Published:Updated:

வாட்ஸ்அப்பில் பேரம் பேசியது போலீஸ் ஏசி முத்தழகுதான்! - விஜிலென்ஸ் தகவல்

வாட்ஸ்அப்பில் பேரம் பேசியது போலீஸ் ஏசி முத்தழகுதான்! - விஜிலென்ஸ் தகவல்
வாட்ஸ்அப்பில் பேரம் பேசியது போலீஸ் ஏசி முத்தழகுதான்! - விஜிலென்ஸ் தகவல்

சில மாதங்களுக்கு முன், போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரும் வாலிபர் ஒருவரும் வழக்கு தொடர்பாக பேரம் பேசியதாக வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியானது. அதில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையில் உதவி கமிஷனராக பணியாற்றியவர் முத்தழகு. இவர் தற்போது ஆவடி பட்டாலியனில் பணியாற்றுகிறார். தேனாம்பேட்டையில் இவர் பணியாற்றிய சமயத்தில் வாட்ஸ்அப்பில் முத்தழகும் வாலிபரும் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி வைரலானது. இதுதொடர்பாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அந்த ஆடியோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வுக்குட்படுத்தினர். தற்போது வெளியாகியுள்ள ஆய்வின் முடிவில் பேசியது போலீஸ் உதவி கமிஷனர் முத்தழகு என்பது உறுதியாகியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர். 

வாட்ஸ்அப்பில் பேரம் பேசிய ஆடியோ வெளியானதும் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர், 'அது தன்னுடைய குரல் அல்ல. நீண்ட காலமாக போலீஸ் துறையில் நேர்மையாக பணியாற்றும் நான், இப்படி வெளிப்படையாக பேசுவேனா' என்று கூறினார். ஆனால், தற்போது ஆய்வில் அவரின் குரல்தான் என்று உறுதியாகியுள்ளதாக விஜிலென்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நெல்லையில் பாஸ்கர சேதுபதி என்பவர் மிரட்டப்பட்டு ரூ.32 கோடி பறிப்பு  வழக்கில் 4 பேரை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அதில் முக்கிய குற்றவாளி ஒருவர் சிக்கவில்லை. இந்தச்சமயத்தில்தான் குற்றவாளி தரப்பில் பேசிய வாலிபரும் தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் முத்தழகும் போனில் பேரம் பேசியுள்ளனர். 5 லட்சம் ரூபாய் முதல் கட்டமாக பேரம் படிந்துள்ளது. மூன்று ஆடியோக்கள் வெளியாகின. அதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் ஆடியோவை ஆய்வுக்குட்படுத்தினோம். அது, உதவி கமிஷனரின் குரல் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்" என்றார்.