Published:Updated:

கோகுல்ராஜ் கழுத்தை நெரித்து யுவராஜ் கொலை செய்தாரா? துணியைக் காட்டி சாட்சியம்!

``என்னை அழைத்துச் சென்றால் கோகுல்ராஜ் கொலை செய்த இடத்தைக் காட்டுவேன். கொலைக்குப் பயன்படுத்திய செல்போனை எடுத்துக் கொடுப்பேன். கோகுல்ராஜ் கொலைக்கு உதவியாக இருந்த சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை ஆகியோரை அடையாளம் காட்டுவேன்'' என்று தெரிவித்திருந்தார்.

கோகுல்ராஜ் கழுத்தை நெரித்து யுவராஜ் கொலை செய்தாரா? துணியைக் காட்டி சாட்சியம்!
கோகுல்ராஜ் கழுத்தை நெரித்து யுவராஜ் கொலை செய்தாரா? துணியைக் காட்டி சாட்சியம்!

சேலம் மாவட்டம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதில், அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ப.பா.மோகன் மற்றும் கருணாநிதி, கோகுல்ராஜ் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் ஆகியோர் ஆஜரானார்கள். யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ வேறு வழக்கில் இருந்ததால் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் பிரேம்குமார், ஸ்டீபன் ஆஜரானார்கள். சிறையிலிருந்து வழக்கம்போல யுவராஜ் உட்பட அவருடைய ஆட்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சாட்சி எண்: 41

பெயர்: மணிவண்ணன் (திருச்செங்கோடு வி.ஏ.ஓ)

நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் யாமினி: சத்தியமாச் சொல்றேனு சொல்லுங்க.

ராஜன்: சத்தியமாச் சொல்றேன்.

மணிவண்ணன்:  ``9.7.2015-ம் தேதி என்னுடைய அலுவலகத்தில் இருந்தபோது திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எஸ்.ஐ அழைத்தார். நானும் என் உதவியாளரும் சென்றோம். அங்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாகச் சரணடைந்த குமார் (எ) சிவக்குமார்  தாமாகவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அதில், ``என்னை அழைத்துச் சென்றால் கோகுல்ராஜ் கொலை செய்த இடத்தைக் காட்டுவேன். கொலைக்குப் பயன்படுத்திய செல்போனை எடுத்துக் கொடுப்பேன். கோகுல்ராஜ் கொலைக்கு உதவியாக இருந்த சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை ஆகியோரை அடையாளம் காட்டுவேன்'' என்று தெரிவித்திருந்தார்.

வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் காட்டி...) ஒப்புதல் வாக்குமூலத்தில் குமார் கையெழுத்துப் போட்டாரா?

மணிவண்ணன்: ஒப்புதல் வாக்குமூலத்தில் குமார் கையெழுத்து போட்டார். நான் சாட்சிக் கையெழுத்துப் போட்டேன். 10.7.2015-ம் தேதி என்னை போலீஸ் அழைத்ததன்பேரில் சென்றேன். அப்போது நான், என் உதவியாளர், போலீஸுடன் குமார் என்கிற சிவக்குமார் எங்களைக் கிழக்குத் தொட்டிப்பாளையம் ரயில்வே லைனுக்கு அழைத்துச் சென்றார். அங்குத் தண்டவாளத்துக்கு அருகில் இருந்த புதரில் யுவராஜ், கோகுல்ராஜை கழுத்தை நெரித்து கொலை செய்யப் பயன்படுத்திய துணியை எடுத்துக் கொடுத்தார்.

வழக்கறிஞர் கருணாநிதி: (நீதிமன்ற ஆவணக் காப்பாளர் காட்டிய துணியைக் காட்டி...) அது, இந்தத் துணியா?

மணிவண்ணன்: ஆமாம். போலீஸார் இந்தத் துணியைக் கைப்பற்றி மகஜர் தயாரித்து அதில் நானும், என் உதவியாளரும் சாட்சியாகக் கையெழுத்துப் போட்டோம். பிறகு, குமார் எங்களை அவர் குடியிருக்கும் சேலம் நெத்திமேடு, கணபதி தெருவில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, யுவராஜிடம் பேசப் பயன்படுத்திய நோக்கியோ செல்போனை வீட்டிலிருந்து எடுத்துக் கொடுத்து அடையாளம் காட்டினார். அதை டி.எஸ்.பி மேடம் கைப்பற்றி மகஜர் தயார் செய்தார். அதில், நாங்கள்  கையெழுத்து போட்டோம். அதன்பிறகு, திருச்செங்கோடு காவல் நிலையத்துக்குத் திரும்பி வந்துவிட்டோம். பிறகு 11.7.2015-ம் தேதி, குமார் எங்களை கொங்கனாபுரம், மேரிவளவு என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று சங்கர் என்பவரை அடையாளம் காண்பித்தார். டி.எஸ்.பி மேடம் சங்கரை கைதுசெய்தார். அப்போது சங்கர் தாமாக முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அந்த வாக்குமூலத்தில், சங்கர் கையெழுத்து போட்டார்.

வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் காட்டி...) இந்தக் கையெழுத்தா?

