Election bannerElection banner
Published:Updated:

``பயப்படாதீங்க" என்ற நீதிபதி... அனலடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு..!

``பயப்படாதீங்க" என்ற நீதிபதி... அனலடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு..!
``பயப்படாதீங்க" என்ற நீதிபதி... அனலடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு..!

"மார்ச் மாதத்துக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும். அதற்கு இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த வாய்தா 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். பிப்ரவரி 1, 2, 4 தேதிகளில் சாட்சிகள் விசாரணைகள் விரைவாக நடத்த வேண்டும்."

சேலம் மாவட்டம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் 30.8.2018-ம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. இதில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், கருணாநிதி, கோகுல்ராஜின் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் ஆகியோர் ஆஜரானார்கள். யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜீ.கே-வுக்கு (கோபால கிருஷ்ண லட்சுமண ராஜு) வேறு வழக்கு இருப்பதால் வரவில்லை. அவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பிரேம், அரவிந்த், ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கம் போல காவல் துறையினரால் யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதியும், யுவராஜ் தரப்பில் வழக்கறிஞர் ஜீ.கே என்கிற கோபால கிருஷ்ண லட்சுமண ராஜும் வாதாடி வந்தார்கள். ஆனால் ஜீ.கே-வின் கடும் வாதத்துக்கு, கருணாநிதி பதில் கொடுக்காமல் அமைதி காத்தார். தற்போது கருணாநிதி இடத்துக்கு கம்யூனிஸ்ட் வளர்ப்பு மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன் வந்திருப்பதால், அடுத்த விசாரணையிliருந்து வாதப் போர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 18-ம் தேதி நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜின் அம்மா சித்ராவும், அவருடைய மூத்த மகன் கலைச்செல்வனும் வந்திருந்தார்கள். நீதிபதியிடம், ``கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பவானி. பா.மோகன் தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும்" என மனு கொடுத்தார்கள். அதை, நீதிபதி பெற்றுக்கொண்டார். அதன்பிறகு, இவ்வழக்கின் 41-வது அரசு சாட்சியாக திருச்செங்கோடு வி.ஏ.ஓ மணிவண்ணன் கடந்த 10, 11-ம் தேதிகளில் ஆஜராகி தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்துவந்தார். 11-ம் தேதி தன்னுடைய முக்குக் கண்ணாடி எடுத்து வராததால், ``கோயில் வீடியோவில் பதிவாகியுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்ட முடியாது" என்று கூறியதையடுத்து, நீதிபதி இவ்வழக்கை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

18-ம் தேதி பிற்பகல் 2:50 மணிக்கு திருச்செங்கோடு வி.ஏ.ஓ மணிவண்ணன் கூண்டேறினார். அவருக்கு நீதிமன்றச் சுவரில் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் போட்டுக் காண்பிக்கப்பட்டன. அந்த வீடியோவில் முதலில் கோகுல்ராஜ், ஸ்வாதி கோயிலுக்குள் வருவதும், பிறகு யுவராஜின் ஆட்கள் கோயிலுக்குள் நுழைவதும், சற்று நேரத்தில் ஸ்வாதியை ஒரு பெண்ணும், ஆணும் அழைத்துச் செல்வதும், அவர்களைத் தொடர்ந்து  யுவராஜின் ஆட்கள்  கோகுல்ராஜை கூட்டிச் செல்வதும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தது. அதை, சாட்சி மணிவண்ணன் கவனமாகப் பார்த்தார்.

வழக்கறிஞர் கருணாநிதி: வீடியோவில் இருப்பவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்.

மணிவண்ணன்: (கோயிலைவிட்டு வெளியே வரும் காட்சியைப் பார்த்து...) ஸ்வாதியைச் சந்திரசேகரனும், அவரது மனைவி ஜோதிமணியும் கூட்டிச் செல்கிறார்கள். (யுவராஜின் ஆட்கள் கும்பலாகக் கோயிலுக்குள் வரும் காட்சியைப் பார்த்து...) முதலில் வருவது சதீஷ்குமார், அடுத்து வெள்ளைச் சட்டை, காக்கி பேன்ட் போட்டு வருவது யுவராஜ், அவர் அருகே வருவது அருண், பச்சைக்கலர் சட்டை போட்டிருப்பவர் செல்வராஜ், கோயில் சுவர் ஒட்டி இருப்பவர் ரஞ்சித், அவருக்குப் பின்னாடி இருப்பவர் ரகு என்கிற ஶ்ரீதர், இறுதியாக வருபவர் குமார் என்கிற சிவக்குமார் என்றார்.

