Published:Updated:

சென்னையில் கிட்னியால் நின்ற திருமணம் - பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர் ?

சென்னையில் கிட்னியால் நின்ற திருமணம் - பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர் ?
சென்னையில் கிட்னியால் நின்ற திருமணம் - பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர் ?

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நதியா என்ற பெண், கிட்னி மற்றும் வரதட்சணை  காரணமாக தன்னுடைய திருமணம் நின்றுவிட்டதாக பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். 

சென்னையில் கிட்னியால் நின்ற திருமணம் - பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர் ?

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்று சொல்வதுண்டு. ஆனால், இன்று சமூகவலைதளங்களே பெரும்பாலான திருமணங்களை நிச்சயித்துவருகிறது எனலாம். அப்படிதான் வாட்ஸ்அப்பில் `ஹாய்' என்ற மெசேஜ் மூலம் சென்னையைச் சேர்ந்த நதியாவும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விக்கியும் நட்பாக பழகியுள்ளனர். அதன்பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. தற்போது, நதியாவை திருமணம் செய்ய விக்கி மறுத்ததால் அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

நதியாவிடம் பேசினோம். ``நான் பி.காம் படித்துள்ளேன். 2016-ம் ஆண்டு என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு `ஹாய்' என மெசேஜ் வந்தது. முதலில் அந்த மெசேஜை நிராகரித்தேன். ஏன், அந்த நம்பரை பிளாக்கூட பண்ணிவைத்தேன். ஆனால், மறுபடியும் புதிய புதிய நம்பர்களிலிருந்து மெசேஜ் வந்தன. இதனால் அந்த நம்பருக்கு நானும் பதில் அனுப்பினேன். இவ்வாறு எங்களின் நட்பு தொடர்ந்தது. அவரின் பெயர் விக்கி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2016 நவம்பரில் விக்கி சென்னை வடபழனிக்கு வருவதாக எனக்குத் தகவல் தெரிவித்தார். அப்போது நான், அசோக் பில்லர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். நான் வேலை பார்த்த நிறுவனத்துக்கு விக்கி வந்தார். அப்போதுதான் முதல் முதலாக அவரை நேரில் சந்தித்தேன். 

சென்னையில் கிட்னியால் நின்ற திருமணம் - பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர் ?

இருவரும் பேசினோம். என்னைப்பார்த்தவுடன் `உங்களை எனக்குப்பிடித்திருக்கிறது' என்று கூறினார். முதலில் நான் சம்மதிக்கவில்லை. ஏனென்றால் அவரைவிட நான் மூன்று வயது மூத்தவள். காதலுக்கு வயது தடையில்லை என்று விக்கி என்னிடம் கூறினார். அதன்பிறகு நாங்கள் இருவரும் காதலித்தோம். விக்கி, ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் சந்திப்போம். சினிமா, பார்க் என சென்றோம். நாங்கள் காதலிக்கும் தகவல் விக்கியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. அவர்களும் எங்களின் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டினர். எங்கள் வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.  26-2-2017-ல் விக்கியும் அவரின் அம்மா, அப்பா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அன்றையை தினம்  அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்தது. விக்கியின் அம்மா எனக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தார்கள். பூ வைத்து விட்டார்கள். விக்கியின் அண்ணனுக்கு திருமணம் நடந்தவுடன் உங்களின் திருமணத்தை நடத்திவைப்பதாகக் கூறினர். 

சந்தோஷமாக சென்ற நேரத்தில் அவரிடம் ஒரு உண்மையைக் கூறினேன். அதாவது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஸ்கேன் எடுத்தபோது ஒரு கிட்னி இல்லை என்ற தகவல் தெரியவந்தது. அந்த விவரத்தை விக்கியிடம் கூறினேன். அதற்கு அவர் பரவாயில்லை. நாம் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறினார். மேலும், விபத்தில் எனக்கும் காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்று ஆறுதலாகவும் அன்பாகவும் என்னிடம் பேசினார். 

அதன்பிறகு டிசம்பர் 25-ல் எங்கள் வீட்டுக்கு விக்கி வந்தார். எனக்கு ஆசையாக பரிசுப் பொருள்களை வாங்கித் தந்தார். இந்தச் சூழ்நிலையில், என்னுடைய அப்பா 13.10.2017-ல் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால் நான் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்தேன். விக்கியின் அண்ணனுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அப்போது என்னிடம் பேசிய விக்கியின் குடும்பத்தினர், தை பிறந்ததும் (ஜனவரி 2019) உங்கள் இருவருக்கும் திருமணம் என்று கூறினர். இதனால் சந்தோஷமாக இருந்தேன். 

சென்னையில் கிட்னியால் நின்ற திருமணம் - பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர் ?

இந்தச் சமயத்தில் என்னை திருமணம் செய்துகொள்ள 20 சவரன் நகை, ஒரு லட்சம் மதிப்புள்ள பைக் என வரதட்சணை கேட்டனர். அதோடு எனக்கு ஒரு கிட்னி மட்டுமே இருப்பதால் இன்னொரு கிட்னியும் வேண்டும் என்றனர். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். விக்கியிடம் பேசினேன். அவரும்  `உன்னை எனக்குப்பிடிக்கவில்லை' என்று கூறினார். இதனால் அவருடன் சண்டைப்போட்டேன். அதன்பிறகு என்னுடைய நம்பரை விக்கி பிளாக் பண்ணி வைத்துவிட்டார். இதனால் மனவேதனையடைந்த நான் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். டிசம்பர் 16-ல் என்னை சிதம்பரம் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போதுகூட என்னைப்பார்க்க விக்கி  வரவில்லை. அவரின் அக்கா, அத்தான் என இருவர் என்னைச் சந்தித்தனர். விக்கி குறித்து சில தகவல்களை அவர்கள் கூறினர்.

அதுகுறித்து விக்கி மற்றும் அவரின் அம்மாவிடம் நான் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. இதனால் விக்கியும் நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்தேன். இதனால் விக்கி என்னிடம் தகராறு செய்தார். இதனால் அந்தப்படத்தை டெலிட் செய்துவிட்டேன். என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதால் நான் அவரை முழுமையாக நம்பினேன். ஆனால், அவர் என்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டார். எனவேதான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவருடன் நான் பழகியதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அதை போலீஸ் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளேன்" என்றார். 

 விக்கியிடம் பேசியபோது `நதியா சொல்லும் தகவல்கள் அனைத்தும் பொய்' என்று சுருக்கமாகக் கூறினார்.  

 போலீஸார் கூறுகையில், ``நதியாவின் அப்பா கந்தசாமி, அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். நதியா குறித்த முழு விவரங்களும் விக்கிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் தெரியும். நதியாவிடம் விசாரணை நடத்தியுள்ளோம். விக்கியிடமும் விசாரித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.