Published:Updated:

யார் அந்த இளம்பெண்?- கை, கால்களுடன் துப்புதுலக்கும் சென்னை போலீஸ்

எஸ்.மகேஷ்
யார் அந்த இளம்பெண்?- கை, கால்களுடன் துப்புதுலக்கும் சென்னை போலீஸ்
யார் அந்த இளம்பெண்?- கை, கால்களுடன் துப்புதுலக்கும் சென்னை போலீஸ்

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த துண்டிக்கப்பட்ட இரண்டு கால்கள், ஒரு கையை வைத்துக்கொண்டு அது யாருடையது என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். கைரேகையைக் கொண்டு அது யாருடையது  என்பதை எளிதாக அடையாளம் காணலாம் என்கிறார் சவீதா பல்கலைக்கழகத்தின் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையின் தலைவர் டிகால். 

சென்னையில் உள்ள குப்பைகள் லாரிகள் மூலம் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். வழக்கம்போல வள்ளுவர் கோட்டப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை பெருங்குடியில் கொட்டிவிட்டு லாரிகள் நேற்று  சென்றன. அதன்பிறகு குப்பைகளை தரம் பிரித்தபோது 25 கிலோ அரிசிப் பையில் இரண்டு கால்கள், ஒரு கை ஆகியவை இருந்தன. அதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் கால்கள், கையை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த உடல்பாகங்கள் யாருடையது என போலீஸார் தீவிரமாக விசாரித்துவரும் நேரத்தில் கைரேகை மூலம் அந்தப் பெண் யார் என்பதை எளிதில் அடையாளம் காணலாம் என்கிறார் சவீதா பல்கலைக்கழகத்தின் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் டிகால். 

அவரிடம் அந்தப் பெண்ணின் கால்கள், கை ஆகிய புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவைத்தோம். அதைப்பார்த்த அவர், சில முக்கிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ``இது, ஒரு பெண்ணுடைய கால்கள், கை என்பது உறுதியாகிறது. கிடைத்துள்ள கை, கால்கள் அழுகவில்லை. இதனால் சமீபத்தில்தான் அந்தப் பெண் இறந்திருக்க வேண்டும். மேலும் துண்டிக்கப்பட்ட கால்கள், கையில் ரத்தக்கறைகள் இல்லை. இதனால் அவர், இறந்தப்பிறகு கால்கள், கை துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கால்கள், கை துண்டிக்கப்படவில்லை. ஏனெனில் பலதடவை ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன. 

பொதுவாக இந்தியாவில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு ஆதார் கார்டு இருக்கும். அதை வைத்து இந்தப் பெண் யார் என்பதை எளிதில் அடையாளம் காணலாம். கிடைத்துள்ள கைரேகையைக் கொண்டு அந்தப் பெண்ணின் ஆதார் விவரங்களை எளிதில் சேகரித்துவிடலாம். ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு ஆதார் இல்லை என்றால்தான் கண்டறிவதில் கொஞ்சம் தாமதமாகும். 

ஒருவர் இறந்தபிறகு 72 மணி நேரம் வரை எளிதாக கையில் உள்ள ரேகைகளை பதிவு செய்யலாம். அதன்பிறகு ஒருவாரம்வரை கைரேகையை எடுக்க வாய்ப்புள்ளது. துண்டிக்கப்பட்ட கை அழுகினாலும் அதிலுள்ள ரேகை அழியாது. அதைவைத்து அடையாளம் காணமுடியும். 

மேலும், படங்களைப் பார்க்கும்போது ஒரே உடலில் உள்ள பாகங்கள் போலத்தான் தெரிகிறது. அடுத்து கையில் உள்ள டாட் டூ மூலமாகவும் அந்தப் பெண்ணின் விவரங்களை சேகரிக்க வழிவகை உள்ளது. ஒருவேளை அந்தப் பெண் யார் என்பதைக் கண்டறிய முடியாமல் நாள்கள் கடந்தால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். கால்கள், கை மட்டுமே குப்பை கிடங்கில் கிடைத்துள்ளன. மற்ற உடல்பாகங்கள் எங்கே என்ற தகவல் இல்லை. இதனால் கைப்பற்றப்பட்ட கால்கள், கையில் உள்ள எலும்புகளை  டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரித்துவைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். 

போலீஸார் கூறுகையில், ``கைப்பற்றப்பட்ட பெண்ணின் கைரேகையைக் கொண்டு ஆதார் பதிவு மூலம் அவர் யார் என்பதைக் கண்டறிய ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. பெண்ணின் கையில் உள்ள டாட் டூ, அவர் அணிந்திருக்கும் வளையல் ஆகியவற்றைக் கொண்டும் விசாரணை நடந்துவருகிறது. உடலின் மற்ற பாகங்கள் எங்கே என்று விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பெண் குறித்த விவரங்கள் தெரிந்தால் அவரின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்துவிடலாம்" என்றனர்.