அதையடுத்து, அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன், ``வீடியோவில் இருப்பவர்கள் இங்கு கூண்டில் இருக்கிறார்கள். அவர்களைச் சரியாக அடையாளம் காட்டுங்கள்'' என்றார்.

அதற்கு நீதிபதி, ``அவர் ஏற்கெனவே அடையாளம் காட்டிவிட்டார். அதைப் பதிவு செய்துவிட்டோம். அடையாளம் காட்டத் தேவையில்லை'' என்றார்.

அதற்கு அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன், ``சாட்சியம் அளிக்கும்போது சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காட்டுவதுதான் சரியாக இருக்கும்'' என்றதையடுத்து, சாட்சி மணிவண்ணன் எதிரே உள்ள கூண்டில் வரிசையாக நின்று கொண்டிருந்த யுவராஜ் ஆட்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது நீதிபதி, ``பக்கத்தில் போய்ப் பார்த்தே சொல்லுங்கள்'' என்றார்.

அதற்கு மணிவண்ணன், ``இல்ல., இல்ல..." என்று சொல்லிக்கொண்டே, ``செல்வராஜ் அருகே இருப்பவர் சதீஷ் என்கிற சதீஷ்குமார்" என்றார். 

நீதிபதி, சாட்சி அடையாளம் காட்டிய நபரின் கையைத் தூக்கச் சொன்னதும் செல்வராஜின் இடதுபுறத்தின் அருகே இருந்தவர் கையைத் தூக்கி, ``என் பேரு சங்கர்" என்றார். இதை யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதியிடம்... ``சாட்சி தவறாக அடையாளம் காட்டியதைப் பதிவுசெய்ய வேண்டும்" என்றார்கள். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.  

இதனால் அதிருப்தி அடைந்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன், ``சாட்சி அருகே சென்று பார்த்துச் சொன்ன பிறகு பதிவுசெய்ய வேண்டும்" என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி, ``இப்படி விதண்டவாதமாகப் பேசக் கூடாது. நான் ஏற்கெனவே பக்கத்தில் போய்ப் பார்த்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டேன்'' என்றார். அதையடுத்து, சாட்சி மணிவண்ணன் கூண்டைவிட்டு இறங்கி, யுவராஜ் ஆட்கள் நின்றுகொண்டிருக்கும் கூண்டின் அருகே தயங்கியவாறு சென்றார். அவரைப் பார்த்த நீதிபதி, ``ஏன் சார் பயமா இருக்கா.. பயப்படாம போய் அடையாளம் காட்டுங்க. பயமா இருந்தா சொல்லுங்க, துணைக்கு நானும் வரேன்'' என்றார்.

சாட்சி மணிவண்ணன் குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருந்த யுவராஜின் ஆட்களை வரிசையாகப் பார்த்துவிட்டு, ``செல்வராஜின் வலது புறத்தின் அருகே  நிற்பவர் சதீஷ் என்கிற சதீஷ்குமார்" என்று துல்லியமாக அடையாளம் காட்டினார். அதையடுத்தே அரசுத் தரப்புக்கு உயிர் வந்தது.

பிறகு நீதிபதி,  ``அடுத்த விசாரணையை எந்தத் தேதியில் நடத்தலாம்" என இரு தரப்பிடமும் கேட்டார்.

அதற்கு யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள், ``அடுத்த மாதம் வைத்துக்கொள்ளலாம்" என்றார்கள்.

நீதிபதி, ``மார்ச் மாதத்துக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும். அதற்கு இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த வாய்தா 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். பிப்ரவரி 1, 2, 4 தேதிகளில் சாட்சிகள் விசாரணைகள் விரைவாக நடத்த வேண்டும். அதனால் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் ஆட்கள் அனைவரையும் சேலம் மத்திய சிறையிலேயே அடைக்க உத்தரவிடுகிறேன். காலை 11:00 மணிக்கு அனைவரும் ஆஜராகி விட வேண்டும்'' என்றார்.

வரும் 25-ம் தேதி வாய்தாவின்போது அரசுத் தரப்பு சாட்சி மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடைபெறும். அன்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகனும், யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜீ.கே-வும் ஆஜராவார்கள். இருவரும் தங்கள் தரப்புக்கு கடுமையாகப் போராடக்கூடியவர்கள் என்பதால் இனி இவ்வழக்கு சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு