Published:Updated:

நாகையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் -நண்பர் உள்ளிட்ட 5 பேர் கைது!

Teacher

நாகையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் -நண்பர் உள்ளிட்ட 5 பேர் கைது!
நாகையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் -நண்பர் உள்ளிட்ட 5 பேர் கைது!

கடந்த வருடம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, குளத்தில் வீசப்பட்டார் ஆசிரியர் சிவக்குமார்.  இவ்வழக்கில் சிவக்குமாரின் நண்பன் அகிலன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் சிவக்குமார், வயது 35 திருமணம் ஆகவில்லை. இவர் வெள்ளப்பள்ளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் ஆசிரியராக  நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.  இவர் கடந்தாண்டு  ஜனவரி 24 -ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.  மறுநாள் காலையில் பள்ளி அருகே குளத்தில் ரத்தக் காயங்களுடன் சிவக்குமாரின் உடல் மிதந்தது.  உடலைக் கைப்பற்றி வேட்டைக்காரனிருப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  ஆசிரியர் சிவக்குமாரின் செல்போனை கைப்பற்றி அதிலிருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட செல்போன்  நம்பர்களை தொடர்புகொண்டு அவர்களிடம் விசாரணை செய்தனர்.  பின்பு அருகிலுள்ள கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், ஆசிரியர் சிவக்குமார் கொடுக்கல் வாங்கல் மற்றும் பெண்கள் தொடர்பாக கொலை செய்யப்பட்டதாக வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த அகிலன், கார்த்தி, கத்தரிப்புலத்தைச் சேர்ந்த அடைக்கலராஜ், ஐயப்பன், நாகக்குடையானைச் சேர்ந்த ரகுபதி ஆகிய ஐந்து பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.  

ஆசிரியர் சிவக்குமார் கடந்த 12 ஆண்டுகளாக கத்தரிப்புலம், செம்போடை ஆகிய ஊர்களில் பணியாற்றியபோது உடற்கல்வி ஆசிரியரான அகிலனுடன் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். சிவக்குமார் பணியாற்றிய இடங்களில் எல்லாம் பல பெண்களோடு தொடர்பில் இருந்து பிரச்னைகளும் ஏற்பட்டிருக்கிறது.  இதுபோன்று தன் மனைவியோடும் சிவக்குமார் தொடர்பு வைத்திருப்பாரோ என்று அகிலன் சந்தேகப்பட்டார். இது தொடர்பாக பலமுறை சிவக்குமாரை, அகிலன் கண்டித்துள்ளார்.  ஒருகட்டத்தில் எல்லை மீறிப் போகவே, தனது நண்பர்கள் நான்கு பேரேடு அகிலனும் சேர்ந்து சிவக்குமாரை வழிமறித்து தாக்கி கொலை செய்து குளத்தில் வீசிச் சென்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.