Published:Updated:

`வேலூரில் அஜித் ரசிகர்களை வெட்டிய இளைஞர் கைது!’ - 3 பேருக்கு வலைவீச்சு

`வேலூரில் அஜித் ரசிகர்களை வெட்டிய இளைஞர் கைது!’ - 3 பேருக்கு வலைவீச்சு
`வேலூரில் அஜித் ரசிகர்களை வெட்டிய இளைஞர் கைது!’ - 3 பேருக்கு வலைவீச்சு

வேலூரில், விஸ்வாசம் திரையிடப்பட்ட தியேட்டரில் இருக்கை பிடிக்கும் தகராறில், அஜித் ரசிகர்களைக் கத்தியால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் மூன்று பேரை, போலீஸார் தேடி வருகிறார்கள்.

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. தியேட்டர்களில், அதிகாலை 3.30 மணிக்குச் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. வேலூரில் உள்ள அலங்கார் தியேட்டரில், படம் பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் நள்ளிரவே குவிந்தனர். அன்று அதிகாலை 1.30 மணிக்குத் தியேட்டருக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, இருக்கை பிடிக்கும் தகராறில் ரசிகர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில், காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் கொணவட்டம் தேவி நகரைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும், ஒரு கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த ரசிகர்கள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, வேலூர் தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அஜித் ரசிகர்களை வெட்டியவர்கள், தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பிரதாப் தலைமையிலான 4 பேர் கும்பல் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கெனவே, லாரியை மடக்கி வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கு உட்படப் பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தக் கும்பல், தங்களை எதிர்ப்பவர்களைத் தாக்குவதற்காக, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை எப்போதும் வைத்திருப்பதும், சம்பவத்தன்று அஜித் படம் பார்ப்பதற்காகச் சென்றபோது இடுப்பு மற்றும் முதுகில் மறைத்தபடி கூர்மையான பெரிய கத்திகளை தியேட்டருக்குள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இந்தக் கும்பலைச் சேர்ந்த வேலூர் காகிதப்பட்டறை ம.பா.சாரதி நகரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் வெங்கட்ராமன் (29) என்பவரை நேற்றிரவு போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு வெங்கட்ராமன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பிரதாப் உட்பட மேலும் மூன்று பேரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.