Published:Updated:

புழல் சிறைக்குள் என்ன செய்கிறார் தஷ்வந்த்?

புழல் சிறைக்குள் என்ன செய்கிறார் தஷ்வந்த்?
பிரீமியம் ஸ்டோரி
புழல் சிறைக்குள் என்ன செய்கிறார் தஷ்வந்த்?

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

புழல் சிறைக்குள் என்ன செய்கிறார் தஷ்வந்த்?

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
புழல் சிறைக்குள் என்ன செய்கிறார் தஷ்வந்த்?
பிரீமியம் ஸ்டோரி
புழல் சிறைக்குள் என்ன செய்கிறார் தஷ்வந்த்?

மூகத்தில் சிலர் செய்யும் குற்றங்களுக்காக நீதிமன்றம் விதிக்கும் சிறைத்தண்டனை, அந்தக் குற்றவாளிகளைத் திருத்தியிருக்கிறது. சிலரை இன்னும் கொடும் குற்றவாளிகளாக ஆக்கிவிடுகிறது. தூக்குத்தண்டனை கைதிகளுக்கோ நிலைமை வேறுமாதிரி. சிலர் முற்றும் துறந்த மனநிலையில் இருப்பார்கள். சிலரோ, கடும் மனஉளைச்சலில் சிக்கித்தவிப்பார்கள். தற்போது தமிழகத்தில் தூக்குக் கயிறை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரே குற்றவாளி தஷ்வந்த். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தஷ்வந்த் எப்படி இருக்கிறார்?

“யார் இந்த தஷ்வந்த்?” என்று கேட்பவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். சென்னையில் தன் வீட்டுக்கு எதிரே குடியிருந்த தம்பதியின் ஆறு வயது பெண் குழந்தையான ஹாசினியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்து தீயிட்டு எரித்த வழக்கில் தண்டனை பெற்றவர்தான் இந்த இளைஞர். 

ஹாசினியைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தன் தாயையும் கொன்றுவிட்டு, தலைமறைவானார். பிறகு அவரை மும்பையில் கைதுசெய்தபோது, போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். மீண்டும் அவரைப் பிடித்த போலீஸார், புழல் சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் தஷ்வந்துக்கு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தாயைக் கொன்ற வழக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. தற்போது புழல் சிறையில் இருக்கிறார் தஷ்வந்த்.

புழல் சிறைக்குள் என்ன செய்கிறார் தஷ்வந்த்?

புழல் சிறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “தூக்குத்தண்டனைக் கைதிகளுக்கென பிரத்யேகமாக அறைகள் உள்ளன. ஆனால், தஷ்வந்த் ஏற்கெனவே போலீஸ் பிடியிலிருந்து தப்பிச்சென்றவர் என்பதால், பிரச்னைகளில் ஈடுபடும் கைதிகளை அடைக்கும் செல்லுலார் அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தூக்குத் தண்டனை கைதி என்பதால், ‘ஏ’ கிளாஸ் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு தஷ்வந்துக்கும் வழங்கப்படுகிறது. காலை 6 மணிக்கு எழுந்துவிடும் தஷ்வந்த், நடைப்பயிற்சி முடித்துவிட்டு, இறகுப்பந்து ஆடுவது வழக்கம். தூக்குத்தண்டனைக் கைதியை ஆரோக்கியமாகப் பாதுகாக்க வேண்டுமென்பதால், தினமும் காலை 8 மணிக்கு அவருக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்கப்படுகிறது. குளித்து முடித்தவுடன் இட்லி, தோசை எனக் காலை சிற்றுண்டி சாப்பிடுகிறார். பின்னர், சிறை வளாகத்துக்குள் அவர் நடமாட அனுமதிக்கப்படுகிறார். மதிய உணவுக்கு, உரிய நேரத்தில் வந்துவிடுகிறார். மதிய உணவு முடிந்தவுடன் குட்டித் தூக்கம். பின்னர் நடைப்பயிற்சி. மாலை 6 மணிக்கு செல்லுலார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

தஷ்வந்துக்கு சிறைக்குள் பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். அவர்களிடம் பேசும்போதெல்லாம், ‘என் தாயை நான் கொல்லவில்லை. உண்மையான குற்றவாளியைத் தப்பிக்கவைத்துவிட்டு என்னை இந்த வழக்கில் போலீஸார் சிக்கவைத்து விட்டனர்’ என்று புலம்புகிறார். தஷ்வந்தின் ஒரே ஆதரவாக இருந்தவர், அவரின் தாய்தான். அவரையும் அவர் கொன்றுவிட்டதால், இப்போது தஷ்வந்தின் தாத்தாவும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவரின் அக்காவும்தான் அவருக்கான வழக்கறிஞர்கள் கட்டணம், மேல்முறையீடு செய்தல் போன்ற சட்டரீதியான செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். சமீபகாலமாக தஷ்வந்தின் தந்தை, சிறைக்குள் அவரைச் சந்தித்து வருகிறார். தூக்குத்தண்டனையை ஒழிக்கப் போராடும் டெல்லி இளம்பெண் ஒருவர், சமீபத்தில் தஷ்வந்த்தைச் சந்தித்துவிட்டுச் சென்றுள்ளார். அவரது முயற்சியின் மூலம் தன்னை விடுவிக்க முடியும் என்றும் தஷ்வந்த் நம்புகிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி வாயிலாக எம்.சி.ஏ பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார் தஷ்வந்த். தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தஷ்வந்த், தண்டனை உறுதிசெய்யப்பட்டால், ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்ப முடிவுசெய்துள்ளார். ஜனாதிபதியும் கருணை காட்ட மறுத்தால், தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்” என்றனர்.

“சிறைக்குள் தஷ்வந்த் மனநிலை என்னவாக இருக்கிறது?” என்றோம். “சிறுவயது முதலே ரொம்பவும் ‘ரிசர்வ்’ டைப்பாகவே வளர்க்கப் பட்டதால், யாருடனும் ஒட்டி உறவாடுவதில்லை. எப்போதும் கம்ப்யூட்டர், செல்போன் என இணையத்திலேயே பொழுதைக் கழித்திருக்கிறார். ஆபாசப் படங்களை அதிகமாகப் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. அப்படிப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், அவர் இருந்த அறைக்குள் ஹாசினி வந்ததால், இக்கொடூரத்தில் ஈடுபட்டிருக்கிறார். நிச்சயமாக இது மனப்பிறழ்வுதான். சிறைக்குள் சிலர் ஹாசினி குறித்து கேட்கும்போது மட்டும் தஷ்வந்த் டென்ஷனாகி விடுகிறார்” என்றனர்.

செய்த குற்றத்தை உணர்வதற்கான நேரத்தை தஷ்வந்துக்கு காலம் வழங்கியிருக்கிறது. அவரை மன்னிக்க வேண்டுமா, தண்டிக்க வேண்டுமா என்பதை நீதிமன்றமும் ஹாசினியின் ஆன்மாவும் தீர்மானிக்கட்டும்.

- ந.பொன்குமரகுருபரன்