Published:Updated:

5 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்: காவல்நிலையம் முற்றுகை; பதற்றம்

5 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்: காவல்நிலையம் முற்றுகை; பதற்றம்
5 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்: காவல்நிலையம் முற்றுகை; பதற்றம்

கிருஷ்ணகிரி: ஐந்து வயதுடைய இரண்டு சிறுமிகளை ஐந்து சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமிகள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது காமநாயக்கன்பேட்டை. மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமிகள் இரண்டு பேர் அந்த பகுதியில் கடந்த 5ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வெவ்வேறு பகுதியை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட 5 சிறுவர்கள் இரண்டு சிறுமிகளையும் வனப்பகுதி்க்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு சிறுமிகளுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, சிறுமிகள் இரண்டு பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் 3 சிறுவர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இரண்டு பேர் தலைமறைவானார்கள்.

இதனிடையே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகள் வன்னியர், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் நான்கு பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

##~~##
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும் எட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் சூளகிரி காவல்நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி. செந்தில் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சாதி மோதல்கள் எதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
எஸ்.ராஜாசெல்லம்