Published:Updated:

சென்னையில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக் கொலை

சென்னையில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக் கொலை
சென்னையில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக் கொலை
சென்னையில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக் கொலை

சென்னை: அடாவடியாக நடந்து கொண்டவர்களை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை கைலாய முதலி தெரு பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவரின் 4 வயது மகன் பிரதீப், நேற்றிரவு 7 மணி அளவில் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பிரதீப் மீது மோதியதில் அவன் பலத்த காயம் அடைந்தான்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் அந்த வாலிபரே பிரதீப்பை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார். ரூ.2 ஆயிரம் மருத்துவ செலவையும் அவரே கொடுத்துள்ளார். ஆனால், அதே பகுதியை சேர்ந்த அந்தோணி, சேகர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் மேலும் ரூ.1000 தந்தால்தான் நீ இங்கிருந்து செல்ல முடியும் என்று கூறியதாக தெரிகிறது.

அப்போது, அந்த வழியாக வந்த அதே பகுதியில் வசித்து வரும் அரசு பஸ் டிரைவர் செந்தில், அந்தோணி, சேகர் ஆகியோரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து 2 பேரும் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் செந்திலை அழைத்து விசாரித்துவிட்டு அனுப்பி விட்டனர். இதன் பிறகு செந்தில் தனது வீட்டுக்கு சென்று தூங்கினார்.

இந்த நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று செந்திலின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியது. சத்தம் கேட்டு எழுந்த செந்திலின் தந்தை தயாளன் நீங்கள் யார்? என்று கதவை திறக்காமல் வீட்டுக்குள் இருந்தபடியே கேட்டார். அதற்கு வெளியில் நின்றவர்கள், நாங்கள் போலீஸ் என்று கூறிக்கொண்டே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். தயாளனை தள்ளிவிட்டு விட்டு செந்திலை சரமாரியாக வெட்டினர்.
 

##~~##
இதில் வீட்டுக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடி துடித்து பலியானார். தனது கண் எதிரிலேயே மகன் துடிக்க துடிக்க வெட்டிக் கொல்லப்பட்டதை பார்த்து தயாளன் கதறி அழுதார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். சிறுவன் பிரதீப் விபத்தில் சிக்கியது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாகவே செந்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
 
இது தொடர்பாக அந்தோணி, சேகர், ஏழுமலை, பாலு, சேனி ஆகிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையுண்ட செந்திலின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடுகள் நடை பெற்று வந்த நிலையில் இவர் படுகொலை செய்யப்பட்டது அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.