Published:Updated:

கொடநாடு விவகாரம்... ‘ராணி’ வாய்திறந்தால் மர்மக்கோட்டை கதவு திறக்கும்?

கொடநாடு விவகாரம்... ‘ராணி’ வாய்திறந்தால் மர்மக்கோட்டை கதவு திறக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
News
கொடநாடு விவகாரம்... ‘ராணி’ வாய்திறந்தால் மர்மக்கோட்டை கதவு திறக்கும்?

கொடநாடு விவகாரம்... ‘ராணி’ வாய்திறந்தால் மர்மக்கோட்டை கதவு திறக்கும்?

கொடநாடு விவகாரம், தமிழக அரசியலில் தொடர் சூறாவளியாகச் சுழன்று வருகிறது. இதில் புதிய திருப்பமாக, பங்களாவுக்குள் புகுந்து கொள்ளையடிக்க கனகராஜ் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது உள்ளிட்ட மேலும் அதிர்ச்சியூட்டும் பல பின்னணித் தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

முதலில், சின்னதாக ஒரு ஃபிளாஷ்பேக்... 2016 பிப்ரவரி 10-ம் தேதி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 14 ஜோடிகளுக்கு ஜெயலலிதா தலைமையில் திருமணம் நடைபெற்றது. அந்த மணமகள்களில் ஒருவர், போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அறை உட்பட சகல இடங்களிலும் சகஜமாக வலம்வந்த ராணி. தன் பிரதானப் பணிப்பெண்ணான இந்த ராணியை, ‘என் அன்புக்குப் பாத்திரமானவர்’ என்று அந்த மேடையிலேயே புகழ்ந்துரைத்தார் ஜெயலலிதா!

இனி விஷயத்துக்கு வருவோம்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், ஷயானின் மனைவி, குழந்தை மற்றும் கொடநாடு எஸ்டேட் சி.சி.டி.வி கண்காணிப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். “எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படியே, கொடநாடு பங்களாவில் ஆவணங்களைத் திருடுகிறோம்” என்று தங்களிடம் கனகராஜ் கூறியதாகக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஷயான், வாளையார் மனோஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கொடநாடு விவகாரம்... ‘ராணி’ வாய்திறந்தால் மர்மக்கோட்டை கதவு திறக்கும்?

இதைப் பற்றி ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்தில் இருந்த ஒருவர் நம்மிடம் பேசியபோது, “கார் ஓட்டுநர் கனகராஜ், முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடிக்கு அருகில் உள்ள ஊரைச் சேர்ந்தவர். தன் அண்ணன் தனபால், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பதால், எடப்பாடி பழனிசாமி மூலமாகவே வேதா இல்லத்தில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ளார், கனகராஜ். சசிகலாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விடுமுறை எடுக்கும் சமயங்களில் அவருக்கும் கார் ஓட்டியிருக்கிறார். அந்த வகையில் ஜெயலலிதாவின் பணிப்பெண் ராணியின் அறிமுகம் கிடைத்தது. வேதா இல்லத்துப் பணியாளர்களில் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமானவர் ராணி. ஜெயலலிதாவின் அறைக்குள் செல்லும் உரிமை பெற்ற இருவரில் ஒருவர் சசிகலா, இன்னொருவர் ராணி. அந்த அளவுக்கு ராணி மீதும் மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்த ஜெயலலிதா, ராணியின் அப்பா தங்கவேலை சிறுதாவூர் பங்களாவில் காவலராகப் பணியமர்த்தினார்.

தனக்குப் பிடித்தமான முட்டைப் பரோட்டாவும், புள்ளி வாழைப்பழமும் வேண்டும் என்று ஜெயலலிதாவிடமிருந்து அடிக்கடி உத்தரவு வரும். அதை வாங்குவதற்கு ராணியும் கனகராஜும்தான் காரில் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் முக்கிய ஆவணங்கள், வி.ஐ.பி-க்கள் தரும் விலையுயர்ந்த பரிசுப்பொருள்கள் போன்றவற்றை போயஸ் கார்டனிலிருந்து சிறுதாவூர் பங்களாவுக்குக் கொண்டுசெல்லும் பணியையும் இவர்கள்தான் செய்துள்ளனர். ஆனால், ராணி மட்டுமே ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று பொருள்களை வைத்துவிட்டு வருவார்.

