Published:Updated:

சுரங்கப் பாதை அமைத்து 1.3 லட்சம் கிலோ லிட்டர் டீசல் திருட்டு! ஹைதராபாத் போலீஸை அதிரவைத்த கும்பல்

சுரங்கப் பாதை அமைத்து 1.3 லட்சம் கிலோ லிட்டர் டீசல் திருட்டு! ஹைதராபாத் போலீஸை அதிரவைத்த கும்பல்
சுரங்கப் பாதை அமைத்து 1.3 லட்சம் கிலோ லிட்டர் டீசல் திருட்டு! ஹைதராபாத் போலீஸை அதிரவைத்த கும்பல்

ஹைதராபாத்தில் சுரங்கப்பாதை அமைத்து டீசல் திருட்டில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.90.4 லட்சம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள். 

ஹைதராபாத்தின் கட்கேசர் பகுதியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் முனையத்திலிருந்து செர்லப்பள்ளி மற்றும் கீசரா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முனையங்களுக்கு பைப் லைன் மூலம்  டீசல் கொண்டு செல்கிறது. 17 கி.மீ நீளம் கொண்ட இந்த பைப் லைனிலிருந்து டீசல் மர்மமான முறையில் திருடப்பட்டு வருவதாக பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் ஹைதராபாத் போலீஸில் கடந்த டிசம்பர் 29ம் தேதி புகார் அளித்தனர்.

டீசல் திருட்டு குறித்து விசாரிக்கத் தொடங்கிய ஹைதராபாத் போலீஸாரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கீசரா போலீஸார் மற்றும் மல்காஜ்கிரி மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் இணைந்து நடத்திய விசாரணையின் முடிவில் டீசல் திருட்டில் ஈடுபட்டதாக ஹஃபீஸ் ஆசிஸ் சௌத்ரி, ஸ்ரீனிவாசலு, முகமது அப்துல் அப்ரார், ஜெயகிருஷ்ணா ஆகிய 4 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ரூ.90.4 லட்சம் ரொக்கப் பணம், டேங்கர் லாரி, சொகுசு கார் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாகியுள்ள மேலும் 8 பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். 

கைது குறித்துப் பேசிய ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத், ``டீசல் திருட்டு குறித்து புகார் கிடைத்தவுடன், பைப் லைன் பயணிக்கும் கட்கேசர் - ராம்பள்ளி - செர்லப்பள்ளி 17 கி.மீ பகுதியில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினோம். அப்போது ராம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பழைய குப்பைகளைச் சேகரிக்கும் கிடங்கிலிருந்து டேங்கர் லாரி அடிக்கடி வெளியேறுவதைக் கண்டுபிடித்தோம். இதையடுத்து அங்கு சோதனை நடத்தியபோது, அங்கிருந்து சுரங்கப் பாதை அமைத்து டீசல் திருட்டில் ஈடுபட்டுவந்தவர்களைக் கைது செய்தோம்’’ என்றார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், ``ராம்பள்ளிப் பகுதியில் டீசல் பைப் லைனுக்கு அருகில் உள்ள இடத்தை பழைய குப்பைகளைச் சேகரிக்கும் தொழில் செய்யப் போவதாகக் கூறி வாடகைக்கு எடுத்த ஹபீஸ், அங்கிருந்து சுரங்கம் தோண்டியிருக்கிறார். உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க சுரங்கத்தைச் சுற்றி சுவர் அமைத்திருக்கிறார்கள். இதையடுத்து, டீசல் கொண்டு செல்லும் பைப் லைனில் துளையிட்டு ரப்பர் பைப் உதவியுடன் டீசல் திருடத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த 20 நாள்களாக அவர் 1.3 லட்சம் கிலோ லிட்டர் டீசலைத் திருடி, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்திருக்கிறார்கள்’’ என்றார்.