Published:Updated:

``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம் 

``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம் 
``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம் 

`சம்பவத்தன்று ரோஜாவும் அவரின் குழந்தையும் தூங்கிக்கொண்டிருந்தனர். வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்று ரோஜாவை பாலியல் வன்கொடுமை செய்தேன்' என்று வீரக்குமார் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டி. இவரின் மனைவி ரோஜா. இவர்களுக்கு பார்த்திபன் (5), சுஜாதா (3) ஆகிய இரண்டு குழந்தைகள். பொங்கலையொட்டி ஊசி, பாசி விற்பனை செய்ய பார்த்திபனை அழைத்துக்கொண்டு அருண்பாண்டி புதுச்சேரிக்குச் சென்றுவிட்டார். வீட்டில் ரோஜாவும் சுஜாதாவும் இருந்தனர். 

இவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இறந்துகிடந்தனர். அருகில் கிடந்த கிரைண்டர் கல்லிலும் ரத்தக்கறை இருந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் ஜெயராமன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திர பிரசாத், சண்முகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பிறகு ரோஜா, சுஜாதா ஆகியோரின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 ரோஜா, சுஜாதா மரணம் குறித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் சந்தேகத்தின்பேரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்துக்குப் போலீஸ் மோப்ப நாய் ஜான்ஸி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஜான்ஸி சம்பவ இடத்திலிருந்து அந்தப் பகுதியில் உள்ள பிரியாணிக் கடை வரை ஓடிச் சென்றது. பிறகு, நேராக போலீஸ் நிலையத்தின் கம்ப்யூட்டர் அறைக்குச் சென்றது. அங்கிருந்த வீரக்குமார் என்பரை கவ்விப்பிடித்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் வீரக்குமார். இன்னும் திருமணமாகவில்லை. இவர், ஆவடியில் ரோஜாவின் வீட்டின் அருகில் தங்கியிருந்துள்ளார். வீடு, வீடாகச் சென்று குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரராக வேலைபார்த்து வந்துள்ளார். குடித்துவிட்டு அடிக்கடி அந்தப் பகுதியில் தகராறு செய்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் ரோஜாவின் கணவர் அருண்பாண்டி வீட்டில் இல்லை என்று வீரக்குமாருக்குத் தெரிந்துள்ளது. சம்பவத்தன்று குடிபோதையில் ரோஜாவின் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரின் வீட்டில் கதவு இல்லை. உள்ளே நுழைந்தபோது ரோஜா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவர் மீது ஆசை வந்தவுடன் அருகில் இருந்த கிரைண்டர் கல்லை ரோஜாவின் தலையில் போட்டுள்ளார். இதில் தலைநசுங்கி அவர் உயிருக்குப் போராடியுள்ளார். இந்தச் சமயத்தில் ரோஜாவிடம் அவர் தவறாக நடந்துள்ளார். அதன் பிறகு அருகில் படுத்திருந்த சுஜாதாவின் மீது கிரைண்டர் கல் விழுந்ததில் அவரும் இறந்துள்ளார்.  

வீரக்குமார் அணிந்திருந்த சட்டையில் ரத்தகறை படிந்ததால் ரோஜாவின் வீட்டிலேயே குளித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது வீரக்குமார் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே, அவரைப் பிடிக்கச் சென்றோம். ஆனால், அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் கீழே விழுந்ததில் அவரின் கால், கை முறிந்தது. சிகிச்சைக்குப் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்’’ என்றனர் 

 வீரக்குமாரிடம் போலீஸார் விசாரித்தபோது பரபரப்பான வாக்குமூலம் ஒன்றைக் கொடுத்துள்ளார். ``எனக்கு சொந்த ஊர் காட்பாடி, இந்திராநகர். குடுகுடுப்பைக்காரனாக வேலைபார்த்து வருகிறேன். கடந்த 10 நாள்களுக்கு முன்தான் ஆவடிக்கு வந்து தங்கினேன். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ரோஜாவிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரின் அழகில் மயங்கினேன். அப்போது அவரிடம் உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறினேன். அதைக்கேட்ட ரோஜா, செருப்பால் அடித்துவிடுவேன் என்று என்னைத் திட்டினார். இதனால், அன்றைய தினம் நன்றாகக் குடித்தேன். அதன் பிறகு ரோஜாவின் வீட்டுக்குள் சென்று அவர் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டேன். பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்தேன். நான் தூக்கிப் போட்ட கல், குழந்தையின் மீது விழுந்ததில் அவரும் இறந்துவிட்டார்’’ என்று கூறியுள்ளார். 

ரோஜாவின் அப்பா, அம்மா திருத்தணியில் உள்ளனர். அவரின் கணவர் அருண்பாண்டி அடிக்கடி வேலைக்காக வெளியூர் சென்றுவிடுவார். இதனால் தாய் வீட்டில்தான் குழந்தையுடன் அவர் தங்கியிருந்துள்ளார். பொங்கலையொட்டி ஆவடிக்கு வந்துள்ளார். ஆவடியில் அவரின் அண்ணன் வீடு உள்ளது. வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டிருந்த ரோஜாவை வீரக்குமார் கொலை செய்துள்ளார். கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் போலீஸார் வீரக்குமாரை கைதுசெய்துள்ளனர். இவர் மீது பள்ளிக்கரணை காவல் நிலையலில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கு உள்ளது. 

 பிரேதப் பரிசோதனை முடிந்து ரோஜா, சுஜாதாவின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இருவரின் சடலங்களைப் பார்த்து அவரின் கணவர் அருண்பாண்டி மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.