ஒருகட்டத்தில் ஜெயலலிதா, சிறுதாவூர் செல்வதைக் குறைத்துக்கொண்டு கொடநாட்டுக்கு அடிக்கடி விஜயம் செய்ய ஆரம்பித்தார். அப்போது, சிறுதாவூரில் இருந்த பல்வேறு அதிமுக்கிய ஆவணங்கள், பென் டிரைவ்கள், ஹார்டு டிஸ்க்குகள், விலை உயர்ந்த பொருள்கள் ஆகியவற்றையும் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு ராணி கொண்டுச் சென்றுள்ளார். அப்போது கனகராஜ் மற்றும் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் கூடவே சென்றுள்ளனர். ஜெயலிதாவின் பிரத்யேக அறையில், அந்தப் பொருள்களைக் கொண்டுபோய் ராணி வைத்துள்ளார். அறையின் வாசல் வரை பொருள்களை எடுத்துக்கொண்டுபோய் கொடுத்தவர் கனகராஜ்.

போயஸ் கார்டனில், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சில சொத்துகளின் ஆவணங்கள் மட்டுமே இருந்துள்ளன. கட்சிப் பெயரிலும், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களிலும் வாங்கப்பட்ட சொத்துகளின் ஆவணங்கள் சிறுதாவூரில் இருந்துள்ளன. அவற்றையும் கொடநாட்டுக்குக் கொண்டுபோய் வைப்பதில், ராணியுடன் சேர்ந்து கனகராஜும் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இந்த நிலையில்தான், ஜெயலலிதா அன்பாகத் தனக்கு வழங்கிய சில நகைகளை, கனகராஜிடம் கொடுத்து விற்றுத்தருமாறு ராணி கூறியுள்ளார். அவற்றை கனகராஜ் விற்றுத்தந்துள்ளார். இதையடுத்து, இருவர் குறித்தும் போயஸ் கார்டனில் சில சர்ச்சைகள் எழவே, கனகராஜ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தவரை, ராணிக்கும் கனகராஜுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இருந்ததாகவும் தெரியவில்லை” என்றவர், தொடர்ந்தார்.

“ஜெயலலிதாவின் 99 அறைகள் கொண்ட கொடநாடு பங்களாவில், அவரது அறையைக் கண்டுபிடித்து நுழைந்து, அவ்வளவு இருட்டிலும் துல்லியமாகக் குறிப்பிட்ட டிராயர்களைத் திறந்து, ஆவணங்களைத் தேடி எடுத்திருக்கிறார் கனகராஜ். அப்படியென்றால் அந்த ஆவணங்களை அங்கு வைத்தவர்கள் மட்டுமே அதுபற்றிய நுட்பமானத் தகவல்களை கனகராஜுக்கு சொல்லியிருக்கக் கூடும். அந்த வகையில், ராணியிடம் அவர் தகவல்களைப் பெற்றிருக்கலாம். அல்லது அந்த அறைகளின் வாசல் வரை சென்றவர் என்கிற வகையில், ஏற்கெனவே அறைகளைப் பற்றியும் ஆவணங்கள் வைக்கப்பட்ட இடம் குறித்தும் எப்படியோ அவர் தெரிந்துகொண்டிருக்கலாம். இதெல்லாம் தெரிந்துதான், கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்த, கனகராஜைத் தேர்வுசெய்துள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, ‘கொள்ளையில் ஈடுபட்டபோது ஜெயலலிதாவின் அறையில் இருந்த டிராயர்களில் ஆவணங்களைத் தேடினார் கனகராஜ்’ என்று ஷயான் இப்போது கூறியுள்ளார்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கொடநாடு விவகாரம்... ‘ராணி’ வாய்திறந்தால் மர்மக்கோட்டை கதவு திறக்கும்?

