செய்திருந்தேன். அந்தச் சமயத்தில்தான் வீடியோ கால் வந்தது. சாதாரண கால் என்றால் எடுத்திருக்க மாட்டேன். வீடியோ கால் அழைப்பை கட் பண்ணிவிடதான் நினைத்தேன். ஆனால், அழைப்பை எடுத்துவிட்டேன். இதனால் சிக்கிக்கொண்டேன்'' என்று வாக்குமூலமாக கொடுத்துள்ளார். அவரிடமிருந்து 6 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

செல்போன் திருடிய திருடன் வீடியோ கால் அழைப்பால் சிக்கிய சம்பவம் சென்னை போலீஸார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.