பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்! #MustKnow | How to immediately respond in case of a sexual assault?

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (19/01/2019)

கடைசி தொடர்பு:12:56 (19/01/2019)

பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்! #MustKnow

உடலுக்கான சிகிச்சைகள் போலவே, பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு உடனடியாக உளவியல் சிகிச்சையும் அளிக்கப்படுவது அவசியம். இவையெல்லாம், விபத்துக் காலத்தில் செய்யப்படும் முதலுதவிபோல உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள்.

பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்! #MustKnow

விபத்து, நொடியில் பலரது வாழ்க்கையைப் புரட்டி போட்டுவிடுகிறது. எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாலை விதிகள் பற்றி பலநூறு கோடி செலவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆயினும், விபத்துகளைத் தடுக்க முடியவில்லை. விபத்து நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும்; எப்படிச் சமாளிக்க வேண்டும்; என்னென்ன முதலுதவிகள் செய்யவேண்டும் என்பதை ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம். அந்த விழிப்புணர்வு மூலம் சில உயிர்களேனும் மீட்கப்படுகின்றன. ஆனால், இன்னும் பொதுச்சமூக கவனமே பெறாத ஒரு கொடும் விபத்து தினம்தோறும் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. இன்றைய நிலவரப்படி 33 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் அந்த விபத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறார்கள். கொடூர மனப்பான்மையோடு ஆண்களால் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் பாலியல் வன்முறைதான் அந்த விபத்து.

நம் சமூகம், 'அவள் ஆடை சரியில்லை', 'சென்ற இடம் சரியில்லை' என்று பாதிக்கப்படும் பெண்கள் மீதே குற்றங்களைச் சுமத்திக்கொண்டிருக்கிறது. உடலளவிலும் மனதிலும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் அவமானங்களையும் சேர்த்துச் சுமக்க வேண்டியிருக்கிறது.   

பாலியல்

இந்த நிலை மாறவேண்டும். பாலியல் வன்முறை செய்தவனை குற்றவாளியாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு பெரும் விபத்தைச் சந்தித்தவளாகவும் அணுகும் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே, பாதிக்கப்பட்ட பெண் தனக்கு இழைக்கப்பட்ட வன்முறைக்கு நீதி கேட்டுப் பெறமுடியும்; அந்தத் துயரிலிருந்து மீள முடியும்; அவள் உடலும், மனமும் குணமடையும்; அவளது எதிர்காலம் இயல்படையும்; குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் கிடைக்கும்; இத்தகைய குற்றங்கள் குறையும். 

மன நல மருத்துவர் சிவநம்பிபெரும்பாலும் பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றவாளிகள் போதிய ஆதாரங்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் கொடுமைதான் நடக்கிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2016-ம் ஆண்டு அறிக்கையின்படி , 'பாலியல் வல்லுறவு சம்பந்தப்பட்ட வழக்குகளில் நான்கு வழக்குகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது'. 'மற்ற எல்லாக் குற்றங்களையும்விட பாலியல் குற்றங்களில் தவறிழைத்தவர்கள், தண்டனையிலிருந்து தப்புவது மிக அதிகமாக நடக்கிறது' என்கிறது இந்தப் புள்ளிவிவரம்.

இதற்கு முக்கியமான காரணம், இப்படி ஒரு சம்பவம் நடக்கும்பட்சத்தில், உடனடியாக என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது பற்றிய தெளிவு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தெரியாமல் இருப்பதுதான். காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி, கருணாநிதி

"சிறுவயது முதலே பெண்களுக்கு தங்கள் மீதான வன்முறையை எதிர்ப்பதற்கு அவசியமான அறிவை வழங்க வேண்டும். இவ்வித ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி, ஆபத்துக் காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி, ஏதேனும் நிகழ்ந்து விட்டால் தைரியமாக எதிர்கொள்வது எப்படி என்று மூன்று நிலைகளிலும் அவர்களைத் தயார்படுத்தவேண்டும். இப்படியான வன்முறையில் சிக்கும் பெண்களைக் கையாளும் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும்" என்கிறார் மூத்த மன நல மருத்துவர் சிவநம்பி.

"இத்தகைய நேரங்களில் பெண்கள் தாமதமில்லாமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.  உடனடியாகப் புகார் அளித்தால் மட்டுமே ஆதாரங்கள் சேகரிப்பதும், உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்வதும் சாத்தியப்படும். ஆதாரங்கள் இருந்தால்தான் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்று தரவியலும்" என்கிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி, கருணாநிதி. 