போயஸ் கார்டனில் இருந்த இன்னும் சிலர், ‘‘2016-ம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட சில அமைச்சர்கள்மீது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, ஜெயலலிதா விசாரணை நடத்தினார். அவர்களிடமிருந்து சில ஆவணங்களையும் ஜெயலலிதா கைப்பற்றினார் என்ற தகவல் அப்போது உலா வந்தது. அந்த ஆவணங்களுடன், கட்சிக்காக வாங்கிய சொத்துகள், கணக்கில் வராத சொத்துகள், ஜெயலலிதா வீட்டில் பணியாற்றியவர்களின் பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பான ஆவணங்களும், ஜெயலலிதாவுக்குப் பரிசுகளாக வந்த வைரநகைகளும், தங்கமோதிரங்களும் அங்கு இருந்தன. அவற்றின் விவரம் சசிகலா, ராணி, கனகராஜ் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். அவர்களைத் தவிர்த்து, அந்த பங்களாவின் மொத்த உள்கட்டமைப்பையும் அறிந்த இன்னொரு நபர், சஜீவன். கொடநாடு எஸ்டேட் பங்களாவில் மரவேலைகள் செய்த சஜீவன், ஜெயலலிதாவையும், சசிகலாவையும் நினைத்த நேரத்தில் சந்திக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்குப் பெற்றவர். அவர் மூலமாகவே, கனகராஜுக்கு ஷயான் உள்ளிட்ட கேரளத்துக் காரர்களின் தொடர்பு கிடைத்திருக்கலாம்” என்றார்கள்.

ஆனால், தனக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சஜீவன் மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ராணி வாய்திறக்கும் பட்சத்தில் மர்மக்கோட்டையின் ஏதாவது ஒரு கதவாவது திறக்கக்கூடும்.

இதற்கிடையில், கொடநாடு விவகாரத்தில் காவல்துறையில் புகார் அளித்த காவலாளி கிருஷ்ணபகதூர் தரப்பு, இப்போது சசிகலா தரப்பிடம் தஞ்சம் அடைந்துள்ளதாம். விரைவில் கிருஷ்ணபகதூரை வைத்து சசிகலா தரப்பு இந்த வழக்கில் உள்ளே நுழையும் திட்டத்தில் உள்ளது என்கிறார்கள்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: ஆ.முத்துக்குமார்

கொடநாடு விவகாரம்... ‘ராணி’ வாய்திறந்தால் மர்மக்கோட்டை கதவு திறக்கும்?

ராணி எங்கே?

தி
ண்டுக்கல் அருகே உள்ள கோவில்பட்டி இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியின் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், சிறுதாவூர் பங்களாவில் தோட்ட வேலைக்கு இந்திராணியை சிபாரிசு செய்திருக்கிறார். இந்திராணிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். குடும்பத்துடன் சிறுதாவூர் தோட்டத்திலேயே தங்கி வேலை செய்துவந்தார் இந்திராணி. இவரின் மூத்த மகள்தான் ராணி. தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் ராணி வசிக்கிறார் என்று சொல்லப்பட, அவரைத் தேடி அங்கு சென்றோம். அம்மா இந்திராணி மட்டும்தான் அங்கே இருந்தார். “ராணிக்கும் கொடநாட்டில் நடந்த விவகாரங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ராணிக்குத் திருமணம் ஆனதும் ஜெயலலிதாவிடமிருந்து விலகிவந்துவிட்டோம். இப்போது என் மகள், சொந்தக் கிராமத்துக்குப் போயிருக்கிறாள். தற்போது அவளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நான்கு வருடங்களுக்கு முன்புதான் இந்த வீட்டை என் மகள் வாங்கிக்கொடுத்தாள்” என்றார்.

ராணியிடம் பேசுவதற்காக கோவில்பட்டி இடையப்பட்டி கிராமத்துக்குச் சென்றோம். அவரது வீடு பூட்டிக்கிடந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, “இங்கேதான் இருந்தாங்க. ஒரு வாரத்துக்கும் மேல வீடு பூட்டிக்கிடக்குது. என்னாச்சுன்னு தெரியல. ஊர்ல பணம் வட்டிக்கு விட்ருக்காங்க... மத்தபடி அவங்களைப் பத்தி வேற எதுவும் தெரியாதுங்க” என்றார்கள்.

- பா.ஜெயவேல்