Published:Updated:

சிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்!

சிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்!
சிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்!

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த சிறைத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 125 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையம் அருகில் உள்ள சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் தர்மலிங்கபாண்டியன். சிறைத்துறை அதிகாரியான இவர் தற்போது குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சிறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அவர் இன்று பணிக்குச் செல்வதற்காக அதிகாலையிலேயே கிளம்பிச் சென்று விட்டார். 

தர்மலிங்கபாண்டியனின் மனைவி ஜெயலட்சுமியின் உறவினருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில தினங்களாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர், ஜெயலட்சுமி தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரைப் பார்க்கச் சென்று விட்டார். 

வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 125 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். மாலையில் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளையடிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ந்த அவர் திசையன்விளை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 

பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரத் கொள்ளைச் சம்பவம் பற்றி அறிந்ததும் வள்ளியூர் உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண்பிரசாத் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அத்துடன், நெல்லையில் இருந்து மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை ஆய்வு செய்தனர். இந்தக் கொள்ளை குறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.