மணிவண்ணன்: ஆமாம். அருகில் நானும், என் உதவியாளரும்  சாட்சிக் கையெழுத்து போட்டோம். பிறகு அந்த வாக்குமூலத்தில், சங்கரை அழைத்துச் சென்றால் அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை ஆகியோரை அடையாளம் காட்டுவதாகவும், கோகுல்ராஜ் செல்போன் வீடியோவில் பேசிய காட்சியைப் பதிவு செய்த இடமான ஒருக்காமலையைக் காட்டுவதாகவும் சொன்னார். பிறகு, அவரின் செல்போனைக் கைப்பற்றி மகஜர் தயாரித்து அதில் நாங்கள் கையெழுத்து போட்டோம். பிறகு குமாரும், சங்கரும் சேர்ந்து அருள்செந்தில், செல்வகுமார் ஆகியோரை கொங்கணாபுரம் ரவுண்டானாவில்வைத்து அடையாளம் காட்டினார்கள். அவர்களை டி.எஸ்.பி மேடம் கைதுசெய்தார். பிறகு அருள்செந்தில், செல்வகுமார் இருவரும் தானாக முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருவரும் கையெழுத்து போட்டார்கள். அதில் நாங்களும் கையெழுத்து போட்டோம். பிறகு கொங்கணாபுரத்திலிருந்து குமார் என்கிற சிவக்குமார், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் ஆகியோர் போலீஸோடு என்னையும், என் உதவியாளரையும் சங்ககிரியில் உள்ள கரும்பாலி கிராமத்துக்கு அழைத்துச் சென்று நான்கு பேரும் சேர்ந்து யுவராஜின் சகோதரர் தங்கதுரையை அடையாளம் காட்டினார்கள். டி.எஸ்.பி மேடம் தங்கதுரையை கைதுசெய்தார்.


தங்கதுரை தானாக முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். ஆனால் அதில், தங்கதுரை கையெழுத்து போடவில்லை. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தாங்கள் கோகுல்ராஜின் கொலைக்குப் பயன்படுத்திய செல்போன் கடைக்காரர் செந்தில் என்பவருக்குச் சொந்தமான பல்சர் டூவீலர் வாகனத்தை எடுத்துத் தருவதாகச் சொன்னார். அதையடுத்து, அவர் வீட்டில் வைத்திருந்த மேற்சொன்ன பல்சர் 5506 என்ற பதிவெண் கொண்ட டூவீலர் வாகனத்தை எடுத்துக் கொடுத்தார். அதை டி.எஸ்.பி மேடம் கைப்பற்றி மகஜர் தயாரித்து, அதில் நாங்கள் சாட்சிக் கையெழுத்துப் போட்டோம். பிறகு, அனைவரும் திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு வந்தோம்.

அதன்பிறகு, 21.9.2015-ம் தேதி என் அலுவலகத்தில் நானும் என் உதவியாளரும் இருந்தபோது கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திலிருந்து ஏ.டி.எஸ்.பி அவர்கள் கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக என்னை விசாரித்து, எங்களை திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை செய்தார். பிறகு, கிழக்குத் தொட்டிப்பாளையத்தில் உள்ள ரயில்வே லைனுக்கு அழைத்துச் சென்றார். ஏற்கெனவே உள்ள வரைபடத்தில் திசைகள் மாறியிருப்பதால் புதிய வரைபடம் வரைந்ததாகச் சொன்னார். 25.9.2015-ம் தேதி கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திலிருந்து ஏ.டி.எஸ்.பி என்னை நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வரச்சொல்லி கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக என்னை விசாரித்தார்.

வழக்கறிஞர் கருணாநிதி: டி.எஸ்.பி உங்களை விசாரித்தார்களா?

மணிவண்ணன்: விசாரித்தார்கள்.

வழக்கறிஞர் கருணாநிதி: வீடியோவைப் பார்த்தால் அதிலிருப்பவர்களை அடையாளம் காட்டுவீர்களா?

மணிவண்ணன்: முகக்கண்ணாடி எடுத்து வராததால், இன்று என்னால் அடையாளம் காட்ட முடியாது.

வழக்கறிஞர் ப.பா.மோகன்: இவர் அளித்த வாக்குமூலத்தில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காட்ட வேண்டும்?

நீதிபதி: தேவையில்லை. ஏற்கெனவே காண்பித்துவிட்டார்.


வழக்கறிஞர் ப.பா.மோகன்: ``இல்லை. வாக்குமூலம் கொடுக்கும்போது குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது சரியாக இருக்கும்'' என்று கூறியவாறு, சாட்சி மணிவண்ணனைப் பார்த்து,``கூண்டுக்குள் நிற்பவர்களில் யார் சதீஷ்?" என்றார்.

மணிவண்ணன்: வலது புறத்திலிருந்து மூன்றாவதாக நிற்கக் கூடியவர்.

நீதிபதி: (கையை தூக்கச் சொல்லி...) உங்க பேரு என்ன?

கையைத் தூக்கியவர்: என் பேரு பிரபு.

(நீதிபதி சிரித்துக்கொண்டே அதைப் பதிவுசெய்தார்...)

பிறகு, வாய்தா தேதி தேர்வு செய்வதில் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்களுக்கும், கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் தேதி முரண்பாடு ஏற்பட்டதையடுத்து நீதிபதி, ``நீங்களே ஒரு தேதியைச் சொல்லுகள்" என்று இருக்கையைவிட்டு எழுந்து சென்றார். பிறகு 18-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.