Published:Updated:

`கொலையை ஒப்புக்கொள்;  சித்ரவதை செய்த போலீஸ்'- சாட்டையை சுழற்றிய நீதிபதி 

எஸ்.மகேஷ்
`கொலையை ஒப்புக்கொள்;  சித்ரவதை செய்த போலீஸ்'- சாட்டையை சுழற்றிய நீதிபதி 
`கொலையை ஒப்புக்கொள்;  சித்ரவதை செய்த போலீஸ்'- சாட்டையை சுழற்றிய நீதிபதி 

கொலையை ஒப்புக்கொள்ளுமாறு போலீஸார் சித்ரவதை செய்தததாக மனித உரிமை ஆணையத்திடம் சென்னையைச் சேர்ந்த ரவி என்பவர் முறையிட்டார். இந்தவழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸாரின் சம்பளத்தில் ஒரு லட்சம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை போரூர் கிருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி அம்பிகா. ரவி, பிரபல ஹோட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்துவருகிறார். அம்பிகா, மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியாக இருந்துவந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி போலீஸ் சீருடை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை வழக்கில் ரவி மற்றும் அவரின் மகன் ஸ்ரீபாக்யன் ஆகியோரிடம் மாங்காடு போலீஸார் விசாரித்தனர். இந்த நிலையில் ரவியின் அம்மா தெய்வானை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். அதன்பிறகே ரவியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையத்தை விசாரிக்க உத்தரவிடப்பட்டது. 

விசாரணையின்போது என்னுடைய மனைவி கொலை வழக்கு தொடர்பாக என்னையும், என் மகனையும் மாங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது எங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்தனர். பிறகு எங்களைத் தாக்கி சித்ரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டினர். 2012-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்தனர். அதன்பிறகு பிப்ரவரி 7-ம் தேதி எங்களை விடுவித்தனர். எனவே, இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், லாரன்ஸ் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜான்பிரிட்டோ ஆஜராகினார். நீதிபதி டி.ஜெயசந்திரன் அதிரடியாக நேற்று தீர்ப்பளித்தார். அதில், சாட்சியம் ஆவணங்களை வைத்துப் பார்க்கும்போது 4 போலீஸ் அதிகாரிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதனால் அவர்கள் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.3 லட்சத்தை ரவிக்கும், ஒரு லட்சம் ரூபாயை அவரின் மகனுக்கும் தமிழக அரசு 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இந்தத் தொகையை போலீஸ் அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ளலாம். மேலும், போலீஸ் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து ரவியிடம் பேசினோம். ``என்னுடைய மனைவி அம்பிகா, மகளிர் சுய உதவிக்குழுவில் தலைவியாக இருந்தார். போரூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழல் தொடர்பான தகவலை விசாரிக்க வந்ததாக இரண்டு பேர் போலீஸ் சீருடையில் என்னுடைய வீட்டுக்கு இரவில் வந்தனர். அவர்களிடம் நானும் என் மனைவியும் பேசிக்கொண்டிருந்தோம். இந்தச் சமயத்தில் நான் வீட்டுக்குள் சென்றபோது என் மனைவியை அவர்கள் கடத்திச் சென்று 25 வீடுகள் தாண்டி மறைவான இடத்தில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டனர். இந்தக் கொலைவழக்கு தொடர்பாக விசாரித்த போலீஸார், என்னையும் என் மகனையும் அடித்து சித்ரவதை செய்தனர். அப்போது சில நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கொலை வழக்கை விசாரித்தனர். 7 பேரை கைது செய்தனர். அதில் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சாட்சிகள், ரகசிய வாக்குமூலம் எல்லாம் கொடுத்தப்பிறகும் இதுவரை அம்பிகா கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. மாநில மனித உரிமை ஆணைய வழக்கு முடிந்துவிட்டதால் அம்பிகா கொலை வழக்கை விரைவாக விசாரிக்க சட்டரீதியாக போராட உள்ளேன்" என்றார் கண்ணீர்மல்க.