கிறிஸ்டினாபெண்கள் தாங்கள் எதிர்கொண்ட வன்முறை குறித்து வெளிப்படையாகப் புகார் அளிப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து மத்திய அரசின் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிர்வாகி, கிறிஸ்டினா பேசினார். 

"சென்னை ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்திற்கு, ஓராண்டில் இருநூற்றுக்கும் மேலான புகார்கள் வந்திருக்கின்றன. ஆனால், பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரு புகார்கூட இங்கு வரவில்லை. ஆனால் அது தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதை நாம் அறிவோம். இதிலிருந்தே இத்தகைய வன்முறைகளைப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்ல எவ்வளவு அச்சம் கொள்கிறார்கள் என்பது விளங்கும்" என்கிறார் அவர்.

ஒரு பெண், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டால் அவரைச் சுற்றியுள்ளவர்கள், காவல் துறையினர், மருத்துவத்துறையினர் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது? 

* பாதிக்கப்பட்ட பெண் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பார். ஆயினும், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மிகுந்த மன தைரியத்தை வரவழைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

* பாதிக்கப்பட்டவர் துளியளவும் குற்ற உணர்வுக்கு உள்ளாக வேண்டியதில்லை. தனக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாகவே நினைக்கவேண்டும்.

* தனிமையைத் தவிர்த்து, உடனடியாக உறவினர்கள், நண்பர்கள் உதவியை நாட வேண்டும்.

* உடனடியாக காவல் துறை, பிரத்தியேக பெண்கள் உதவி எண் 181, தங்கள் பகுதியின் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய எண், 'காவலன் ஆப்' என்ற மொபைல் செயலி, ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு உதவி நாடலாம்.

* பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தினரை உதவிக்கு நாடும்பொழுது,  குடும்பத்தினர் பதற்றமடையாமல் இதை எதிர்கொள்ள வேண்டும். முக்கியமாக, பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க முன்வரும்பட்சத்தில் அவரைச் சார்ந்தோர் தடுக்கக்கூடாது. 

* உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்று உடலைக் கழுவுதல், உடை மாற்றுதல் முதலியவற்றைச் செய்யக்கூடாது. இதனால் குற்றவாளியை தண்டிப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் அழிந்துபோக நேரிடும். 

பாலியல்

* காவல்துறையை உடனடியாக நாடலாம், அல்லது மருத்துவமனைக்குச் செல்லலாம். பாதிக்கப்பட்ட பெண் எங்குச் சென்றாலும் காவல்துறையினர் பெண்ணுக்கு மருத்துவ உதவியை உடனடியாக பெற்று தருவதும், மருத்துவமனை நிர்வாகம் இதை உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிப்பதும் கட்டாயமாகும்.

* ஒரு பெண்ணின் மீதான பாலியல் வன்முறைக்கு முக்கியமான ஆதாரமாக விளங்குவது, சம்பவம் நடக்கும்பொழுது அவர் அணிந்திருந்த ஆடை. அதை மிகுந்த கவனத்தோடு பத்திரப்படுத்தவேண்டும். 

* அரசு மருத்துவமனையோ, தனியார் மருத்துவமனையோ... பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றம். 

* காவல்துறையினரிடம் ஒரு பெண் புகார் அளிக்கும்போது புகாரின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யப் பல கேள்விகள் கேட்கப்படும். அதற்குப் பொறுமையாக பதில் அளிப்பது புகார் அளிப்பவரின் கடமை.

* அதிக நேர விரயம் இல்லாமல்,  சம்பவ இடத்தை ஆய்வு செய்வது, குற்றவாளியை உடனடியாக கைது செய்வது ஆகியவை காவல்துறையினரின் கடமை. 

* மிக முக்கியமாக, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஆண் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

* பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புகைப்படம் எதையும் வெளிப்படுத்தக்கூடாது என்று ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு இருக்கிறது. எனவே, புகார் அளித்தால் செய்தி வெளியில் சென்றுவிடும் என்று பயப்படத் தேவையில்லை. 

* உடலுக்கான சிகிச்சைகள் போலவே, பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு உடனடியாக உளவியல் சிகிச்சையும் அளிக்கப்படுவது அவசியம். இவையெல்லாம், விபத்துக் காலத்தில் செய்யப்படும் முதலுதவிபோல உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள்.

ஒவ்வொரு நொடியும் பெண்கள் மீதான வன்முறைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்தியாவில் மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் பாலியல் ரீதியாக ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தப்படுவதாகச் சொல்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். இந்நிலையில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராவதும், உடனடியாக என்ன செய்வது என நாம் அறிந்திருப்பதும், பெண்களை மேலும் வலிமையுள்ளவர்களாக மாற்றும்! 


டிரெண்டிங் @ விகடன்