Published:Updated:

விடுதிக் கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி! - அவமானத்தால் மறைக்கப்பட்ட கொடுமை

விடுதிக் கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி! - அவமானத்தால் மறைக்கப்பட்ட கொடுமை
விடுதிக் கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி! - அவமானத்தால் மறைக்கப்பட்ட கொடுமை

ஒடிஷா மாநிலம் கந்தமால் என்ற மாவட்டத்தில் உள்ள தாரிங்கிபடியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மேம்பாட்டுத்துறை சார்பில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. கந்தமால் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவர்கள், இந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அந்தப் பள்ளியில் படித்துவரும் 8-ம் வகுப்பு சிறுமி ஒருவர் கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார். அதன் பிறகு, விடுதிக் கழிவறையில் அந்தச் சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் விடுதி நிர்வாகத்தினரிடம் தெரிவிக்க, உடனடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த சிறுமியின் உறவினர்கள், பள்ளிக்கு முன் உள்ள நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பிறகு, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் அதிகாரிகள், உறவினர்களைச் சமாதானப்படுத்தி சிறுமி விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதன் இறுதியில், கடந்த எட்டு மாதத்துக்கு முன்பு, அந்தச் சிறுமி தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பயம் மற்றும் அவமானம் காரணமாக இந்த விஷயத்தைச் சிறுமி வெளியில் கூறாமல் மறைத்துள்ளார். இதற்குக் காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டதாக கந்தமால் காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரதிக் சிங் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியும் குழந்தையும் நலமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விடுதியில், மாணவிகளின் நிலை அறியாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, அங்கு பணியாற்றிய 6 பேரை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.