Published:Updated:

`நீதி கிடைக்கும்வரையில் ஓய மாட்டேன்!’ - மகளுடன் பாடிய வீடியோவை வெளியிட்ட கேரள நர்ஸின் தந்தை

`நீதி கிடைக்கும்வரையில் ஓய மாட்டேன்!’ - மகளுடன் பாடிய வீடியோவை வெளியிட்ட கேரள நர்ஸின் தந்தை
`நீதி கிடைக்கும்வரையில் ஓய மாட்டேன்!’ - மகளுடன் பாடிய வீடியோவை வெளியிட்ட கேரள நர்ஸின் தந்தை

கேரளாவில் மர்மமான முறையில் உயிரிழந்த அனலியா என்ற செவிலியரின் கொலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கிடைத்த 18 பக்க லெட்டர்  வைத்து அந்தக் கொலை குறித்து விரிவான விசாரணைக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அவருடைய தந்தை  ஹூய்ஜென்ஸ் பாரக்கல் (HuygensParakkal.) மகளுடன் திருமணத்தில் மேடையேறி வாழ்த்து மடல் பாடி கண்ணீருடன் பிரியா விடைக் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.  

கேரளாவைச் சேர்ந்தவர் அனலியா..பி.எஸ்ஸி படித்த இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி மாயமானதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அவருடைய கணவர் ஜஸ்டின். அந்தப் புகாரையடுத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் வடகீகாரா காவல் பிரிவுக்கு  உட்பட்ட பெரியார் ஆற்றில் பிணமாக இருந்த அனலியாவை மீட்டனர். இந்த நிலையில் அனலியா இறப்புச் செய்தியைக் கேட்ட சவுதியில் இருந்த அவருடைய தந்தை, ஹூய்ஜென்ஸ் (HuygensParakkal.) கேரளா வந்தார். இறுதிச் சடங்கில் பங்கேற்றவருக்கு சில சந்தேகங்கங்கள் அவருக்கு எழுந்துள்ளன. 'பெங்களுருக்குச் செல்ல திரிச்சூர் ரயில்  நிலையம் வந்த அனலியா எப்படி எதிர்ப்பகுதி இடத்தில் இறந்து கிடந்திருப்பார்' என்ற சந்தேகம் அவருக்கு வலுத்துள்ளது. இதுதொடர்பாகப் போலீஸாரிடம் புகார் தெரிவித்தபோது, அதற்கு போலீஸார்  'அவருடைய கணவர் வீட்டாரால் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் முடித்துள்ளனர்.

இந்த நிலையில், அனலியாவின் டைரியும் கிடைத்துள்ளது. அந்த டைரியில் பல கைகளில் ஒரு பெண்ணை சித்ரவதை செய்வது போன்றும், கண்ணீரோடு ஒருபெண் பயந்தவாறும் கடிதம் எழுதுவது போன்றும் அதில் வரையப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி 18 பக்க லெட்டரும் கிடைத்துள்ளது. அந்த லெட்டரில் அனலியா அவருடைய அழகான கனவுகளை கண்ணீர்மல்க  கரையவிட்டுள்ளார்... 'திருமணம் முடிந்து நல்ல வேலை, நல்ல சம்பளம், வீடு கார் என அழகான வாழ்க்கை வாழ தாம் எண்ணியிருந்ததாகக் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடைய கணவர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து அவரை நீக்கிய நிலையில், செவிலியர் பணியை தம்மையும் உதறும்படி அவருடைய கணவர் சித்ரவதை செய்ததாகக் கூறியுள்ளார். வேலையைக் கைவிட்டு கேரளா வந்த அனலியாவுக்கு கருத்தரிப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், குழந்தை பிறந்தால் பிரச்னை சரியாகிவிடும் என்று  நம்பியவருக்கு மேலும், அவரை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவருடைய மாமியாரும் கணவரும் சித்ரவதை செய்துள்ளனர். தமக்குக் கணவர் வேண்டாம் என்றாலும் இந்தக் குழந்தைக்கு தந்தையின்  அன்பு தேவையாகிறது என்பதாலேயே அனைத்தையும் தாம் பொருத்துக்கொண்டதாகவும் எழுதியுள்ளார்.  

அதே போன்று அனலியா இறப்பதற்கு முன்பு அவருடைய சகோதருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் தாம் எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம். அப்படியான கொடூரத்தை தன் கணவரால் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், தமக்கு என்ன நேர்ந்தாலும் ஜஸ்டின் குடும்பத்தார் தான் காரணம் என எழுதியுள்ளார். இந்த லெட்டர், டைரி மற்றும் குறுஞ்செய்தியை அகியவற்றை அவருடைய தந்தை  ஹூய்ஜென்ஸ் (Huygens) முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து முறையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தக் கொலையை விசாரிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

தன்னுடைய மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என  சவுதி அரேபியாவில் தான் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு கண்ணீருடன் கேரளாவில் தங்கியுள்ளார் அனலியாவின் தந்தை ஹூய்ஜென்ஸ். அவருடைய சாவுக்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தாமல் ஓயமாட்டேன்  "justice for  annaliya " என்ற உறுதியான  நிலைப்பாடுடைய வாசகங்களை அடங்கிய தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அனலியாவின் தந்தைக்கு ஆதரவு சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது. 

இந்தநிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த மகள் அனலியாவின் திருமணத்தில் மகளுடன் சேர்ந்து திருமண மேடையில் பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார். மகளும் தந்தையும் சேர்ந்து பாடும் அந்த வீடியோவை, ஹூயுஜென்ஸ் தற்போது சமூக வலைதளங்களில்  வெளியிட்டுள்ளார். மகளைவிட்டுப் பிரியப் போகிறோம் என்ற வருத்தம் கலந்த அவருடைய  குரலோடு கண்ணீர் துளிகளுடன் அந்த பாடல் முடிகிறது. அந்த வீடியோவை பார்ப்போரின் மனதை உருக்கும் வகையில் உள்ளது.