Published:Updated:

காவல்நிலையத்தில் இனி கையெழுத்துப் போட வேண்டாம்! - ரோந்து காவலர்களுக்குப் புதிய செயலி அறிமுகம்

காவல்நிலையத்தில் இனி கையெழுத்துப் போட வேண்டாம்! - ரோந்து காவலர்களுக்குப் புதிய செயலி அறிமுகம்
காவல்நிலையத்தில் இனி கையெழுத்துப் போட வேண்டாம்! - ரோந்து காவலர்களுக்குப் புதிய செயலி அறிமுகம்

தமிழகத்திலேயே முதல்முறையாக இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்காக E-Beat என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரவுப் பணிக்கு வரும் காவலர்கள் காவல்நிலையத்துக்குச் செல்லாமல் நேராகப் பணிக்குச் செல்லவும் முறைகேடுகளைக் குறைக்கவும் இந்தச் செயலி உதவும் எனக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றங்களைக் கண்டறியவும் குற்றங்களைக் குறைக்கும் நோக்கிலும் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்துக்கு உட்பட்ட ஐந்து காவல் நிலையங்களில் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் கடைவீதியில் 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றில் 46 உயர்ரக கேமராக்களும் அடங்கும். இந்தக் கேமராக்கள் வாகன எண்ணைப் பதிவு செய்யும் திறன் உடையவை. சாலைப் பாதுகாப்பு நிதி மற்றும் தனியார் பங்களிப்புடன் 70 லட்ச ரூபாயில் புதிய கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய வளாகத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்புப் பணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வடக்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் நாகராஜ் மற்றும் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் கலந்துகொண்டனர். காவல் ரோந்து பணியை எளிமையாக்கும் வகையில் E-Beat எனும் புதிய செயலியை வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜ் அறிமுகப்படுத்தினார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஹரீஷ் என்பவர் சக மாணவர்களோடு சேர்ந்து இந்தச் செயலியைக் காவல்துறைக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அந்தச் செயலியின் மூலம் பணிபுரியும் பகுதிக்குச் சென்றதும் மொபைலில் லைவ் லொகேஷன் போட வேண்டும். அடுத்ததாக அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு மூலம் அந்தச் செலியைப் பயன்படுத்தி செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும். இந்த செயலி மூலம் காவலர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இதனால் பணிக்கு காலதாமதாக வருவதும், பணிக்குச் செல்லாமலே கையெழுத்துப் போடுவதும் குறையும் என்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ஐ.ஜி நாகராஜ், “குற்றங்களைத் தவிர்க்க இதுபோன்ற காவல் ரோந்து செயலிகள் மிகவும் உபயோகமாக இருக்கும். தமிழகத்திலேயே முதல்முறையாக இந்தச் செயலி இங்கேதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அவை சரி செய்யப்படும். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவலர்கள் பயன்படுத்துவதற்காக இந்தச் செயலியைத் தமிழக காவல்துறைக்குப் பரிந்துரை செய்வோம்” என்றார்.